நீங்கள் கேட்டவை: ‘பருத்தி எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்..?’

‘‘எங்கள் நண்பரின் கடையிலும், வீட்டிலும் மூட்டைப்பூச்சித் தொல்லை அதிகமாக உள்ளது. இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வழி சொல்ல முடியுமா?’
க.சுந்தரம், தஞ்சாவூர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பர்ய சித்த மருத்துவர் க.கோ.மணிவாசகம் பதில் சொல்கிறார்.
‘‘மூட்டைப்பூச்சிகளை நினைத்தாலே மக்கள் கதிகலங்கிப் போனது ஒரு காலம். அதனால்தான், ‘மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதா?’ என்கிற பழமொழியே உருவானது. இந்த நிலை படிப்படியாகக் குறைந்துவிட்டது என்றாலும், ஆங்காங்கே மூட்டைப்பூச்சிகளின் தொல்லை இருக்கவே செய்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த ரசாயனங்களைப் பயன்படுத்துவது... மனிதர்களுக்குப் பலவித இன்னல்களைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்து இயற்கை நுட்பத்தைத் தேட ஆரம்பித்திருக்கும் உங்களைப் பாராட்டுகிறேன்.

சரி, மூட்டைப் பூச்சிகளைக் கட்டுப் படுத்தும் இயற்கை நுட்பங்களைப் பார்ப்போம்...
* மூட்டைப்பூச்சிகள், தாமரை வாசனையைக் கண்டால், அலறி அடித்து ஓடிவிடும். தாமரை

மலர்களைக் காய வைத்துத் தூளாக்கி, மூட்டைப்பூச்சிகள் இருக்கும் இடத்தில் தூவினால், அவை அந்தப் பக்கம் எட்டி கூடப் பார்க்காது.
* காய்ந்த நொச்சி இலை 100 கிராம், கற்பூரம் 10 கிராம் என்ற அளவில் கலந்து, தூள் செய்து தூவி விடலாம். ஒருவேளை மூட்டைப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், நாட்டுமாட்டுச் சிறுநீர் ஒரு லிட்டர், கால் கிலோ தாமரை இலை என்கிற அளவில் 8 நாட்களுக்கு ஊற வைத்து... ஒரு லிட்டர் கரைசலுக்கு, 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளித்தால், மூட்டைப்பூச்சிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிடும். 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளித்தால், மொத்த மூட்டைப்பூச்சிகளையும் ஒழித்து விடலாம்.’’
தொடர்புக்கு, செல்போன்: 98435-92039.
‘‘பருத்தியைச் செடிகளில் இருந்து பறித்தெடுக்கும் கருவி உள்ளதாகக் கேள்விப்பட்டோம். இதன் விவரத்தைச் சொல்லவும்?’’
கே.கருப்பையா, பவானி.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கழகச் செயலர் ஆஷா ராணி பதில் சொல்கிறார்.
‘‘பருத்தி சாகுபடியில் முக்கியமான பணி, பருத்தி எடுப்பது. இதில் சுணக்கம் ஏற்பட்டால், லாபம் கிடைக்காது. எனவே, சரியான நேரத்தில் பருத்தியை அறுவடை செய்யவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் பருத்தி எடுக்கும் கருவி இங்கே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கருவியின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதிக தூசுடன் பருத்தியை எடுப்பதும், கருவியில் கோளாறு ஏற்படுவதும் சீனக் கருவியில் உள்ள முக்கியமான குறைபாடுகளாக இருந்தது.

தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், கடந்த 3 ஆண்டுகளாக புதிய கருவியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. 5-6 வேலை ஆட்கள் மூலமாக, ஒரு நாளில் எடுக்கும் பருத்தியை, இந்த ஒரே ஒரு கருவி மூலம் ஒரே நாளில் எடுக்க முடியும். இதில் 12V பேட்டரியுடன், பருத்தி சேகரிக்கும் பை, ஒரு கூடுதல் மோட்டார் மற்றும் உபகரணங்கள் இணைந்துள்ளன. பருத்தி எடுப்பவர் இடுப்பில் கருவியைக் கட்டிக் கொண்டு பயன்படுத்தலாம்.
ஒரு ஏக்கருக்கு 12 குவிண்டால் பருத்தி கிடைக்கிறது, என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பருத்தியை ஆட்கள் மூலமாக எடுப்பதற்கான செலவு, 22,000 ரூபாய் வரை ஆகும். இந்தக் கருவியின் விலை 9,900 ரூபாய் மட்டுமே. இதனால் 12 குவிண்டால் பருத்தி எடுக்கும் செலவில் பாதி தொகையிலேயே கருவியை வாங்கிவிட முடியும். ஒரு மணி நேரத்தில் 5 கிலோ வரை பருத்தி எடுக்க முடியும். மாசற்ற தரமான பருத்தியை எடுக்கமுடியும் என்பது இதன் சிறப்பம்சம். தற்போதைக்கு இந்தக் கருவிக்கு மானியம் வழங்கப்படவில்லை. தமிழக அரசுக்கு இதுகுறித்து முறையீடு அனுப்பியுள்ளோம்.’’
தொடர்புக்கு, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், 41, ரேஸ் கோர்ஸ் சாலை, கோயம்புத்தூர்-641018
தொலைபேசி: 0422-2220079, செல்போன்: 98429-07765.
‘‘முள்சீத்தா மரத்தைப் பற்றி கேள்விப்பட்டோம். இதன் மருத்துவ குணங்களையும், கன்றுகள் எங்கு கிடைக்கும், என்பதையும் சொல்லுங்களேன்?’’
கே.உமாராணி, புதுச்சேரி.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் அனீசா ராணி பதில் சொல்கிறார்.
‘‘மருத்துவ குணம் கொண்ட முள்சீத்தா மரங்களின் தாயகம், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள். இயற்கையாகவே தமிழ்நாட்டில் உள்ள தோட்டங்களிலும், வேலிகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் வளர்ந்து நிற்கின்றன. சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். அமேசான் காட்டுப் பழங்குடி மக்கள் இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் நோய் தீர்க்கும் மருந்துகளாகப் பயன்படுத்தினர். முக்கியமாக இதன் இலை, பழம் ஆகியவற்றைப் பக்குவப்படுத்தி, உணவாக அருந்தும் வகையில் தயாரித்து, புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தினார்கள்.
புற்றுநோய் செல்களைக் கொல்வதற்கான ‘அஸிட்டோஜெனின்ஸ்’ எனும் மூலப்பொருள், இம்மரத்தின் இலை, தண்டு, வேர், பட்டை, பழம் அனைத்திலும் வியாபித்துள்ளது. இதனால், ‘இம்மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு 12 வகையான புற்றுநோய்களைக் குணப்படுத்த முடியும்’ என்று கூறப்படுகிறது. புற்றுநோய்க்கான ஹீமோதெரபி சிகிச்சையில் தலைமுடிகள் கொட்டி, உடல் மெலிந்து எடை குறையும். ஆனால், இம்மரத்தின் பொருட்களை மருந்தாக பயன்படுத்தும்போது முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இம்மரமானது நடவு செய்த 3-4 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கும். இதன் பழத்தைச் சாப்பிடலாம். இலையைப் பொடித்து டீ தூளில் கலந்து தினமும் குடிக்கலாம்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மக்கள், முள்சீத்தா மரத்தை வளர்த்தும், உண்டும் வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள பெரிய பழக்கடைகளில் முள்சீத்தா பழங்கள் விற்பனைக்கும் கிடைக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்திலும், இந்த கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன”.
தொடர்புக்கு, விருத்தாச்சலம், தொலைபேசி: 04143-238231
பேச்சிப்பாறை, தொலைபேசி: 04651-281192
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.
புறா பாண்டி