நீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...?’’

‘‘எங்கள் தோட்டத்தில் பார்த்தீனியம் களைச்செடிகள் அதிகமாக உள்ளன. இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வழிசொல்லுங்கள்?’’
கே.சிவகுமார், அந்தியூர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி மது.ராமகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
‘‘பார்த்தீனியம் என்ற இந்தக் களைச்செடியைப் பற்றி கவலைப்படுவதைவிட, அதை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுத்த முடியுமா எனப் பார்க்கலாமே. நான், பார்த்தினீயத்தை, மண்புழுவுக்கு ஏற்ற சிறந்த உணவாகப் பார்க்கிறேன். முதலில் மண்புழுக்களுக்கு ஏற்றபடி பார்த்தீனியத்தைப் பக்குவப்படுத்த வேண்டும். அதற்கு பார்த்தீனியத்தை வேரோடு பிடுங்கி நிழலான ஓரிடத்தில் ஒரு குவியலாகப் போட வேண்டும். சாணத்தைக் கரைத்து அதன் மீது தெளிக்க வேண்டும். தென்னஞ்சோகை போன்றவற்றால் அதை மூடி வைக்க வேண்டும். அந்தக் குவியல் காய்ந்து போகாமல் இருக்க, அவ்வப்போது தண்ணீர் தெளித்து வர வேண்டும். 30 மற்றும் 45-ம் நாட்களில் அந்தக் குவியலை ஓரிருமுறை புரட்டிப்போட்டால் போதும். 90 நாட்களில் பார்த்தீனியம் மட்கி, அங்கு ஏராளமான மண்புழுக்கள், சத்தான மண்புழு உரத்தை உற்பத்திச் செய்திருக்கும். 15 ஆண்டுகளாக இதைத்தான் எனது ‘சந்தோஷ் பண்ணை’யில் செய்துகொண்டிருக்கிறேன்.
அடுத்து, இயற்கைச் சமன்பாடு எல்லை தாண்டி கெடும்போது சமநிலையை உண்டாக்க, இயற்கை எப்போதும் ஒரு வழி வைத்திருக்கும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. உதாரணமாக, கொய்யாவிலும், செம்பருத்திச் செடியிலும் கள்ளிப்பூச்சி என்னும் மாவுப்பூச்சி இருந்துகொண்டே இருக்கும். இதன் தாக்குதல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிக அதிகமாக இருந்தது. இதனால், பப்பாளி, மல்பெரி, குதிரைமசால்... போன்ற பயிர்களிலும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது முக்கிய சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது. கள்ளிப்பூச்சி என்னும் இந்த மாவுப்பூச்சி, பார்த்தீனியத்தையும் விட்டு வைக்கவில்லை. மாவுப்பூச்சித் தாக்குதல் ஏற்பட்ட பகுதிகளில் பார்த்தீனியம் கட்டுக்குள் வந்துவிட்டது. என்னுடைய அனுபவத்தில் இதை உணர்ந்துள்ளேன்.

இன்னும் கூட, சில பகுதிகளில் பார்த்தீனியம் உள்ளது. இதற்கு ரசாயன களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி சிலர் பார்த்தீனியத்தை அழிக்கிறார்கள். இது தேவையற்ற வேலை. இயற்கைக் களைக்கொல்லியை, ஒரு விவசாயி தானே தயாரித்து, பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்த முடியும். மா, கொய்யா, தென்னை.... போன்ற மரப்பயிர்களிலும், பயிர் செய்யப்படாத காலி நிலத்திலும் இயற்கைக் களைக் கொல்லியை எளிதில் பயன்படுத்தலாம். இதற்கு எளிதாக நம் ஊரில் கிடைக்கக் கூடிய இடுபொருட்களையே மூலப் பொருட்களாகப் பயன்படுத்த முடியும். அதாவது, சுண்ணாம்பு - 3 கிலோ, தண்ணீர் - 10 லிட்டர், உப்பு - 4 கிலோ, மாட்டுச்சிறுநீர் - 3 லிட்டர், வேப்பெண்ணெய் - 2 லிட்டர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் சுண்ணாம்பைக் கலக்கி 10 மணி நேரம் வைத்திருக்கவும் தெளிந்த பிறகு, 7 லிட்டர் சுண்ணாம்பு நீருடன் உப்பைக் கரைக்கவும். இதில் மாட்டுச்சிறுநீரைச் சேர்க்கவும். இந்தக் கரைசலை வடிகட்டி இத்துடன் வேப்பெண்ணெயைக் கலக்கவும்.
10 நிமிடங்களில் மேலே ஆடை போல படியும். அதை நீக்கிவிட்டு, களைகள் மீது தெளித்தால், நன்கு கட்டுப்படும் (நெல் மற்றும் சிறுதானியங்கள், காய்கறிகள் போன்ற பயிர்களுக்கிடையே முளைத்துள்ள களைகளை அகற்ற இதைப் பயன்படுத்தக் கூடாது. ஒரு வேளை இந்தப் பயிர்களுக்கு, கரைசலைத் தெளிக்க விரும்பினால், பார்த்தீனியத்தின் மீது மட்டும் படும்படியாகத் தெளிக்க வேண்டும்.’’
தொடர்புக்கு, செல்போன்: 94424-16543.

‘‘மூலிகைப் பயிர்களுக்கு விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது?’’
கே.மணிமாறன், திருச்சி.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மூலிகைப் பயிர்கள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். ராஜாமணி பதில் சொல்கிறார்.
‘‘மூலிகைப் பயிர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளின் மகத்துவம், மக்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், மூலிகை மருந்துகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் கோயம்புத்தூர், ஆர்ய வைத்திய மருந்து நிறுவனமும் இணைந்து மருத்துவக் குணமுள்ள மூலிகைகளைப் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அண்மையில் ஏற்படுத்திக் கொண்டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மூலிகைகளைப் பற்றிய ஆய்வு, கல்வி மற்றும் அபிவிருத்திக்கு இருதரப்பும் முழுமையாக ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் மூலிகைத் தாவரங்களின் உற்பத்தித் தொடர்பான மற்றும் பயிர் மேலாண்மைத் தொழில்நுட்பங்களை பல்கலைக்கழகம் வழங்கும். இந்த ஒப்பந்தம் மூலம் மாணவர்கள், விவசாயிகள், ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மூலிகைப் பயிர் சாகுபடி குறித்து பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் மாதம்தோறும், ‘அஸ்வகந்தா’ என்ற மூலிகை மட்டும் 30 டன் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் அஸ்வகந்தா பயிர் செய்யும் சூழ்நிலை இருந்தாலும், இதையாரும் சாகுபடி செய்வதில்லை. இதனால், 30 டன் அஸ்வகந்தாவும், மத்திய பிரதேச மாநிலத்திலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆயுர் வேத மருந்து தயாரிக்க அஸ்வகந்தா உட்பட 30 வகையான மூலிகைகள் தேவைப்படுகின்றன. இதை 20 முதல் 30 பேர் கொண்ட விவசாயிகள் குழுக்கள் மூலம் சாகுபடி செய்து, அதை ஆர்ய வைத்திய மருந்து நிறுவனத்திடம் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். மூலிகை சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு, எங்கள் துறையில் உரிய ஆலோசனை கொடுத்து வருகிறோம்.’’
தொடர்புக்கு, தொலைபேசி: 0422-6611365.

‘‘ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும். இந்த இன மாடுகள் தினமும் 40 லிட்டர் பால் கறக்கும்’ என்கிறார்கள். இது உண்மையா..?’’
குரு, சென்னை.
ஆந்திர மாநிலம், ஓங்கோல் மாவட்டத்தில் கால்நடை மற்றும் விவசாய வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் ‘எபேர்ட்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் ராவ் பதில் சொல்கிறார்.
“ஆந்திர மாநிலத்தின் சொத்து” என்று கூட ஓங்கோல் மாடுகளைச் சொல்லலாம். ஓங்கோல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் ‘ஓங்கோல்’ மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், திருத்தணி, ஆரம்பாக்கம்... போன்ற சில பகுதிகளிலும் இந்த வகை மாடுகள் உள்ளன. இவை பாலுக்காக இல்லாமல், பெரும்பாலும் விவசாய வேலைகளுக்காகத்தான் வளர்க்கப்படுகின்றன. ஆனாலும், ஒரு மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு எட்டு லிட்டர் அளவுக்கு பால் கிடைக்கும்.

பாலில் கொழுப்பின் அளவும் அதிகமாக இருக்கும். இவை அதிக நோய் எதிர்ப்புத்திறன் கொண்டவை. அதோடு கடுமையான வெப்பத்தையும் தாங்கும் தன்மை கொண்டவை. ஓங்கோல் காளைகளை டென்மார்க் உள்பட பல நாடுகள் இன்றளவும் இறக்குமதி செய்து வருகின்றன. இந்தக் காளைகளுடன் அவர்களது நாட்டுப் பசுவை இணைத்து பல புதிய இனங்களை உருவாக்கி வருகிறார்கள். இப்படி உருவாகும் மாடுகள்தான் அதிக பால் உற்பத்தியைக் கொடுக்கின்றன.
நம் நாட்டில் உள்ள ஓங்கோல் மாடுகள் 40 லிட்டர் கொடுப்பதில்லை. எட்டு லிட்டர் அளவுக்கு பால் கொடுக்கும் திறன் கொண்ட மாடுகள், 30 ஆயிரம் ரூபாய் முதல், மாட்டின் கன்று ஈனும் திறனைப் பொறுத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஓங்கோல் மற்றும் நெல்லூர் மாவட்ட கிராமங்களில் இந்த இன மாடுகள் கிடைக்கும்.”
புறா பாண்டி
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.
படங்கள்: தி.விஜய், வீ.சக்தி அருணகிரி