
மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!
நைட்ரேட் போர்..!
லத்தீன் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு நாடு பெரு. அருகிலிருக்கும் ஏராளமான குட்டித்தீவுகளிலும் பாறைத்தீவுகளிலும் பல்லாண்டு காலமாக கடற்பறவைகள் தங்கி வாழ்ந்து வருகின்றன. மனித நடமாட்டம் இல்லாததால் அவற்றின் எச்சங்கள் அப்பகுதிகளில் மலை போல் குவிந்து கிடந்தன. இந்த இயற்கை இடுபொருளை மோப்பம் பிடித்த வணிகக் கப்பல்கள், இதைக் கொள்ளையடிக்க அலையலையாய் புறப்பட்டு வந்தன.

இங்கிலாந்துடன் இதர ஐரோப்பிய நாடுகளும் அப்போது புதிதாக முளைத்திருந்த அமெரிக்காவும் சேர்ந்து இங்கிருக்கும் 94 தனித்தீவுகளையும், பாறைத் தீவுகளையும் சுற்றி வளைத்தன. ஒரே சமயத்தில் ஒரு தீவின் எச்ச உரங்களை ஏற்றிச் செல்ல பலநாடுகளைச் சேர்ந்த 99 கப்பல்கள் முற்றுகையிட்டிருந்தன என்பதை வைத்தே, இதன் தீவிரத்தை நாம் உணர முடியும். இந்தப் போட்டியில் 66 தீவுகளை அப்போதே அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது. இன்றும்கூட இதில் 9 தீவுகள் அமெரிக்காவின் உடமையாகவே இருக்கின்றன.
1860-களில் அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பறவை எச்ச இறக்குமதியைக் காட்டிலும் அமெரிக்காவின் இறக்குமதி அதிகம். இங்கிலாந்து, 1847-ம் ஆண்டில் இறக்குமதி செய்த எச்சத்தின் அளவு 2 லட்சத்து 20 ஆயிரம் டன்கள். இறக்குமதியான பறவைகளின் எச்சத்தை வயல்களில் இடுமாறு உழவர்களைக் கட்டாயப்படுத்தின இந்த நாடுகள்.
பெரு நாட்டின் கடற்பிரதேசத் தீவுகளில் மலை போல் குவிக்கப்பட்டிருந்த எச்சக்குவியலை, கப்பலில் ஏற்ற பணியாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது உலக அளவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டிருந்த காலகட்டம். இதனால், சீனாவிலிருந்து தொழிலாளர்கள் என்கிற பெயரில் அழைத்து வரப்பட்டவர்கள் இங்கே குவிக்கப்பட்டு, வேலை என்கிற பெயரில் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டனர். ஒரு மூன்றாம் உலக நாட்டுக்குச் சொந்தமான இயற்கை வளத்தை, வேறொரு மூன்றாம் உலக நாட்டின் மானுட உழைப்பைக் கொண்டு பணக்கார நாடுகள் கொள்ளையடித்து, தங்கள் மண்ணுக்கு வளம் சேர்த்தன.
கடற்பறவைகளின் எச்சம் ஒன்றும் அமுதசுரபி அல்லவே. சில ஆண்டுகளிலேயே அவை தீர்ந்தன. பிறகு, அந்தக் கப்பல்கள் உலகம் முழுவதும் பறவை எச்சத் தீவுகளைத் தேடியலைந்து தோற்றன. பிறகு, இவற்றின் கவனம் நைட்ரேட் வயல்களின் மீது திரும்பியது. இவ்வயல்கள் பெருநாட்டிலும், பொலிவியா நாட்டிலும் நிறைய இருந்தன. இதற்கிடையே எச்ச உரங்களின் விற்பனை மூலம், பெரு நாட்டில் உருவாகியிருந்த புதிய முதலாளிகளும் இவ்வயல்களின் மீது கவனம் செலுத்தினர்.
நைட்ரேட்டின் தேவை வெறும் உரத்துக்கானது மட்டுமல்ல. அப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்த டி.என்.டி வெடிமருந்துக்காகவும் அது தேவைப்பட்டது. இதனால் நைட்ரேட் சுரண்டல் அதிகரித்தது.
விழித்துக்கொண்ட பெரு மற்றும் பொலிவியா ஆகிய இரண்டு நாடுகளும் தங்கள் நைட்ரேட் வயல்களின் மீதான அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்கத் தொடங்கிய முயற்சி, ஒரு போர் தோன்ற வழிவகுத்தது. இந்தப் போர் ‘பசுபிக் போர்’ என்று நாகரிகமாக அழைக்கப்பட்டாலும், சூழல் வரலாற்றில் ‘நைட்ரேட் போர்’ என்றே குறிப்பிடப்படுகிறது.

பொலிவியா, பெரு ஆகிய இரு நாடுகளின் மீது திடீரென போர் தொடுத்தது, சிலி. உண்மையில் இப்போரை பின்னின்று நடத்தியது, பிரிட்டனின் முதலாளிகள்தான். இப்போரில் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் படைகள் ஈடுபடுத்தப்பட்டன. ஆதிக்க சக்திகளின் ஆதரவுடன் போரில் வென்ற சிலி, நைட்ரேட் வயல்களைக் கைப்பற்றியது. இந்த வயல்கள், மறைமுகமாக பிரிட்டனின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தன.
இது, ஐரோப்பாவின் மற்றொரு நாடான ஜெர்மனிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. முதல் உலகப் போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த அந்நாட்டுக்கு வெடிமருந்துக்காக நைட்ரேட் பெருமளவில் தேவைப்பட்டது. எனவே, ஜெர்மனி மாற்று வழிகளை ஆய்வு செய்யுமாறு தனது அறிவியலாளர்களைத் தூண்டியது. இறுதியில் ஃப்ரிட்ஸ் ஹாப்பர் எனும் அறிவியலாளர் வளிமண்டலத்திலிருந்து நைட்ரஜனைப் பிரித்து அதை நிலைப்படுத்தி, நைட்ரேட்டுக்களாக மாற்றும் நுட்பத்தையும், கருவியையும் கண்டுபிடிக்க, நைட்ரேட் வயல்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
இப்படி கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை நைட்ரேட்தான் உலகப்போர் முடிந்ததும் விளைநிலங்களுக்கு வந்து சேர்ந்தது. தற்போது ஆண்டுக்கு 10 கோடி டன் அளவு நைட்ரேட் நம் மண்ணில் கொட்டப்படுகிறது. ஒரு காலத்தில் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையடித்து தம் நிலங்களுக்கு ஊட்டத்தையும், தம் மக்களுக்கு உடல் வலிமையையும் தேடிக்கொண்ட பணக்கார நாடுகள், இன்று பணத்துக்காக மூன்றாம் உலக நாடுகளின் மண்ணைக் கெடுத்து, அந்த மக்களின் உடல் நலத்தைச் சீரழிக்கின்றன.
‘கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது பழமொழி. அது செயற்கை நைட்ரேட்டைக் கண்டுபிடித்த ஃப்ரிட்ஸ் ஹாப்பருக்கு முழுவதும் பொருந்திப்போனது. இந்தக் கண்டுப்பிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசுகூட கிடைத்தது. இவர் சைக்ளோன்-பி (Zyklon-B) எனும் மற்றொரு நச்சுக் காற்றையும் கண்டுபிடித்திருந்தார். இந்த நச்சுதான் இன்றைக்குக் களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு யூதரான ஹாப்பரின் இந்தக் கண்டுப்பிடிப்பு, இறுதியில் யூத இனத்தையே அழிக்கப் பயன்படுத்தப்பட்டது வரலாற்றுக் கொடுமை. ஹிட்லரின் வதை முகாம்களில் இந்த நச்சுக்காற்றைச் செலுத்தித்தான் கூட்டம் கூட்டமாக யூதர்களைக் கொன்றழித்தனர். ஆக, இன்றைக்கு ‘களைக்கொல்லி’களாக அறியப்படுபவையும் மனிதர்களைக் கொல்வதற்காகக் கண்டறியப்பட்டவைதான்.
ஹாப்பரின் மனைவியும் ஓர் அறிவியலாளர்தான். அப்பெண்மணி, கணவரின் கண்டுபிடிப்புகளுக்கு கடும்எதிர்ப்பு தெரிவித்து துப்பாக்கியால் தன்னையே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மகனும் தற்கொலை செய்துகொள்ள எஞ்சிய குடும்ப உறுப்பினர்கள் வதை முகாமில் கொல்லப்பட்டனர். இறுதியில் நாடு கடத்தப்பட்ட ஹாப்பர், அகதியாக அலைந்துத் திரிந்து மரணமுற்றபோது இவரது கண்டுபிடிப்பால் பணத்தைக் குவித்திருந்த எந்தவொரு கார்ப்பரேட்டும் இவருக்காகக் கவலைப்படவில்லை.
அறிவியலாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் கண்டுபிடிப்புகள்... மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. ஆனால், வேளாண்மைக்கான நவீன அறிவியலானது இன்றும் கார்ப்பரேட்டுக்களுடனேயே கைகோத்துப் பிணைந்துக் கிடக்கிறது. புவியியல், மண்ணியல், வேளாண்மையியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், பூச்சியியல் போன்ற பல துறைகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பெரும்பாலும் இன்று வரையிலும் கூட மண்ணை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
அதேவேளை, எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறாத, சர்வதேசக் கருத்தரங்குகளில் கட்டுரைகள் வாசிக்காத எளிய உழவர்கள் பல நூற்றாண்டுகளாகவே மண்ணை எப்படியெல்லாம் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது வியப்பு விண்ணை முட்டுகிறது. அதை அறிந்துகொள்ள உலகின் நான்கு திசைகளுக்கும் ஒரு பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். வாருங்கள், முதலில் தென்அமெரிக்காவிலிருக்கும் உலகின் மிகநீளமான ஏண்டீஸ் மலைத்தொடருக்குச் செல்வோம்.
-தடுப்போம்
‘சூழலியலாளர்’ நக்கீரன்