விருது வழங்கிய மல்லை தமிழ்ச்சங்கம்!
பல்லவர்களின் கலைநகரமான மாமல்லபுரத்தில் இருக்கும் மல்லை தமிழ்ச்சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும்... ‘பெருந்தமிழன்’, ‘பெருந்தச்சன்’, ‘மாமல்லன்’ என்ற விருதுகளைப் பல்வேறு துறைகளில் சாதித்த தமிழர்களுக்கு வழங்கி கௌரவிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, ஜூலை 29-ம் தேதி ஸ்தல சயன பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

பெருந்தச்சன் விருது, ஓவியர் ‘டிராட்ஸ்கி’ மருதுக்கும்; மாமல்லன் விருது, மதுரை மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர் எஸ்.எம்.மணிக்கும்; பெருந்தமிழன் விருது, மறைந்த ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாருக்கும் வழங்கப்பட்டது. நம்மாழ்வாருக்கான விருதை அவருடைய மனைவி சாவித்திரி அம்மாள் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய ம.தி.மு.க. துணைப்பொதுச் செயலாளரும், மல்லைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான ‘மல்லை’ சத்யா, “அப்துல் கலாம் மறைந்த இரண்டாவது நாளில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். இது மாணவர்களுக்கான நிகழ்ச்சி என்பதால், தள்ளிப் போட முடியவில்லை.

இந்த பூமி பாழ்பட்டுவிடக் கூடாது எனப் பாடுபட்டவர் நம்மாழ்வார். ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும், பாழ்பட்ட மண்ணை மீட்பதற்காகவும் விவசாயிகளுக்காகவும் கடைசி வரை போராடியவர், நம்மாழ்வார்.
ஓவியர் ‘டிராட்ஸ்கி’ மருது ஓவியத்துறையில் பல புதுமைகளைச் செய்து சாதனை செய்து வருபவர், எஸ்.எம். மணியன் தமிழர்களின் பாரம்பர்ய கலையான சிலம்பாட்டத்தைப் போற்றி, பாதுகாத்து வருகிறார். இப்படி தமிழ் மண்ணுக்காகப் போராடுபவர்களுக்கும் பாரம்பர்யம் காப்பவர்களுக்கும் கௌரவ அடையாளமாகவே நாங்கள் விருதுகளை வழங்குகிறோம். இந்த மூவருக்கும் விருது வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்றார்.
பா.ஜெயவேல்