மற்ற எபிசோடுகள்
Published:Updated:

’ஒரு நாள் விவசாயி!’

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

’ஒரு நாள் விவசாயி!’

மத்திய அரசு தொலைத் தொடர்புத்துறை உதவிப்பொறியாளர் அன்பாதித்தன், தமிழ்நாடு அரசு கால்நடைப் பராமரிப்புத்துறையில் கால்நடை ஆய்வாளராகப் பணிபுரியும் கிருஷ்ணவேணி, மகளிர் அழகு நிலைய உரிமையாளர் ஜெயந்தி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் இளங்கோ, பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர், தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராமசிவசாமி மற்றும் அவருடைய மனைவியும் ஆசிரியையுமான காந்திமதி அவர்களின் குழந்தை ஸ்ரீசரண் ஆகியோர்... இந்த முறை ஒரு நாள் விவசாயிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை, கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள பொன்னேகவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள இரண்டு பண்ணைகளுக்கு அழைத்துச் சென்றோம்.

முன்னோடி விவசாயிகள் பழனியப்பன், சுந்தர்ராஜன் ஆகிய இருவரும் இணைந்து பயிற்சி கொடுக்கச் சம்மதம் கொடுத்திருந்தனர். பசுமை விகடனின் ஒருநாள் விவசாயிப் பயிற்சி குறித்த தகவல் கிடைத்து, அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் வந்து, பயிற்சிக்கு வந்தவர்களுக்கு ஊக்கம் கொடுத்ததுடன், உணவு இடைவேளையில் கலகலப்பான ஒரு கலந்துரையாடலையும் நடத்திக் கொடுத்தனர்.

சின்னவெங்காயம் பெரிய லாபம்!

ஒருநாள் விவசாயிகளின் அறிமுகம் முடிந்ததும், சின்னவெங்காய வயலுக்கு அழைத்துச் சென்றார், பழனியப்பன். வயலுக்குள் இரண்டு மூதாட்டிகள் களை எடுத்துக்கொண்டிருக்க, முதல் ஆளாகக் களத்தில் இறங்கி, களை எடுக்கத் தொடங்கினார் ஜெயந்தி.

‘‘நேத்தைய மழையில வயல் ஈரக்காடா இருக்கு. செருப்போடு யாரும் போக வேண்டாம், மண் அப்பிக்கும்” என்று பழனியப்பன் கூற, செருப்பைக் கழற்றி வைத்து விட்டு வயலுக்குள் பாய்ந்தனர், அனைவரும். ஆனால், அன்பாதித்தன் மட்டும் வயலுக்குள் இறங்காமல் நின்றிருக்க... மற்ற எல்லோரும் அவரை அழைத்தனர். ‘வெயில் சூடு’ என்று சைகையில் அவர் தனது வழுக்கைத் தலையை நீவிக்காட்ட, ‘‘அட... இதற்கா பயப்படுறீங்க... வெயிலுக்குப் பயந்தா வெள்ளாமை வருமா? அதுக்குத்தான் நம்ம முன்னோர்கள் ‘தலைப்பாக்கட்டையே’ கண்டுபிடிச்சிருக்காங்க, வயலில் வேலை செய்கிறவங்க கண்டிப்பா தலைப்பாக்கட்டு கட்டணும்” என்றபடி தன்னிடம் இருந்த பச்சைத்துண்டை எடுத்து அன்பாதித்தன் தலையில் கட்டிவிட்டார், ஒரு விவசாயி.

‘‘ஆஹா... தலைப்பாகை கட்டியதும் சாருக்குத் தனிக் கம்பீரம் வந்திருச்சு” கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணவேணி கலாய்க்க... களைப் பறிப்பில் தன்னையும் இணைத்துக்கொண்டார், அன்பாதித்தன்.

’ஒரு நாள் விவசாயி!’

‘‘இது எத்தனை நாள் பயிருங்க?” முதல் கேள்வியைத் தொடுத்தார் ஜெயந்தி, “சின்னவெங்காயம் குறைஞ்ச நாள்ல மகசூலுக்கு வரக்கூடிய பணப்பயிர். இதை நடவு செய்த 60 நாள்ல அறுவடை செய்யலாம்” என்று பதில் சொன்ன பழனியப்பனிடம், “வாய்க்காலையும் காணோம்? வரப்பையும் காணோம்? எப்படீங்க பயிருக்குப் பாசனம் பண்ணுவீங்க?” என்று அடுத்த சந்தேகத்தைக் கிளப்பினார், கிருஷ்ணவேணி.

‘‘சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சிருக்கோம். அதனால வாய்க்கால், வரப்பு, பாத்தினு, எதுவும் தேவையில்லை, ‘பார் முறை’ மேட்டுப்பாத்தி அமைச்சு, அதுல வெங்காயத்தை வரிசை நடவு செய்து, அந்த வரிசையில சொட்டுநீர்க் குழாய்களைப் பொருத்திட்டா போதும், மண்வெட்டி கொண்டு மடை திறக்கவேண்டிய அவசியமே இல்லை. பம்ப் செட்டை போட்டு விட்டா, தன்னால தண்ணி பாய்ஞ்சிடும்” என்றார், பழனியப்பன்.

‘‘அப்போ, உரமெல்லாம் எப்படிக் கொடுப்பீங்க?” என்றார், இளங்கோ.

‘‘இதுக்கு நான் பதில் சொல்றேன்” என்றபடி தானாக முன்வந்த விவசாயி சுந்தர்ராஜன், ‘‘வெங்காயம் நடவுக்கு முன்னாடியே ஒரு ஏக்கருக்கு தேவையான 10 டன் தொழுவுரத்தை அடியுரமா கொட்டி இறைச்சிடுவோம். தொடர்ந்து ரெண்டு முறை உழவு செய்து, ‘பார் முறை' பாத்தி அமைச்சிடுவோம், மேலுரமா தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட திரவ உரத்தை தேவையான நேரத்தில் சொட்டுநீர்க் குழாய் வழியே கொடுத்திடுவோம்” என்றார்.

‘‘ஒரு ஏக்கருக்கு சொட்டுநீர்க் குழாய் அமைக்க எவ்வளவு செலவு பிடிக்கும்?” என்று கேட்டார் சங்கர்.

‘‘அரசு மானியம் இல்லாமல், அமைக்க ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். ஒரு தடவை அமைச்சிட்டா 5 வருஷம் வரை பயன்படுத்தலாம். அறுவடை முடிஞ்சதும் குழாய்களைச் சுருட்டி எடுத்துக்கணும். அப்புறமா அடுத்த வெள்ளாமைக்கான பாத்தி அமைச்சிட்டு, மறுபடியும் எடுத்துப் பொருத்திக்கலாம்” எனப் பொறுமையாகப் பதில் சொன்னார் சுந்தர்ராஜன்.

‘‘சரி, சரி... கேள்வி கேட்டது போதும் எல்லோரும் வயல்ல இருக்கிற களையை எடுங்க” காந்திமதி குரல் கொடுக்க, அனைவரும் உற்சாகமுடன் களை பறிக்கத் தொடங்கினர்.

சிறிது நேரம் களை பிடுங்கியவர்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிமிர... மகசூல், விலை குறித்துக் கேள்வி எழுப்பினார், ராமசிவசாமி.

’ஒரு நாள் விவசாயி!’

‘‘ஏக்கருக்கு 5 முதல் 7 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். சின்னவெங்காயத்தைப் பொறுத்தவரை சில சமயம் விலை ஏறுமுகமாகி நம்மை எங்கேயோ கொண்டு போய் நிறுத்திடும். அதேசமயம் விலை இறங்கினா, நம்மைக் கிறங்கிப் போகவும் வெச்சிடும்.   ஆனாலும், மனம் தளராமல் தொடர்ந்து வெங்காயச் சாகுபடியை செய்தா, ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நம்மை கை தூக்கி விட்டுடும்” என்றார், சுந்தர்ராஜன்.

ஏரு பூட்டி போவோமே...

அண்ணே, சின்னண்ணே!

பொட்டல் காட்டில் ஏர் பூட்டி ஓட்டிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். ‘‘கலப்பையையும் மாடுகளையும் பார்த்து எத்தனை நாளாச்சு?” என்றபடி அனைவரும் அங்கு சென்று ஏர் கலப்பையைச் சுற்றி நின்று கொண்டனர்.

“ஏர் பிடிப்பதற்கு முன்னால உழவு மாடுகள் ரெண்டும் என்ன இனம்னு சொல்லுங்க பார்ப்போம்?” என, ஒருநாள் விவசாயிகளைப் பார்த்து கேள்வியை வீசினார், பழனியப்பன். “இந்த ரெண்டு மாடும் ஆலம்பாடி இனம்” எனப் பளிச்சென்று பதிலளித்தார் கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணவேணி.

‘‘நீங்க சொல்றது சரிதான். இதை எங்க பகுதியில ‘மலையன்’னும் சொல்லுவோம். வண்டி இழுக்க, உழவு பிடிக்கனு சலிப்பில்லாமல் உழைக்கக்கூடிய நாட்டு இன மாடுகள்ல இதுவும் ஒண்ணு” என்ற பழனியப்பன், ‘‘ஒவ்வொருத்தரா போய் ஏர் பிடிங்க” எனச் சொல்ல, ஏரோட்டும் படலம் ஆரம்பமானது

முதலில் ஏரை பிடித்த அன்பாதித்தன், மாடுகள் ரெண்டும் திசைக்கொன்றாகத் திரும்பியபடி நிற்க அதே திசையில் மாட்டை ஓட்டினார். ‘‘கொஞ்சம் நில்லுங்க” சுந்தர்ராஜனின் குரல் கேட்டு அனைவரும் அவரைப் பார்க்க, “இந்தக் கலப்பையில் கருவத்தடி எது? யாராச்சும் சொல்லுங்க” அவர் கேட்கவும், பதில் தெரியாமல் விழித்தனர். மேழி, கொழு, கருவத்தடி, நுகம், கன்னிக்கயிறு, கயிறு, ஆக்கப்பூட்டு, உலப்பைக்குச்சி எனக் கலப்பையின் ஒவ்வொரு பொருளாகச் சொல்லிக் கொடுத்தார், சுந்தர்ராஜன்.

’ஒரு நாள் விவசாயி!’

“ஏரோட்டி கையில் குச்சி வெச்சிருப்பது மாடுகளை விரட்ட மட்டுல்ல... கலப்பைக் கொழுமுனையில் அப்பிக் கொள்ளும் ஈரமண்ணைக் குத்தி குத்தி அப்புறப்படுத்தவும்தான். மாடு நிற்கும் திசையில நீங்க ஏர் புடிச்சு ஓட்டினா அதைக் குறுக்கேர்னு சொல்லுவாங்க. ஆனா, இப்ப நீங்க ஓட்டவேண்டியது சால் ஏர். நிலத்தின் இந்தப் பகுதியில் தொடங்கி அடுத்தப் பொழியைத் தொடும் வரை ஒரே நேர்கோட்டில் கலப்பைக் கொழு போயிக்கிட்டு இருக்கணும். திரும்பி அதே போல நேர்கோட்டில் இந்த முனைக்கு வந்து சேரணும். இப்படிப் பலமுறை வந்து வந்து போகணும். அதுக்கு மாடுகள் ஒரே நேரா நடக்கணும்” என்று சுந்தரராஜன் சொல்ல...

‘‘டிராக்டரை திருப்பித் திருப்பி ஓட்ட ஸ்டியரிங் இருக்கும், மாடுகளைத் திசை திருப்ப என்ன செய்யணுங்க?” என்றார் சங்கர்.

குரல் மூலம் உத்தரவு!

‘‘மாட்டின் மூக்கணாங்கயிறோட சேர்ந்திருக்கிற கொம்புக் கயிறுதான் ஸ்டியரிங். ரெண்டு மாடுங்களோட கயிறும் ஏரோட்டியின் கையில் இருக்கும். உழவுக் கலப்பை இடதுபக்கம் திரும்ப, இடதுமாட்டின் கயிற்றை இறுக்கிப் பிடித்து இழுக்கணும். அதே சமயம் சேர்ந்தாப்பல வலது மாட்டின் கயிற்றை லூசாக (இலகுவாக) விட்டுக் கையில் வெச்சிருக்கிற குச்சியால் வலது மாட்டின் முதுகில் குத்தினா, ஏர் இடதுபக்கம் திரும்பும். வலதுபக்கம் திரும்ப, வலது மாட்டின் கயிற்றை இறுக்கி இழுத்து இடது மாட்டை ஓட்டணும்.

உழவு நேர் கோட்டில் செல்ல, ரெண்டு மாட்டின் கயிற்றையும் ஒரே சீராக இழுத்துப்பிடித்து ஓட்டினா போதும். மாட்டு வண்டி ஓட்டவும் இதே முறைதான். ‘க்கே..க்கே...க்கே’னு குரல் கொடுத்தால் இடதுபுறம் செல்லும், ‘ஓவ்வ்...ஓவ்வ்..’னு குரல் கொடுத்தால் நடந்து சென்றுகொண்டிருக்கும் மாடுகள் அப்படியே நின்று விடும். ‘ஹை... ஹை’ என்று இன்னொரு குரல் கொடுத்தால் மறுபடியும் நின்ற மாடுகள் நடக்க ஆரம்பிக்கும். உழவு ஆழமா போகணும்னா கலப்பைக் கருத்தடியானது, நுகத்தடிக்கு மேலேயும், ஆழம் குறைவாக மேல் உழவு பிடிக்க நுகத்தடிய கீழேயும் பொருத்திக் கட்டணும்” என உழவு நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தார், சுந்தர்ராஜன்.

‘’தேநீர் ரெடி’’ என்று பண்ணை வீட்டில் இருந்து குரல் வர, எல்லோரும் அங்குப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் வட்டமாக அமர்ந்து கொண்டனர். தேநீர் அருந்தியபடி பார்வையாளர்களாக வந்திருந்த பக்கத்து வயல் விவசாயிகளிடம் ஒவ்வொருவரும் கேள்விகளைத் தொடுக்க, அவர்களும் சலிக்காமல் பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

‘‘நாம அடுத்து, மஞ்சள் காடு, சப்போட்டா தோட்டத்துக்குப் போகப் போறோம். அதுக்குக் கால் டாக்ஸி எல்லாம் வராது. மாட்டுவண்டிதான் ஏறுங்க?” சுந்தர்ராஜன் சொல்ல ‘‘ஹை...ஜாலி” என்றபடியே குஷியாக வண்டியில் ஏறினார்கள், ஒருநாள் விவசாயிகள்.
குழித்தட்டு நாற்றங்கால் தயாரிப்பு, இயற்கை இடுபொருட்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அடுத்த இதழில்...

 ஜி.பழனிச்சாமி

 படங்கள்: த.ஸ்ரீனிவாசன்

நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.

மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.