Published:Updated:

மண்புழு மன்னாரு: ‘அம்மா’ விதையும், கவுனி நெல் காவலர்களும்!

மண்புழு மன்னாரு: ‘அம்மா’ விதையும், கவுனி நெல் காவலர்களும்!

பொதுவா மண்ணுல விளையுற விளைபொருளை சீக்கிரமா பயன்படுத்திடணும். இல்லனா, கெட்டுப்போயிடும். ஆனா, இதுல விதிவிலக்கான தானியங்களும் உண்டு. அரிசியை அதிகபட்சம் மூணு வருஷம் வெச்சிருந்து சாப்பிடலாம். புது அரிசியை விட, பழைய அரிசி சோறுதான் அருமையா இருக்கும். ஆனா, இப்பல்லாம், ‘சோறு’ங்கிற பேரைக் கேக்கிறதே அரிதா இருக்கு. ‘சோறு சாப்பிட்டாச்சா?’னு யாராவது கேட்டா, அவரை நாகரிகம் இல்லாத ஆளுனு நினைக்கிற நிலைமையும் இருக்கு.

மண்புழு மன்னாரு: ‘அம்மா’ விதையும், கவுனி நெல் காவலர்களும்!

உண்மையில சோறுங்கிற வார்த்தையோட மகத்துவமே தனி. நமக்குக் கிடைச்சிருக்கிற கல்வெட்டுகள்லயும் சரி, இலக்கியங்கள்லயும் சரி... சோறு பத்தி நிறையவே பேசப்பட்டிருக்கு. அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவைனு பல பேருல இந்த சோறு பத்தி பெருமையா பேசியிருக்காங்க.

‘சோறு வாக்கிய கொழுங் கஞ்சியாறு போலப் பரந்து ஒழுகி’னு பட்டினப்பாலையில் பாடியிருக்காங்க. அதாவது, சோறு வடிச்ச கஞ்சி, ஆறு மாதிரி ஓடிச்சுனு சொல்றாங்க.

‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ங்கிற பாரம்பர்ய ரகம், சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில அந்தக் காலத்துல விளைஞ்சிருக்கு. நெற்களஞ்சியமான தஞ்சாவூர்ல இதை விதைக்காம, ஏன் ஆத்தூர்ல விதைச்சாங்கனு யோசிக்க வைக்குதுதானே! இதுக்கு முக்கிய காரணம் இருக்கு. இந்த நெல் ரகம் மலையும், மலைசார்ந்த பகுதியிலதான் நல்லா விளைச்சல் கொடுக்குமாம். அதனாலதான் மலை சூழ்ந்திருக்கிற சேலம் மாவட்டத்துல விளைஞ்சிருக்கு. சலம்னா, மலைனு தமிழ்ல இன்னொரு பேரு உண்டு. ‘சலம்’ ங்கிற பேரு மாறி ‘சேலம்’ னு ஆகியிருக்குனு தமிழ் அறிஞருங்க சொல்றாங்க. அருணாச்சலம், வேதாச்சலம், வெங்கடாச்சலம்னு சொல்லிக்கிட்டே போகலாம். ரொம்ப சன்னமா, இருக்கிற, இந்த அரிசியில சோறு சமைச்சு சாப்பிட்டா, அந்த ருசி, வாழ்நாள் முழுக்க மறக்காது.

வெள்ளைக்காரன், நம்ம நாட்டு செல்வத்தைக் கொள்ளையடிச்சான்ங்கிறது நமக்கெல்லாம் தெரியும். அதேசமயம், இயற்கைச் செல்வத்தை அழியாம பாதுகாத்தான். காலாகாலத்துக்கும் இந்தச் செல்வங்களைக் கொள்ளையடிக்க முடியும்கிறதையும் புரிஞ்சி, பல வேலைகளைச் செய்திருக்கான். 21-ம் வருஷம் கோயம்புத்தூர்ல இருக்கிற நெல் ஆராய்ச்சி மையத்தில பாரம்பர்ய நெல் ரகத்துல கலப்பு ஏற்படாத ‘தனிவழித் தேர்வு’ முறையில விதையை உற்பத்தி பண்ணி, விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கான். அப்போ, முதல்ல தேர்வு செய்த ரகம் கிச்சிலிச் சம்பாதான். இதுக்கு ஜி.இ.பி.-24 னு (Government Economic Botanist) பேரும் வைச்சி, தென்னாடு முழுக்கவே பரப்பியிருக்காங்க.

ஆக, புதுசா, நெல் ரகத்தை உருவாக்க திட்டம் கொண்டுவந்த நேரத்துலயும், தாய் ரகமாக கிச்சிலிச் சம்பாதான் தேர்வு செய்யப்பட்டது. உலக அளவில் உருவாக்கப்பட்ட சுமார் 750 நெல் ரகங்களுக்கு (பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.-8, ஐ.ஆர்.-40 போன்ற ரகங்களுக்கும் சேர்த்து) கிச்சிலிச் சம்பாதான் அம்மா (தாய் வித்து).

சேலத்துல இருந்த மார்டன் தியேட்டர்ல பாட்டு எழுத வந்த கவிஞர் மருதகாசிக்கு, தினமும் கிச்சிலிச் சம்பா சோறுதான் போட்டிருக்காங்க.

‘அட, இந்த சோறு வாசனையா, ருசியா இருக்கே, இது என்ன ரகம்?’ கேட்டிருக்காரு. இது ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’னு சொல்லியிருக்காங்க. அந்த ருசியை மறக்காத மருதகாசி, ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்துல ‘ஆத்தூரு கிச்சிலிச் சம்பா பார்த்து வாங்கி விதை விதைச்சி’னு இந்த ரகத்துக்கு அழியாத பெருமையைச் சேர்த்து வெச்சிட்டாரு.

சிவகங்கை-புதுக்கோட்டை மாவட்டத்துல இருக்கிற காரைக்குடி, கண்டனூர், பள்ளத்தூர், கோட்டையூர், தேவகோட்டை, திருமயம் பகுதியில நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவங்க குடியிருக்கிற பகுதிக்கு செட்டிநாடுனு பேரு. செட்டிநாட்டுக் கல்யாணத்துல தலைவாழை இலை போட்டு 18 வகையான காய்கறியோட விருந்து வைப்பாங்க. அதுல கவுனி அரிசி உக்காரை, வெள்ளைப் பணியாரம், பால் பணியாரம், சீப்பு சீடை, தேன்குழல், மணக்கோலம், உருண்டைச் சீடை, அதிரசம்னு ‘ராஜ விருந்து’ மாதிரி இருக்கும். கடந்த பத்து, பதினைஞ்சு வருஷமாத்தான், பாரம்பர்ய நெல், பாரம்பர்ய உணவுனு பேச்சு பலமா அடிபடுது. ஆனா, காலம், காலமா ‘கவுனி’ அரிசி இல்லாம, செட்டிநாட்டுல கல்யாணம் நடந்தது கிடையாது. உடம்புக்குத் தெம்பு கொடுக்குற இந்த அரிசியில இருந்து தயாரான விதவிதமான பலகாரத்தை புதுமாப்பிள்ளைக்கு முதல் விருந்தா வைப்பாங்க.

காலம், காலமா கவுனி ரகத்தைப் பாதுகாக்கிற செட்டிநாட்டு மக்களுக்கு ‘கவுனி நெல் காவலர்கள்’னு பட்டம்கூட கொடுக்கலாம்.

ஓவியம்: ஹரன்