Published:Updated:

தமிழகக் காய்கறிகளுக்கு கேரளா தடை... தொடரும் சர்ச்சை... உண்மை என்ன?

தமிழகக் காய்கறிகளுக்கு கேரளா தடை... தொடரும் சர்ச்சை... உண்மை என்ன?

‘தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படும் காய்கறிகளில் பெரும் அளவில் நச்சுத்தன்மை உள்ளது’ என்று சொல்லி வரும் கேரள அரசு, காய்கறிகளை வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ‘நச்சுக் காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்க மாட்டோம்’ என்று சில வாரங்களுக்கு முன் கேரள எல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தகட்ட பரபரப்பாக, ‘காய்கறிகளில் நச்சுத்தன்மை இல்லை’ என்கிற சான்றிதழும், சரக்கு ஏற்றி வரும் வாகனங்களுக்கு உரிய லைசென்ஸும் அவசியம். இவை இல்லாவிட்டால், தமிழகக் காய்கறி வாகனங்களை ஆகஸ்ட் 4-ம் தேதிக்குப் பிறகு கேரளாவுக்குள் அனுமதிக்க மாட்டோம்’ என்று கெடுவும் விதித்தது, கேரள அரசு.

இதையெல்லாம் வைத்து, தமிழகத்தில் சில அரசியல்வாதிகள் அறிக்கைப் போர் தொடங்கினர்... சில இடங்களில் ஆவேசப் போராட்டங்களுக்கும் ஆயத்தங்கள் நடந்தன. ஆனால், கேரள அரசின் கெடுபிடிகளோ... தமிழக அரசியல்வாதிகளின் அதிரடிகளோ.. இது எதுவுமே ஒரு பிரச்னை இல்லை என்பது போல... வழக்கம்போல தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே காய்கறிகள் சென்றுகொண்டே இருக்கின்றன!

தமிழகக் காய்கறிகளுக்கு கேரளா தடை... தொடரும் சர்ச்சை... உண்மை என்ன?

அப்படியென்றால், இதில் என்னதான் நடக்கிறது?

கேரள அரசின் கெடுபிடி அறிவிப்புகளைக் கண்டதுமே... தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய மூன்றையும் இணைத்து ஒரு குழு அமைத்து, கேரளாவுக்கு செல்லும் காய்கறிகளுக்கு தரச்சான்று வழங்கும் முயற்சியில் இறங்கிவிட்டது தமிழக அரசு.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்பு நியமன அலுவலர் ஷாம் இளங்கோவிடம் கேட்டபோது, “நாங்கள், காய்கறி சாம்பிள்களை ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்து பார்த்ததில், ‘கேரள அரசு பயமுறுத்தும் அளவுக்கு பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் இல்லை’ என்று தெரிய வந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை, அனுமதிக்கப்பட்ட அளவில்தான் இந்தப் பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

என்றாலும், நல்லெண்ண அடிப்படையில், மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கும் காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் தனித்தனியாக லைசென்ஸ் வழங்க இருக்கிறோம். இவற்றை வைத்து காய்கறிகளை அனுப்பிக் கொள்ளலாம். தினமும்  ஒட்டன்சத்திரம் சந்தையில் சுழற்சி முறையில் காய்கறிகளின் சாம்பிள் எடுக்கப்பட்டு அவை மதுரைக்கு அனுப்பப்படும். அங்கு உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு தரத்தன்மை குறித்த சான்றும் வழங்கப்படும்.

காய்கறிகளை அனுப்புவதற்கு, இப்போதைக்கு தரச்சான்று கட்டாயம் என்று கேரள அரசாங்கம் வலியுறுத்தாமல் இருக்கிறது. ஆனால், வரும் காலங்களில் வலியுறுத்தினால், கண்டிப்பாகத் தரச்சான்று தேவைப்படலாம். அதனால்தான் காய்கறிகளில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அளவானது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தால்... தோட்டக்கலைத்துறை மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ரசாயனப் பயன்பாட்டை குறைக்கச் சொல்லி அறிவுறுத்த இருக்கிறோம்.

ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் அனுமதி இல்லாத பூச்சிக்கொல்லிகளை விற்கக்கூடாது எனவும் அறிவுறுத்தி வருகிறோம். உரக்கடைகளை வேளாண்மைத் துறையினர், அவ்வப்போது சோதனை செய்து வருகிறார்கள்’’ என்று சொன்னவர், ‘‘விவசாயிகளும்... வியாபாரிகளும் இந்த விஷயத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைகள் குறித்து ஆர்வம் இன்றியே இருக்கிறார்கள்” என்றார்.

தமிழகக் காய்கறிகளுக்கு கேரளா தடை... தொடரும் சர்ச்சை... உண்மை என்ன?

எந்தப் பிரச்னையும் இல்லை!

ஏன் இந்த ஆர்வமின்மை? என்ற கேள்வியுடன் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் காய்கறி வியாபாரி தங்கராஜை சந்தித்தபோது, “இங்கிருந்து காய்கறி அனுப்புறதுக்கு எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பேப்பர்ல வர்ற செய்திகள்தான் பரபரப்பைக் கிளப்பிக்கிட்டிருக்கு. மத்தபடி பிரச்னை இல்லாம காய்கறிங்க போயிட்டிருக்கு. எங்களோட அடையாள அட்டை, ஆர்.சி ரெண்டுக்கும் ஒரு காப்பியை லாரியில கொடுத்து விடுவோம். கூடவே எங்க லெட்டர் பேடுல கேரளாவுல யாருக்கு நாங்க காய் அனுப்புறோம்கிறதையும் எழுதிக் கொடுத்துடுவோம். எங்ககிட்ட காய் வாங்குற வியாபாரியும் இதே மாதிரி ஒரு செட் ஆவணங்களை எங்ககிட்ட கொடுத்து வெச்சிருக்கார். இதையெல்லாம் செக்போஸ்ட்ல காட்டினாலே, லாரியை உள்ள அனுமதிச்சிடுறாங்க. பிறகெதுக்கு தமிழக அரசாங்க லைசென்ஸுனுதான் பேசாம இருக்கோம். இருந்தாலும், சங்கத்து மூலமா மொத்தமா எல்லாருக்கும் எடுக்கலாம்னும் பேசிக்கிட்டு இருக்காங்க” என்றார்.

சோதனை சாத்தியமா?

காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களின் தன்மை அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருக்கிறதா என்பதை தரச்சோதனை மூலம் உறுதிப்படுத்துவோம் என்று அரசுத் தரப்பில் சொல்லப்படுவது குறித்து பலருக்கும் பலவித சந்தேகங்கள் இருக்கின்றன.

இதுகுறித்து, இந்த மார்க்கெட்டுக்கு தினமும் காய்கறிகளை அனுப்பி வரும் விவசாயிகளில் ஒருவரான நெடுமாறன், “அதிகாரிகள் ஏதாவது ஒரு பெட்டியில இருந்து காய்களை எடுத்துட்டு போய் சோதனை பண்றாங்க. அந்த சான்றிதழையும் நம்மகிட்ட கொடுக்கிறதில்லை. ஏக்கர் கணக்குல வெள்ளாமை வெக்கிற பெரிய விவசாயி, ஒரு நாளைக்கு 100 பெட்டி அளவுக்கு காய் கொண்டு வருவார். சின்ன விவசாயி பத்து பெட்டிதான் கொண்டு வருவார். ஏதாவது ஒரு பெட்டியில இருந்து காய் எடுத்துட்டுப் போய் சோதனை செய்றது எல்லாம் எப்படி சரிப்பட்டு வரும்னு தெரியலை.

கேரளாவுக்கு நம்ம காய்தான் போயாகணும். இங்க இருந்து போகலைனா அவங்களுக்கு வேற வழி கிடையாது. அதனாலதான், அரசாங்கம் சொன்னாலும் அங்க இருக்குற மக்கள் கேட்கறதில்ல. வழக்கம்போல காய்ங்க போயிக்கிட்டிருக்கு. அதேசமயம், இதை சாதாரணமாவும் எடுத்துக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமா கேரளாக்காரங்க... இதை நடைமுறைக்குக் கொண்டுவந்தாலும் வந்துடுவாங்க. அதனால, இந்தப் பிரச்னையை மையமா வெச்சு நம்ம அரசாங்கம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க முயற்சி எடுக்கணும்” என்று சொன்னார். 

இயற்கை விவசாயம் ஒன்றே தீர்வு!

சோதனை நடத்தி காய்கறிகளுக்குச் சான்று தருவது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது பற்றி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் நம்மிடம் சொன்ன தவல்கள்: “காய்கறிகள்ல உள்ள பூச்சிக்கொல்லி ரசாயனங்களைப் பரிசோதிக்கிற வசதி எங்க பல்கலைக்கழகத்துலேயே இருக்கு. இப்போ அதை நவீனப்படுத்தறதுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. வழக்கமா விவசாயிகள் பயன்படுத்துற 20 பூச்சிக்கொல்லிகளோட அளவை

தமிழகக் காய்கறிகளுக்கு கேரளா தடை... தொடரும் சர்ச்சை... உண்மை என்ன?

மேலோட்டமா பாக்குறதுக்கு பெரிசா செலவாகாது. ஆனா, எந்தப் பூச்சிக்கொல்லியை எந்த அளவுல தெளிச்சிருக்காங்கனு துல்லியமா பரிசோதனை செய்யணும்னா செலவு பிடிக்கும்.

பூச்சிக்கொல்லி தெளிக்கிறதுக்கும் காய் பறிக்கிறதுக்கும் உள்ள இடைவெளி, அந்தப்பகுதியில பெய்யுற மழை, அடிக்கிற வெயில் மாதிரியான விஷயங்கள் சோதனை முடிவைத் தவறாக்க வாய்ப்புகள் இருக்கு. தோட்டப் பணியாளர் சொல்ற தவறான நாள் கணக்கை வெச்சிக்கிட்டு, ஒரு விவசாயி பரிசோதனைக்கு காய் அனுப்புறார்னு வெச்சுக்குவோம். அப்போ சோதனை செய்றப்போ அனுமதிக்கப்பட்ட அளவு பூச்சிக்கொல்லியையே அடிச்சிருந்தாலும், காய் பறிக்கிற இடைவெளி குறைவா இருக்குறதால முடிவு தவறாகிடும். அதனால சான்றிதழ் வழங்குறதெல்லாம் சாத்தியம் கிடையாது. இயற்கை விவசாயம் மட்டும்தான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வா இருக்கும்” என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

உண்மைதானே... ஏற்கெனவே இங்கே எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி விஷத்துக்குத் தடை இருக்கிறது. இதுபோல வேறு சில பூச்சிக்கொல்லி ரசாயனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், அவையெல்லாம் வேறு வேறு பெயர்களில் பல கடைகளிலும் விற்பனை ஆகிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், காய்கறிகளை சோதனை போட்டு என்னவாகப் போகிறது?

எரியுறத இழுத்தா... கொதிக்கறது நிக்கப்போகுது... அரசாங்கம் யோசிக்குமா?

ஜி.பிரபு

படங்கள்: வீ.சிவக்குமார்