மரத்தடி மாநாடு: மது ஒழிப்பும்...மகான் கதையும்!
தோட்டத்துக்குச் செல்லும் பாதையில் நட்டிருந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி‘ ஏகாம்பரம். அதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்‘ வெள்ளைச்சாமி. சற்று நேரத்தில் ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்துவிட... மூவரும் வரப்பில் அமர்ந்து கொண்டனர். ஒரு குட்டிக் கதையுடன் அன்றைய மாநாட்டை ஆரம்பித்தார், வாத்தியார்.
‘‘ஒரு குடிகாரன், ஒரு மகான்கிட்ட போயிருக்கான். அந்த மகான், ‘என்னய்யா மது குடிச்சுட்டு வந்திருக்குற, தப்பில்லையா?’னு கேக்குறார். உடனே அந்தக் குடிகாரன், ‘அய்யா, திராட்சை சாப்பிடுறது தப்பா’னு கேட்டான். மகான், ‘தப்பில்லை’ங்கிறார். அதை, ‘ஜூஸாக்கி தண்ணீர் சேர்த்து குடிக்கலாமா’னு குடிகாரன் கேக்குறான். ‘அதுவும் தப்பில்லை, குடிக்கலாமே’னு மகான் சொல்றார். ‘அதைப் புளிக்க வெச்சா அதுதான் மது. இதைப்போய் தப்புங்கிறீங்களே சாமி’னு குடிகாரன் சொல்றான்.

உடனே, அந்த மகான் அவன்கிட்ட, ‘உன் தலையில செம்மண்ணைப் போட்டா வலிக்குமா?’னு கேட்டார். அவன் ‘வலிக்காது’ங்கிறான். அடுத்து ‘தண்ணியை ஊத்தினா வலிக்குமா?’னு மகான் கேட்டார். அதுக்கும் அவன், ‘வலிக்காது’னு சொல்றான். ‘அப்ப இதை உன் தலையில போடவா’னு கேட்ட மகான் ஒரு செங்கல்லைத் தூக்குறார். அவன், ‘அய்யோ வலிக்குமே’னு கத்தறான். அப்ப அந்த மகான் சொல்றார், ‘இப்ப புரியுதா... மது குடிச்சா தப்புங்கிறது’னு கேட்கவும் அந்தக் குடிகாரன் ஆளை விட்டா போதும்னு ஓடியேபோயிட்டான்.
‘‘என்னங்கய்யா... சூழ்நிலைக்கு ஏத்த கதையா... ஊரே இப்போ மதுவிலக்குக்கு ஆதரவா குரல் கொடுத்துக்கிட்டு இருக்கே’’ என்றார், காய்கறி.
‘‘அதுக்காகத்தான்’’ என்று சிரித்துக் கொண்டார் வாத்தியார்.
உடனே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.
‘‘திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாமக்கல் மாவட்டங்கள்ல கரும்புப் பயிர்ல வேர்ப்புழுத் தாக்குதல் அதிகமான அளவுல இருக்குதாம். விவசாயிகள் வேளாண்மைத்துறைகிட்ட முறையிட்டும் ஒரு நடவடிக்கையும் இல்லையாம். அதனால நூத்துக்கணக்கான ஏக்கர்ல கரும்பு அழிஞ்சுக்கிட்டு வருதாம். இந்த பாதிப்புக்கு நிவாரணமோ, பயிர் காப்பீடோ கிடைக்காதாம், பாவம் விவசாயிகள் புலம்பிக்கிட்டு கிடக்குறாங்க” என்றார், ஏரோட்டி.
‘‘ஆமாய்யா... என்கிட்டயும் சில விவசாயிகள் பேசுனாங்க. அவங்ககிட்ட முன்னோடி கரும்பு விவசாயி ‘திருச்செங்கோடு’ நடேசன் செல்போன் நம்பரைக் கொடுத்து பேசச் சொன்னேன். அவர் இதுக்கு எளிமையான தீர்வு சொல்லியிருக்கார். அதாவது சொட்டு நீர்ப்பாசனம் அமைச்சிருக்கிற கரும்பு வயல்லதான் வேர்ப்புழுத் தாக்குதல் இருக்குமாம். வயல்ல புழு தென்பட்டா... ரெண்டு, மூணு நாளைக்கு வரப்பு உயரத்துக்கு வயல்ல தண்ணி கட்டி நிறுத்தி வெச்சுட்டா, புழுக்கள் மூச்சு விட முடியாம இறந்திடுமாம்” என்றார், வாத்தியார்.
‘‘இதைச் சொல்லக்கூட அதிகாரிகளுக்கு நேரமில்லையா... அல்லது அவங்களுக்குத் தெரியலையா?’’ என்று கோபப்பட்டார் ஏரோட்டி.
‘‘கரும்புல புழு வந்தா என்ன? விளைச்சல் குறைஞ்சா அவங்களுக்கு என்ன? இவங்களாவது பரவாயில்லை. இந்த அரசியல்வாதிகள் அதுக்கு மேல. எந்தத் திட்டத்தை ஒழுங்கா செயல்படுத்துறாங்க’’ என்று வேதனைப்பட்ட வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘கர்நாடகா அரசு, பட்டுப்புழு உற்பத்தி செய்ற விவசாயிகளை ஊக்கப்படுத்தறதுக்காக தனியா அமைச்சகமே அமைச்சிருக்குதாம். மஞ்சள் பட்டுக்கூடுகளுக்கு ஒரு கிலோவுக்கு 30 ரூபாய், வெண் பட்டுக்கூடுகளுக்கு ஒரு கிலோவுக்கு 50 ரூபாய்னு ஊக்கத்தொகை கொடுக்குறாங்களாம். வருஷத்துக்கு 25 கோடி ரூபாய் அளவுக்கு ஊக்கத்தொகை கொடுக்கிறாங்களாம், அந்த மாநிலத்துல. ஆனா, தமிழ்நாட்டுல 34 ஆயிரம் ஏக்கர்ல மல்பெரி சாகுபடி பண்ணி 20 ஆயிரத்து 863 விவசாயிகள் பட்டுப்புழு வளர்த்துட்டு இருக்குறாங்க. இவங்களை அரசாங்கம் கண்டுக்கறதேயில்லை. இப்போ சீனாவுல இருந்து கச்சாப்பட்டு இறக்குமதியகுறதால, 450 ரூபாய்க்கு விற்பனையான உள்ளூர் பட்டுக்கூடு, 200 ரூபாய்க்குத்தான் விற்பனையாகுது. இதனால விவசாயிகளுக்குப் பெரிய அளவுல நஷ்டமாம். தமிழ்நாட்டுல இருக்குற ‘பட்டு வளர்ச்சித்துறை’ கொள்முதல் மையங்கள் கூட முறையா செயல்படுறதில்லையாம். தமிழ்நாட்டுல உற்பத்தியாகுற பட்டுக்கூடுகள்ல பாதியைக்கூட அரசு கொள்முதல் மையங்கள்ல வாங்க மாட்டேங்குறாங்களாம்’’ என்றார், வாத்தியார்.
‘‘இங்க எந்த அமைச்சரை எப்போ வீட்டுக்கு அனுப்பலாம்... வீட்டுக்கு அனுப்புனவங்கள்ல யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம்னு யோசிக்கிறதுக்கே முதலமைச்சருக்கு நேரம் பத்தலை. உனக்கு பட்டுபுழு விவசாயிகளுக்கு தனி அமைச்சகம் கேக்குதோ... ரொம்பத்தான்யா ஆசை’’ என்று நக்கலாகச் சொன்னார், ஏரோட்டி.
‘‘யோவ்... ஒரு முக்கியமான சேதியை மறந்துட்டேன்யா... இது, பருவ மழை காலங்கிறதால ஆடு, மாடு, கோழிகளுக்கு நோய் தாக்க வாய்ப்பிருக்குதாம். அதனால தடுப்பூசி போடணுமாம்யா. அடுத்து குறிப்பா நாட்டுக்கோழிக்கு ‘வைட்டன்-பி’ சத்து சரியா கிடைக்காட்டி பல நோய்கள் வருமாம். ஆனா, வாரம் ரெண்டு முறை கோழிகளுக்கு மோரைக் குடிக்கக் கொடுத்தா இந்தச் சத்து கிடைச்சுடுமாம். இந்தத் தகவலை கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் சிவக்குமார் சொல்லியிருக்கார்’’ என்றார், வாத்தியார்.
அந்த நேரத்தில் பக்கத்துக் காட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் கும்பலாக ஏரோட்டியின் தோட்டத்துக்குள் நுழைய, அவற்றை விரட்டிக்கொண்டு ஓடினார், ஏரோட்டி.
அத்தோடு அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
ஓவியம்: ஹரன்

உலாவில் உழவாளி...
உங்களிடமிருந்து ஏராளமான புகார்கள் உழவாளிக்கு வந்தவண்ணம் உள்ளன. புகார்களுக்கு ஆதாரம் சேகரிக்க, உழவாளி உலா சென்றுள்ளார். அடுத்த இதழில், உங்களைச் சந்திப்பார்...
மணம் கண்டறிய ஓர் கருவி!
மல்லிகை, முல்லை, ஜாதிமுல்லை, செவ்வந்தி, செண்பகப்பூ, ரோஜா ஆகிய பூக்களில் இருந்து பன்னீர், வாசனை திரவியங்கள் தயாரிக்க முடியும். அப்படி மதிப்புக்கூட்டுவதற்கு ஏற்ற தரமான பூக்களைக் கண்டறிந்து, உற்பத்தியை அதிகரிப்பதற்காக ‘இ-நோஸ்’ என்று ஒரு கருவியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மலரியல் மற்றும் நில எழிலூட்டல் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

தற்சமயம் மல்லிகைப் பூவின் வாசனையை நுகர்ந்து தரத்தை மதிப்பீடு செய்யுமாறு அக்கருவியை வடிவமைத்திருக்கிறார்கள். விரைவில் அனைத்துப் பூக்களையும் முகர்ந்து தரத்தை மதிப்பீடு செய்யுமாறு வடிவமைத்து விடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அங்கக வேளாண்மைப் பயிற்சி!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறையில், ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி, அங்கக வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு நாள் கட்டணப் பயிற்சி நடைபெற உள்ளது. மண் வளப்பாதுகாப்பு, உயிர் உரங்கள், இயற்கை வழி பயிர் பாதுகாப்பு, வீட்டுத்தோட்டம், மண்புழு உரத் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடுகள், பஞ்சகவ்யா தயாரிப்பு, அங்ககச் சான்றளிப்பு குறித்த விவரங்கள் போன்ற விஷயங்கள் பயிற்சியில் சொல்லித் தரப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு:தலைவர் மற்றும் பேராசிரியர், வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003.தொலைபேசி எண்: 0422-6611206.