Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 13

மண்ணுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!

புவி வெப்பம்... மண்ணில் ஏற்படும் மாற்றங்கள்!

ரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளிக் கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும், ‘காலுக்குக் கீழுள்ள தூசு’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சரியங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதுமே இத்தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கும் இந்தத் தொடர்.

மண்ணுக்கு மரியாதை! - 13

ஒரு காலத்தில் இந்தியாவில் பஞ்சத்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது எனப் படித்திருப்போம். 1770 மற்றும் 1947-ம் ஆண்டுகளில் நடந்த வங்காள பஞ்சம் எதனால் ஏற்பட்டது தெரியுமா? நெல் பயிரைத் தாக்கிய ஒரு நோயால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. 10 மில்லியன் மக்களைக் காவு கொண்டது அந்தக் கொடிய பஞ்சம். இதேபோன்ற ஒரு நிகழ்வு, வருங்காலத்தில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அச்சுறுத்துகின்றன, பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள். அதில் முக்கியக் காரணியாகத் திகழப்போவது பருவநிலை மாற்றம். மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவான பருவநிலை மாற்றத்தால் இடியாப்பச் சிக்கலாகச் சிக்குண்டு கிடக்கிறது, பூமிப்பந்து. பஞ்சபூதங்களும் தலை சுற்றிக் கிடக்கின்றன. இதனால், அவற்றின் வழக்கமான செயல்களில் மாற்றங்கள் உண்டாகின்றன. விளைவு, பருவம் தப்பிப் பெய்யும் மழை, சுட்டெரிக்கும் வெயில், பட்டம் தவறிப்போகும் விதைப்பு, விளைச்சல்... என அனைத்தும் அசாதாரண நிலையில் இருக்கின்றன.

ஒரு காலத்தில் மாதம் மும்மாரி பெய்த மழை, தற்போது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ‘நானும் இருக்கேன்’ என ‘உள்ளேன் ஐயா’ சொல்லி விளையாடி விட்டுப் போகிறது அல்லது ஆவேசமாகப் பெய்து ஒரு வழி செய்து விட்டுப் போய் விடுகிறது. ஒவ்வொரு பட்டத்துக்கும் விதைக்க முடியாமல் விவசாயிகள் படும் துயரம் சொல்லி மாளாது. போகிற போக்கைப் பார்த்தால், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழியையே மறக்கடித்து விடும் போலத் தெரிகிறது, இந்தப் பருவநிலை மாற்றம்.

மழைக் காலத்தில் வெயிலும், வெயில் காலத்தில் மழையும் சூழல் சிதைவை உள்ளங்கை நெல்லிக்கனியாகக் காட்டி வருகின்றன தற்போது. பருவநிலை மாற்றம், ‘அத்தனை கொடுமையான விளைவுகளையா ஏற்படுத்தி விடும்?’ என்ற கேள்வி இன்னமும் பலருக்கு இருக்கிறது. தொழிற்சாலைகள் வெளிவிடும் வாயுக்கள், வாகனங்களில் வெளியாகும் புகை, அனல்மின் நிலையத்தில் நிலக்கரியை எரிப்பதால், உருவாகும் கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவை வளிமண்டலத்தில் அதிகமாகக் கலக்கின்றன. இந்தக் கார்பன்-டை-ஆக்சைடு சூரிய கதிர்களை அதிகளவில் கிரகிக்கும் ஆற்றல் கொண்டது. அதனால்தான் புவிவெப்பமடைந்து, பனிமலை உருகி, கடல் மட்டம் உயர்வது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.

மண் சூடாவதால் என்ன பிரச்னை?

பருவநிலை மாற்றத்தால் மண்ணிலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. பூமி வெப்பமாவதற்குக் காரணம் மண்தான். புவி வெப்பமாவதால் ஏற்படும் பல பிரச்னைகளைக் கவனிக்கும் நாம், மண் வெப்பமாவதைக் கவனத்தில் கொள்வதில்லை. மண்தான் உலகிலேயே மிகப்பெரிய கரிமச் சுரங்கம். காற்றில் இருக்கும் கார்பன்-டை-ஆக்சைடை விட, மண்ணில் இருக்கும் கார்பன்-டை-ஆக்சைடு வீரியமானது. மண்ணில் இருக்கும் கரிமம் இயற்கையிலேயே சிதைக்கப்பட்டு, கார்பன்-டை-ஆக்சைடாகக் காற்றில் கலக்கிறது. இது வழக்கமாக ஏற்படும் விளைவு. இத்துடன் மனிதர்களால் வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடும் சேரும் போது பாதிப்பின் வீரியம் அதிகரிக்கிறது.

கார்பன்-டை-ஆக்சைடு உருவாக்கும் நெல் வயல்கள்!

மண், கார்பன்-டை-ஆக்சைடை மட்டும் வெளியேற்றுகிறது என நினைக்காதீர்கள். மீத்தேன், நைட்ரைஸ்-ஆக்சைடு ஆகியவற்றையும் வெளியேற்றுகிறது. நீர் தேங்கியுள்ள நிலங்களில் மீத்தேன் வாயு வெளியேறுகிறது. நீர் தேங்கியுள்ள நிலங்கள் எனக் குறிப்பிடுவது நெல் வயல்களைத்தான். ஆகையால், காய்ச்சலும், பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சுவதும், நெல் வயலில் அசோலா வளர்ப்பதன் மூலமும் மீத்தேன் வாயு வெளியிடுவதைக் கட்டுப்படுத்தலாம். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டினாலும் நைட்ரஸ்-ஆக்சைடு வெளியேறுகிறது. உலகில் உருவாகும் மீத்தேன் வாயுவில் 47 சதவிகிதம் விவசாய நிலங்களில்தான் உருவாகிறது. இதுபோல, வாயுக்கள் மண்ணில் உருவாவதால், மண்ணின் இயற்பியல் பண்புகள் மாற்றமடைகின்றன. நேர்மின் அயனிப் பரிமாற்றம், மண் கட்டுமானம், நீர்ப்பிடிப்புத் தன்மை, மண் துகள்களுக்கு இடையேயான இடைவெளி போன்றவை அதிகரிப்பதால் மண் உப்புத்தன்மை உடையதாக, அமிலத்தன்மை உடையதாக மாறுகிறது.

மற்றொரு புறம், புவியின் வெப்பம் அதிகரிப்பதால், வளமான மண்ணில் நுண்ணுயிர்களின் தாக்கம் அதிகமாகிச் சிதைத்தல் பணி விரைவாக நடைபெறும். மட்க வைக்கும் தன்மை மிக வேகமாக நடப்பதால், மண்ணின் வளம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். இது மகிழ்ச்சியான செய்தியாக நாம் பார்க்கிறோம். ஆனால், அதன் எதிர்விளைவாக, கார்பன்-டை-ஆக்சைடு அதிகளவில் உற்பத்தியாகும். இப்படி கார்பன்-டை-ஆக்சைடு காற்றில் கலக்கக் கலக்க பூமி சூடாகிக் கொண்டேயிருக்கும்.

நைட்ரஜனுக்குச் சிக்கல்!

பருவம் தப்பி எதிர்பாராமல் திடீரென்று அடித்து ஊற்றும் பெருமழையில் மண்துகள்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. இப்படி மண் அரிமானம் ஏற்படுவதால், மேல் மண்ணில் உள்ள இயற்கைச் சத்துக்கள் நிலத்தில் இருந்து அடித்துச் செல்லப்படுகின்றன. இப்படிச் சத்துக்கள் இழந்த நிலத்தில் மகசூலைக் கூட்டுவதற்காக ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் அதிகளவில் பயன்படுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள், விவசாயிகள். உலகில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமானால், மண்ணில் உள்ள அங்ககக் கரிமம் 11% அளவுக்குக் குறைகிறது என்கிறது, ஓர் ஆய்வு முடிவு. உலகிலுள்ள மொத்த நைட்ரஜனில் 10% குளிர்பிரதேசங்களில் உள்ள மண்ணில்தான் இருக்கிறது. ஆனால், பருவநிலை மாற்றத்தால் அதற்கும் சிக்கல் எழுந்துள்ளது. கார்பன், நைட்ரஜன் விகிதாசாரத்தில் வேறுபாடு உருவாகிறது. இதெல்லாம் பருவநிலை மாற்றத்தால் மண்ணில் ஏற்படும் எதிர் விளைவுகள்.

மழை இல்லாவிட்டாலும் அரிமானம்!

கழிமுகப் பகுதிகளில் அலையாத்திக் காடுகள் அதிகரிப்பதால் அந்தப் பகுதியில் உள்ள மண் முழுவதும் அமில, கந்தகத் தன்மை உள்ளவையாக மாறிவிடுகின்றன. சதுப்பு நிலக்காடுகளாக மாறி விடுவதால், அந்த இடத்தில் வேறு பயிர்கள் சாகுபடி செய்யும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. ஒரு பக்கம் அளவுக்கு அதிகமாகப் பொழியும் மழையால் ஏற்படும் விளைவுகளைப் பார்த்தோம். அதே நேரத்தில் மற்றொருப் பக்கம் மழையே பொழிவதில்லை. இதனால் செடி கொடிகள் தாவரங்கள் இல்லாமல் மண் அரிமானம் அதிகளவு நடக்கும். காற்றினால் கூட மண் அரிமானம் நடக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது மட்டுமல்ல மண் உருவாகும் விதத்தில் கூட மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது, இந்தப் பருவநிலை மாற்றம்.

-வாசம் வீசும்

தொகுப்பு: ஆர்.குமரேசன்

நீ.செல்வம், ஆ.பாலமுருகன்