அமைச்சருக்கு அழகல்ல!
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?
‘நாடு முழுவதும் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம், காதல் தோல்வி மற்றும் ஆண்மைக் குறைபாடுகள்தான்’ என்று கொஞ்சம்கூட நாகூசாமல், நாடளுமன்றத்தில், ‘புளுகல் அறிக்கை’ வாசித்து அதிர வைத்திருக்கிறார் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்!
‘வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வசூலிப்பதால், விவசாயிகள் பெரும் கடனாளியாக மாறியுள்ளனர். இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல் அவர்கள் விரக்திக்குத் தள்ளப்பட்டு தற்கொலை முடிவை நாடுகின்றனர். வட்டியே இல்லாமல் கடன் கொடுக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். அதுதான் பிரச்னைக்குத் தீர்வு காண உதவும்’ என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அடிக்கடி சொல்லி வருகிறார்.
ஆனால், நிஜத்தில் நடப்பதென்ன?
விவசாயத்துக்கு 4 சதவிகித வட்டியில் கடன் என்று பெருமை அடித்துக் கொள்கிறது மத்திய அரசு. ஆனால், விளைச்சல் பொய்த்துப் போய், கடனைத் திருப்பிக் கட்ட கொஞ்சம் தாமதம் ஆனாலும், 7 சதவிகிதம், 9 சதவிகிதம் என்று கந்து வட்டிக்காரர்களைவிட, கறார் காட்டுகின்றன பொதுத்துறை வங்கிகள். இதனால், தற்கொலை என்கிற இறுதி ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள் விவசாயிகள்.
இத்தகைய கொடுமையிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றும் வகையில், வட்டியைக் குறைப்பது பற்றியோ... விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வழிகாட்டுவது பற்றியோ பேசுவதைவிட்டுவிட்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது அமைச்சருக்கு அழகல்ல!
-ஆசிரியர்