ஏட்டுக் கல்வியுடன்... எதார்த்தக் கல்வி!
பொறியியல் படித்தோமா... வளாக நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றோமா என்றில்லாமல், படிக்கும்போதே இயற்கை விவசாயத்தைக் கையிலெடுத்து, ஏட்டுக் கல்வியுடன் எதார்த்தக் கல்வியையும் ஒருங்கே கற்று வருகிறார்கள், சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள்.
இயற்கை விவசாயத்தில் மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட கல்லூரி நிர்வாகம், விவசாயம் செய்ய ஏதுவாக ஒரு ஏக்கர் நிலத்தைக் கொடுத்து ஊக்கப்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய நான்காம் ஆண்டு மாணவர் மூர்த்தி, ‘‘நாம் உண்ணும் உணவு நஞ்சானது என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கான தீர்வு ஆர்கானிக் கடைகளில் இல்லை. ஏ.சி. அறையில் அமர்ந்து பேச்சாளர்களை அழைத்துப் பேச வைப்பதிலும் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். களத்தில் இறங்கி வேலை பார்க்க முடிவு செய்தேன். இதில் ஆர்வமுள்ள சிலரை என்னுடன் சேர்த்துக் கொண்டேன். இன்று எங்கள் குழுவில் 40 மாணவர்கள் இருக்கிறோம். கல்லூரி எங்களுக்குக் கொடுத்த ஒரு ஏக்கர் நிலத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து விவசாயம் செய்கிறோம்.
கால் ஏக்கரில் கால்நடைகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணையம், இன்னொரு கால் ஏக்கரில் பல வகை மரங்களை நட்டு வேளாண் காடுகள் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம். மூன்றாவது கால் ஏக்கரில் மூலிகைகள், கீரைகள், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களும், நான்காவது பகுதியில் காய்கறிகளையும் நடவு செய்ய முடிவு செய்து ஆரம்பக் கட்ட பணிகளில் இறங்கியுள்ளோம். இத்துடன் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சியும் நடந்து வருகிறது. இங்கு தொடங்கப்படும் இயற்கை விவசாயம் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கும்” என்றார்.
மாணவர்களைத் தொழில் முனைவர்களாகப் பயிற்சியளிக்கும் ‘சி.இ.டி’ எனப்படும் ‘சென்டர் பார் என்ட்ரப்ர்னர்ஷிப் டெவலப்மென்ட்’, மற்றும் ‘க்ரீன் ப்ரிகேட்’ எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அமைப்புகள் இவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன.
ஐ.மா.கிருத்திகா
படங்கள்: ம.நவீன்