Published:Updated:

என் செல்லமே...

செல்லப் பிராணிகள் முதல் செல்வப் பிராணிகள் வரை...

நாட்டு நாய்களின் ராஜா... ‘ராஜபாளையம்’!

செல்லப்பிராணிகள் என்றாலே, நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது நாய்களாகத்தான் இருக்கும். மிருகங்களில் மனிதனுக்கு நெருங்கிய தோழனாக இருப்பது நாய்தான். அதேபோல, பாலூட்டிகளில் நன்றி மற்றும் அறிவுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பதும் நாய்தான். ஒரு குழந்தையைப் போல அன்பை, பாசத்தைப் பிரதிபலிக்கும் குணம் கொண்டது, நாய்.

மழலைச்செல்வம் வாய்க்கப்பெறாத பலரும் நாய்களையே குழந்தைகளாகப் பாவித்து வளர்த்து வருவதைப் பார்த்திருப்போம்.

என் செல்லமே...

தவிர தோட்டங்கள், வீடுகளுக்குக் காவலுக்காகவும் நாய்களை வளர்த்து வரும் பழக்கமும் நம்மிடையே உண்டு. இவற்றைத் தாண்டி உயர் ரக நாய்களை கௌரவத்துக்காக வளர்க்கும் பழக்கமும் நகரங்களில் அதிகரித்து வருகிறது. இப்படி வளர்க்கப்படும் நாய்கள் மூலம் கணிசமான வருமானமும் பார்க்க முடியும் என்பதும் உண்மை. நாய்களை வளர்த்து குட்டிகளை விற்பதன் மூலம் பலரும் நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசமூர்த்தி.

தமிழ்நாட்டில் நாய்களுக்குப் பெயர்பெற்ற பகுதி ராஜபாளையம். குறிப்பாக இப்பகுதியின் பிரத்யேக நாட்டு ரக நாய்தான் ‘ராஜபாளையம்’ நாய். இந்த வகை நாய்களை வளர்த்து கணிசமான லாபம் பார்த்து வருகிறார், சீனிவாசமூர்த்தி.

ராஜபாளையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, அய்யனார்சுனை. இங்குள்ள தனது தென்னந்தோப்பில் நாய்ப்பண்ணை அமைத்துள்ளார், சீனிவாசமூர்த்தி. தோட்டத்துக்குள் காலடி வைத்ததுமே கணீர் குரலில் குரைத்து எச்சரிக்கை செய்தன நாய்கள். நாம் தயங்கி நிற்க... நாய்களுக்கு காலை உணவைக் கொடுத்து கூண்டுகளில் அடைத்துவிட்டு நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார், சீனிவாசமூர்த்தி.

“சின்ன வயசுல இருந்தே நாய் வளர்க்குறதுனா ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்டுல எப்பவுமே நாலு நாய்கள் இருக்கும். ஸ்கூல் போயிட்டு வந்ததுமே நாய்கள் கூடதான் விளையாடுவேன். பாடம் படித்த நேரத்தை விட நாய்கள் கூட விளையாடிய நேரம்தான் அதிகம். ஸ்கூல்ல படிக்கிறப்ப இருந்தே வாலிபால் ப்ளேயர். காலேஜ்ல படிக்கிறப்போ மேட்சுக்காக பல மாநிலங்கள் போயிருக்கேன். அப்படிப் போகும்போது என் பேர், ஊரைச் சொல்லி அறிமுகப்படுத்துறப்போ... ராஜபாளையம்ங்கிற பேரைக் கேட்டதுமே, நாய்க்குட்டி கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. அப்படி கேட்ட பலருக்கு விலைக்கு குட்டிகள் வாங்கி கொடுக்க ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல நிறைய நாய் பண்ணைகளைப் பார்த்திருக்கேன். இப்படித்தான் எனக்கும் நாய் வளர்த்து விற்பனை செய்ற ஆசை வந்துச்சு” என்று முன்கதை சொன்ன சீனிவாசமூர்த்தி, தொடர்ந்தார்.

என் செல்லமே...

“ஆரம்பத்துல வெச்சிருந்த ஒரு ராஜபாளையம் நாய், 4 ஆண் குட்டி, 3 பெண் குட்டினு மொத்தம் 7 குட்டி போட்டது. இதுல 2 பெண் குட்டி, 1 ஆண் குட்டி தவிர மற்ற 4 குட்டிகளை, ஒரு குட்டி 2 ஆயிரத்து 500 ரூபாய்னு விற்பனை செய்தேன். அதுக்கப்பறம் அடிக்கடி குட்டிகள் கிடைக்க ஆரம்பிச்சது. ராஜபாளையம் நாய்க்கு அதிக தேவை இருக்குறதால விற்பனைக்கு பிரச்னை இல்லாம இருந்துச்சு. நாய் விற்பனையைக் கேள்விப்பட்டு நாய் வாங்க வந்தவங்க, கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை நாய்களையும் எங்கிட்ட கேட்டாங்க. இந்த வகை நாய்களை வேட்டைக்குப் பயன்படுத்துவாங்க. நிறைய பேர் கேட்டதால, அந்த வகை நாய்களையும் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச குட்டிகள் மூலமாவும் நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது.

இப்போ வேட்டைக்குத் தடை இருக்குறதால கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை நாய்கள் அதிகமா விற்பனையாகுறதில்லை. அதனால, அந்த வகை நாய்களைக் குறைச்சிட்டு ராஜபாளையம் நாய்களை மட்டும் அதிகமா இனவிருத்தி செய்து குட்டிகளை விற்பனை செய்துக்கிட்டு இருக்கேன். நாய்க்குட்டி விற்பனை ஆரம்பிச்சு இப்போ, 18 வருஷம் ஆகிடுச்சு. ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனி கூண்டுகள் அமைச்சிருக்கேன். இப்போ, 12 ஆண் நாய்கள், 12 பெண்நாய்கள்னு மொத்தம் 24 நாய்கள் இருக்கு” என்ற சீனிவாசமூர்த்தி, வளர்ப்பு முறைகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

காலையில் மாமிசம்... மாலையில் பால்!

“தினமும் காலையில் 8 மணியில இருந்து 9 மணிக்குள்ள ஒவ்வொரு நாய்க்கும் 200 கிராம் சாப்பாடு, 200 கிராம் இறைச்சி கலந்து கொடுத்திடுவேன். ஒரு நாளைக்கு மாட்டுக்கறி, ஒரு நாளைக்கு மீன், ஒரு நாளைக்கு ஆட்டுக்கறி, ஒரு நாளைக்கு கோழிக்கறினு மாத்தி மாத்தி கொடுப்பேன். அரிசியை வேக வைக்கிறப்பவே அதோட நல்லா கழுவுன இறைச்சியையும் சேர்த்து வேக வெச்சுடுவேன். எலும்பு கலந்த கறி கொடுக்கிறதால நாய்கள் விரும்பிச் சாப்பிடுது. அதுக்குத் தேவையான கால்சியம் சத்தும் கிடைச்சுடுது. நாய்களுக்கான சாப்பாட்டில் உப்பு சேர்த்தா தோல் நோய் வர வாய்ப்பிருக்குறதால உப்பு சேர்க்கறதில்லை. தினமும் சாயங்காலம் மூன்றரை மணியில இருந்து நாலு மணிக்குள்ள ஒரு நாய்க்கு 200 கிராம் சாதத்துல 200 மில்லி பால் கலந்து ஆற வெச்சு கொடுக்கிறேன். 200 மில்லி பாலுக்கு பதிலா, அவிச்ச முட்டை ஒண்ணை கொடுக்கலாம். எப்பவும் நாய்களுக்கு மதிய சாப்பாடு கொடுக்கிறதில்லை. எப்பவுமே தண்ணி மட்டும் கூண்டுல இருக்குற மாதிரி பாத்துக்குவேன். 

தினமும் நாய்களைக் குளிப்பாட்டுனா, முடி உதிருங்கிறதால வாரம் ஒரு முறை குளிப்பாட்டுவேன். 20 நாட்களுக்கு ஒரு முறை குடற்புழுக்களை நீக்கறதுக்காக 6 சிறியாநங்கை இலை, 6 பெரியாநங்கை இலைகளைக் கசக்கி உருட்டி நாய் வாய்க்குள்ள போட்டு முழுங்க வெச்சிடுவேன். 25 நாட்களுக்கு ஒரு முறை, தண்ணீர்ல யூகலிப்டஸ் தைலம், வேப்பெண்ணெய் கலந்து கால் மூட்டுகள், முதுகு, வால், கழுத்து, வயிறு பகுதிகள்ல அழுத்தி தேய்ச்சு மசாஜ் செய்து விட்டு மறுநாள் குளிப்பாட்டிடுவேன். இதனால உண்ணிகள் வராது. அதோட முடி உதிர்றது மாதிரியான தோல் நோய்களும் வர்றதில்லை. ’டிஸ்டம்பர்’ மற்றும் ’பார்வோ’னு ரெண்டு நோய்கள் நாய்களுக்கு முக்கியமானவை. தலை தொங்கி ஆடிக்கிட்டே, உடலும் நடுங்கினா அது ‘டிஸ்டம்பர்’ நோயின் அறிகுறி. சரியாகச் சாப்பிடாமல் சோம்பலா ஒரே இடத்திலேயே படுத்துக் கிடந்தால் அது ’பார்வோ’ நோய்க்கான அறிகுறி. இந்த அறிகுறிகள் தென்பட்டா உடனே மருத்துவர்கிட்ட காட்டணும். இல்லாட்டி நாய்கள் இறந்துடும்.    

6 மாதங்களுக்கு ஒரு முறை பெண் நாய்கள் பருவத்துக்கு வந்தாலும் வருஷத்துக்கு ஒரு முறைதான் இணை சேர்ப்பேன். சினைபிடித்த 63-ம் நாள் குட்டி போடும். ஒரு நாய் 5 குட்டில இருந்து 7 குட்டி வரை போடும். குட்டிகளுக்கு, பிறந்த ஆறாவது நாள்ல இருந்து காது கேட்க ஆரம்பிக்கும். 12-ம் நாளுக்கு மேல கண் திறக்கும்.

என் செல்லமே...

32-ம் நாள்ல குட்டிகளுக்கு பல் முளைக்கும். அதுக்கு மேல தாய்கிட்ட பால் சுரக்காது. அதுல இருந்து குட்டிகளுக்கு பசும்பால்ல கேழ்வரகு மாவைக் கலந்து கொடுக்க ஆரம்பிச்சசிடுவேன். 40-ம் நாளுக்கு மேல பால்சாதம், தயிர்சாதம்னு கொடுத்துப் பழக்கிடுவேன். இரண்டு மாச வயசுல குட்டிகளை விற்பனை செய்துடுவேன். சில குட்டிகளை நானே வளர்ப்பேன். அப்படி வளர்க்கிற குட்டிகளுக்கு 3 மாச வயசுக்கப்பறம் மாமிசம் கொடுக்க ஆரம்பிச்சுடுவேன்” என்ற சீனிவாசமூர்த்தி நிறைவாக, “என்கிட்ட இருக்குற 12 ஜோடிகள் மூலமா வருஷத்துக்கு 60 குட்டிகளுக்குக் குறையாம கிடைச்சுக்கிட்டு இருக்கு. இரண்டு மாத வயசுல விற்பனை செய்யும்போது... ஆண் குட்டியா இருந்தால் 6 ஆயிரம் ரூபாய்க்கும், பெண் குட்டியா இருந்தால் 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகுது. ஒரு வருஷம் வரைக்கும் வளர்த்து விற்பனை செய்தா கூடுதல் விலை கிடைக்கும்.

60 குட்டிகளுக்கு சராசரி விலையா 4 ஆயிரம் ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் வேலையாள்கூலி, தடுப்பூசி, பராமரிப்புச்செலவு, மருத்துவச்செலவு, உணவுனு பாதி செலவானாலும்... 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்’’ என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.

 தொடர்புக்கு,
சீனிவாசமூர்த்தி,
செல்போன்: 98421-62611

வீட்டுக்கு வீடு நாய் வளர்ப்பு!

என் செல்லமே...

ராஜபாளையம் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் நாய்களை வளர்த்து குட்டி விற்பனை மூலம் வருமானம் பார்த்து வருகிறார்கள். அப்படி இரண்டு பெண் நாய்களை வளர்த்து, அதன் மூலம் தொடர் வருமானம் பார்த்து வருகிறார், ராஜபாளையம், ஆர்.ஆர். நகர் பகுதியிலுள்ள படேல்.

‘‘எங்கிட்ட 2 பெண் நாய்கள் இருக்குது. அதுல ஒண்ணு இப்போ சினையா இருக்குது. இன்னும் ஒரு மாசத்துல குட்டி போட்டுடும். நான், 8 வருஷமா நாய் வளர்த்துக்கிட்டிருக்கேன். என் நண்பர்கிட்ட இருந்து ஒரு பெண் நாய் வாங்கிட்டு வந்தேன். அது 5 குட்டி போட்டது. குட்டிகளை என்ன செய்யுறதுனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தப்போ... எனக்கு குட்டி கொடுத்த நண்பரே அந்த அஞ்சு குட்டிகளையும் ஒருத்தர்கிட்ட 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுக் கொடுத்தார். அதைப்பார்த்துட்டுத்தான் இன்னொரு நாய் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன்.

நான் தனியா இறைச்சி உணவெல்லாம் கொடுக்கிறதில்லை. வீட்டுல என்ன சமைக்கிறோமோ அதைத்தான் நாய்களுக்கும் கொடுக்கிறேன். பால் மட்டும் கொடுப்பேன். இந்த ரெண்டு நாய்கள் மூலமா போன வருஷம் 13 குட்டி கிடைச்சது. ஒரு குட்டி 4 ஆயிரம் ரூபாய்னு 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துட்டேன். கணக்குப் போட்டுப் பார்த்தா அதுல எப்படியும் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம்தான்‘’ என்கிறார், படேல்.

தொடர்புக்கு,
படேல்,
செல்போன்: 99425-34243

சிமெண்ட் தரையில் வளர்ப்பதே சிறந்தது!

நாய்களை வீடுகளில் வளர்க்கும்போது... மொசைக், மார்பிள்ஸ், டைல்ஸ் தரைகளில் வளர்த்தால், கால்கள் வளையும் வாய்ப்புகள் உண்டு. இந்தத் தரைகளில் நாய்கள் நடக்கும் போதும், ஓடும் போதும், வழுக்கி விழுந்து பின்னங்காலில் அடிபடவும் வாய்ப்புகள் உண்டு. மண்தரைகளில் வளர்த்தால், உண்ணிகள் வேகமாகத் தொற்றிக் கொள்ளும். அதனால், நாய்கள் வளர்க்க சிமெண்ட் தரைகளே ஏற்றவை. அதேபோல நாய்களுக்கு நகம் வெட்ட வேண்டியதில்லை. அவை தானாகவே உடைந்து விடும்.  ஆண் நாயோடு இணை சேர்த்த அடுத்த நாளில் இருந்து பெண் நாயை மிகவும் கவனமாகப் பாத்துக் கொள்ள வேண்டும். வேகமாக ஓட விடக்கூடாது. மேடு, பள்ளம், மாடிப்படிகள் ஏற விடக்கூடாது. அவை அதிகமாகக் குரைக்கக்கூடாது. நாய்களுக்கு மிகச் சுலபமாக கரு கலைந்து விடும் வாய்ப்புள்ளதால், தனியாக ஓர் அறையிலோ அல்லது மறைவான இடத்திலோ மற்ற நாய்கள் கண்களில் படாமலோ அடைத்து வைத்தல் நல்லது.

நாய்களை கவனமாக கொஞ்சுங்கள்!

திருநெல்வேலி மாவட்டம், இராமையன்பட்டி, அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியின் இணைப்பேராசிரியர் முனைவர்.குமாரவேல், நாய் வளர்ப்பில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி சொன்ன விஷயங்கள் இங்கே... 

என் செல்லமே...

“நாய் மீது பாசம் வைப்பது நல்ல விஷயம்தான். அதே நேரத்தில் நாயைத் தொட்டு விளையாண்டால், கைகளை உடனே சோப் போட்டு கழுவி விட வேண்டும். நாய்கள் படுக்க தனி இடம் ஒதுக்க வேண்டும். நாய்களை நம்முடன் படுக்க வைப்பது கூடாது.  நாயின் வயிற்றிலுள்ள கொக்கிப்புழு, உருண்டைப்புழு ஆகியவை மலத்தின் வழியே வெளியேறுவதால் மலத்தை யாரும் மிதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்குள் மலம் கழிக்க அனுமதிக்கக் கூடாது. வீட்டுச் சுற்றுப்புறத்தில் நாய்கள் சிறுநீர், மலம் கழித்தால் உடனே அதை அகற்றி விட வேண்டும். இல்லாவிட்டால், அதன் கழிவுகளிலிருந்து தெள்ளுப்பூச்சி என்ற ஒருவகைப் பூச்சி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து விடும். எதிர்பாராதவிதமாக இவை மனிதனின் வயிற்றுக்குள் சென்று விட்டால், மூளை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் கட்டி வளர வாய்ப்புள்ளது.

குட்டி நாய்களைக் கொஞ்சும்போது, அவற்றின் வயிற்றில் உள்ள உருண்டைப்புழுக்களின் முட்டை நம் வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புகள் உண்டு. இதனால், சினைக்கட்டிகள் வரும். தட்பவெப்பநிலை மாறுபாட்டால், நாயின் உடலில் உண்ணிகள் வருவதைத் தடுக்க வாரம் ஒரு முறை நாயைக் குளிப்பாட்ட வேண்டும். நாய்க்கென்று தனி சோப் பயன்படுத்த வேண்டும். நாய்க்கு 3-ம் மாதத்தில் ஒரு வெறிநாய்க்கடி தடுப்பூசியும், ஆண்டுக்கொரு தடுப்பூசியும் தவறாமல் போட வேண்டும். ஒவ்வொரு வகை நாய்க்கும் தடுப்பூசி அட்டவணை தனியாக உண்டு. அதை மருத்துவர் மூலம் தெரிந்து கொண்டு சரியாக போட வேண்டும்’’ என்றார்.

தொடர்புக்கு,
முனைவர்.குமாரவேல்,
செல்போன்: 94436-96504

என் செல்லமே...

அசல் ராஜபாளையத்துக்கான அடையாளம்!  

உடல் முழுவதும் வெள்ளை நிறமாகவும் அடி வயிறு, மூக்கு மற்றும் கண்களைச் சுற்றியுள்ள பகுதி போன்றவை இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். காதுமடல்கள் மடங்கி இருக்கும். கால்கள் நேராகவும், உறுதியாகவும் இருக்கும். வால் பகுதியைத் தடவிப்பார்த்தால், கரும்புகளில் உள்ள கணுக்கள் போன்று இருக்கும். வால், அரிவாள் போன்று வளைந்து நிற்கும். தலை சிறியதாகவும் முகம் ஊசி போன்ற அமைப்பிலும், நெஞ்சுப்பகுதி இறங்கியும், வயிற்றுப்பகுதி ஏறியும் வாலின் அடிப்பகுதி தடித்தும் நுனிப்பகுதி மெல்லியதாகவும், மொத்தத்தில் நாய் பார்ப்பதற்கு ஒல்லியான தேகத்துடன்தான் இருக்கும்.

நாய்களின் கண்கள், பூனைக்கண் போன்று இருந்தால், அந்தவகை நாய்களுக்குக் காது கேட்காது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நாயிடம் செய்யக்கூடாதவை!

நாயை விளையாட்டாக வாலைப் பிடித்து இழுப்பது, வேகமாக அடிப்பது, உசுப்பிவிடுவது ஆகியவற்றைச் செய்யக்கூடாது. தன் குட்டிகளுடன் இணைந்து இருக்கும்போதும் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போதும் நாயை சீண்டக் கூடாது. முரட்டுத்தனமாக கையாளாமல் அமைதியாகப் பழக்க வேண்டும். வேகமாக குரைத்துக் கொண்டு பதட்டமான சூழ்நிலையில் இருக்கும் போதும், அந்தச் சூழ்நிலையில் மிரட்டப்படும் போதும்தான் நாய் கடிக்கும் நிலைக்கே வருகிறது. நாயை விரட்டுவதும், கல்லைக் கொன்டு எறிவதும் தவறு. நாய் குரைக்கும் போதும், சாப்பிடும் போதும் அருகில் செல்லக்கூடாது.

நாய்களுக்கு மொழி, அர்த்தம் எதுவும் புரியாது என்றாலும், ஓசையை எளிதாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவை. அந்த ஓசைகள் நாய்கள் விரும்பும் வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு ஓசையையும், ஒரு சில பெயர்களையும் மட்டுமே விரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன. குட்டியிலிருந்து ஒரே பெயரையே வைத்து கூப்பிட வேண்டும். அடிக்கடி பெயர் மாற்றம் செய்யக்கூடாது. நாய்களை எப்போதுமே சங்கிலி போட்டு கட்டி வைக்கக் கூடாது. நடைப்பயிற்சியும் ஓட்டப்பயிற்சியும் அவசியம். எப்போதும் ஒரே இடத்திலிருக்கும் நாய்களின் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் பாதிக்கப்படுகின்றன.

செல்லப்பிராணிகளுக்கு கல்லறைத் தோட்டம்!

வெளிநாடுகளில் செல்லப்பிராணிகள் இறந்ததும், அவற்றின் எஜமானர்கள் அவற்றை பிரார்த்தனையுடன் அடக்கம் செய்கிறார்கள். நியூமெக்ஸிகோவில், வில்லியம்ஸ்பர்க் என்ற இடத்தில் செல்லப்பிராணிகளுக்கென்று கல்லறைத் தோட்டம் உள்ளது. அங்கே பிராணிகளைப் புதைக்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பத்து நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் வசதியும் உண்டு.

இ.கார்த்திகேயன்

படங்கள்: எல்.ராஜேந்திரன், ஆர்.எம்.முத்துராஜ்