இணைந்த ஆர்வலர்கள்!
நம்மாழ்வார் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியவை என்று நினைத்த, செய்து கொண்டிருந்த பணிகள் பல. அவற்றை எடுத்துச் செய்ய, அவர் கனவு கண்ட வளமான தமிழகத்தை, அவர் வழியில் மேலெடுத்துச் செல்ல அவருடன் தொடக்க காலம் முதல் இறுதிக் காலம் வரை இணைந்து இயங்கியவர்கள் ஒன்றிணைந்து ‘இயற்கை விவசாயக் கூட்டமைப்பு’ என புதிய அமைப்பை அமைத்துள்ளனர்.
அப்படிப்பட்ட 45 நபர்கள் கூடி, ‘அடுத்த பத்தாண்டு காலத்தில் தமிழகத்தில் இயற்கை விவசாயம் இருக்க வேண்டிய இடம்' என்ற தலைப்பில் கடந்த ஜூலை 12-ம் தேதி திருச்சியில் கூடி ஆலோசனை நடத்தினர். ‘குடும்பம்' ஆஸ்வால்டு குவிண்டால், பெரியநாயக சாமி, ‘அகிம்சா’ விக்டர், ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், ‘பூச்சியியல் வல்லுநர்’ செல்வம், ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக்கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை அறிமுகப்படுத்திப் பேசிய ‘அறச்சலூர்’ செல்வம், ‘‘விவசாயத்தையும் விவசாயிகளையும் ரசாயனத்தின் பிடியில் இருந்து விடுவிப்பது உள்ளிட்ட பல பணிகளை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார், நம்மாழ்வார். ஒவ்வொரு பண்ணையும் வாழ்வியல் பயிற்சி மையங்களாகவும், ஆரோக்கிய மையங்களாகவும் இருக்க வேண்டும் என்று கனவு கண்டார், அவர்.
தமிழகத்தின் இயற்கை வளங்களை அழிவிலிருந்து காப்பாற்றவும், அவற்றை மேம்படுத்துவதும்தான் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் முக்கிய சொத்து என்று அறிவுறுத்தி வந்தார். இப்படிப் பல காரியங்களை அவர் நமக்கென விட்டுச் சென்றுள்ளார். அவற்றை எடுத்துச்செல்லும் விதத்தில்தான் இவ்வமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் இயற்கை வேளாண்மை என்பது சாத்தியமில்லாத ஒன்று என்ற சூழ்நிலை, இன்று வெகுவாக மாறி விட்டது” என்றார்.
கடந்த கால அனுபவங்கள், நிகழ்கால சூழ்நிலைகள் பற்றி அனைவரும் கருத்துக்களைப் பகிர்ந்தனர். குறிப்பாக, தமிழகத்தின் நீராதாரங்கள் வேகமாக அழிந்து வருவதைப் பற்றிக் கவலை தெரிவித்தனர். இந்த ஆண்டு, டிசம்பர் மாதத்துக்குள் தமிழ்நாடு அளவிலான கூட்டத்தையும், ஆகஸ்ட் 22-ம் தேதி ஈரோட்டில் மேற்கு மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டத்தையும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டன.
-பசுமைக்குழு