Published:Updated:

‘‘ஆயுதம் தந்த பசுமை விகடன்!’’

‘‘ஆயுதம் தந்த பசுமை விகடன்!’’

காவிரி டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்தும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முற்றிலும் விரட்டி அடிப்பதற்காகப் போராடி, களத்தில் உயிர் நீத்தார், ‘பசுமைப் போராளி’ நம்மாழ்வார். இந்தப் பணியைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன பொதுநல அமைப்புகள் பலவும். இப்பணிக்கு பெரிய அளவில் உதவும் வகையில், ‘பசுமை விகடன்’ தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. இத்துடன் ‘மீத்தேன் எமன்’ என்கிற தொடரும் வெளியானது.

திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே பெட்ரோல் மற்றும் எரிவாயு எடுக்கப்படும் கிராமங்களுக்குள் புதைந்து கிடக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகளையும், கண்ணீர் நிறைந்த துயரங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததுடன், இதனால், ஏற்படும் ஆபத்துகளை ஆதாரங்களோடு விரிவாக இந்தத்தொடரில் பதிவு செய்திருந்தோம். இத்தொடரில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரம் ‘மீத்தேன் எமன்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளது.

‘‘ஆயுதம் தந்த பசுமை விகடன்!’’

இந்நூலை அறிமுகப்படுத்தும் வகையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில், கடந்த ஜூலை 25-ம் தேதி மன்னார்குடியில் ‘மீத்தேன் எமன்’ நூல் அறிமுக விழா மற்றும் காவிரிப் படுகை பாதுகாப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, தொடர் கட்டுரையில் இடம் பெற்ற ஓவியர் செந்திலின் ஓவியங்களை அரங்கம் முழுவதும் பதாகைகளாக வைத்திருந்தார்கள்.

கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தலைமை தாங்கினார். நூலை வெளியிட்டுப் பேசிய தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், ‘‘பசுமை விகடன் போல் அனைத்துப் பத்திரிகைகளும் சமூகப் பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். சாமான்ய மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளை, யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தோலுரித்துக் காட்ட வேண்டும். மக்களை அழைத்து வந்து, போராட்டத்தின் வெற்றிக்குத் துணை நிற்க வேண்டும். இதனை நூலாக வெளியிட்டுள்ள ஆனந்த விகடன் நிறுவனத்தின் உயரிய பணி பாராட்டத்தக்கது” என்று சொன்னார்.

‘மீத்தேன் எமன்’ நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவரும் காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், ‘‘மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டு ‘மீத்தேன் எமன்’ தொடரை வெளியிட்ட பசுமை விகடனுக்குத் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இயற்கை விவசாயம், மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான நிலைப்பாடு, பாரம்பர்ய விதைகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல மகத்தான பணிகளை ஆற்றி வருகிறது, பசுமை விகடன்” என்று சொன்னார்.

‘‘ஆயுதம் தந்த பசுமை விகடன்!’’

இதய மருத்துவர் பாரதிச்செல்வன், ‘‘மீத்தேன் முதல் கட்டப் போரில் பசுமை விகடனில் வெளியான தொடர் கட்டுரைகள் ஆயுதமாக விளங்கின. ஒ.என்.ஜி.சி வடிவத்தில் இப்போது தொடங்கியுள்ள இரண்டாம் கட்டப் போரில், விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள மீத்தேன் எமன் நூல் ஆயுதமாகத் திகழப் போகிறது. இந்த நூல் வெறும் ஆயுதம் மட்டுமல்ல. எல்லா காலத்துக்கும் பயன்படக்கூடிய ஆவணம். தகவல் பெட்டகமாக மட்டுமல்லாமல், மக்களின் உணர்ச்சிகளோடு பேசுகிறது, இந்நூல்” என்றார்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் தலைவர் சுந்தர்ராஜன், எழுத்தாளர் ராகவ் மகேஷ், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த முகிலன், பொறியாளர் திருநாவுக்கரசு, மு.இளங்கோவன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கு.ராமகிருஷ்ணன்