Published:Updated:

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

சுமை விகடன், ஜூலை 25-ம் தேதியிட்ட இதழில், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து... பணியம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் சிவக்குமார், ஊர்மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற விஷயத்தைப் பதிவு செய்திருந்தேன். அடுத்த சில நாட்களில் சிவக்குமார் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளியது, காவல்துறை.

ஆடு மேய்க்கும் பெண்ணை வன்புணர்ச்சி செய்ய முயன்ற காமுகன் ஒருவனை, ஊர்மக்கள் நையப் புடைத்திருக்கின்றனர். கடுங்கோபத்துக்காளாகி இருந்த அந்த மக்களிடம் இருந்து, அந்தக் காமுகனை மீட்டுக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார், சிவக்குமார். ஆனால், காமுகனைக் கைது செய்வதற்குப் பதிலாக சிவக்குமாரைச் கைது செய்திருக்கின்றனர். இதனால் அதிர்ந்து போன சென்னிமலை ஒன்றியமே, கட்சி பேதமில்லாமல் ஒன்று திரண்டு, காவல் நிலையத்தை முற்றுகையிட... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்து மக்களிடம் சமாதானம் பேசியிருக்கிறார். ‘என்னய்யா இப்படிப் பண்றீங்களே அய்யா’ என்ற மக்களின் கேள்விக்கு, ‘எல்லாம் மேலிடத்து உத்தரவு’ என்று கையைப் பிசைகிறார்களாம் காவலர்கள்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

ஏன் இந்த வன்மம்? சிவக்குமார் சொல்வதைக் கேட்க அதிர்ச்சியாக இருக்கிறது. “2001-ம் ஆண்டுப் பெருந்துறை சிப்காட் வளாகத்துக்குள் ஜவுளி ஆலைகள், சாயப் பட்டறைகள், குடிபுகுந்தன. ‘வெளியேற்றப்படும் கழிவு நீரின் தன்மை 2,100 டி.டி.எஸ் அளவுக்குள் இருந்தால், அக்கழிவு நீரைச் சொந்த நிலத்தில் விட்டுக் கொள்ளலாம்’ என்ற விதி அப்போது நடைமுறையிலிருந்தது. அதனால், சில சாயப்பட்டறை முதலாளிகள் ஒன்றுகூடி, பணியம்பள்ளி பஞ்சாயத்தில் 71 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் கழிவு நீரை விட்டுக்கொள்ள அனுமதி கோரினர்.

‘கழிவு நீர் செல்லும் பிரதானக் குழாயிலிருந்து ஒரு சிறிய குழாய் இணைப்பைக் கொடுக்க வேண்டும். அக்குழாய், பஞ்சாயத்துக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பஞ்சாயத்து மூலமாக அவ்வப்போது, அக்குழாயில் இருந்து நீர் எடுத்து ஆய்வு செய்து, கழிவு நீரின் தன்மை குறிப்பிட்ட அளவில் இருக்கிறது என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்வோம்’ என்ற நிபந்தனையோடு அனுமதி கொடுத்தோம். ஆனால், அவர்கள் அப்படி இணைப்புக் கொடுக்காமல் சாயக்கழிவு நீரை நேரடியாக பூமியில் விட்டனர். ஓராண்டுக்குள் சுற்றுவட்டார கிணறுகளில் செந்நீர் பெருக ஆரம்பித்தது. அப்போதுதான், நடந்துவிட்ட விபரீதம் மக்களுக்குத் தெரிந்தது. அந்தச் சமயத்தில், சாயப்பட்டறை வெளியேற்றிய கழிவு நீரை எடுத்து ஆய்வு செய்த போது, 6,500 டி.டி.எஸ் இருந்தது. இவ்வளவு இருந்தால், காடு, கழனி விளங்குமா? ஆடு, மாடுகள்தான் அந்த நீரைக் குடிக்க முடியுமா?

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

உடனே, ஊர் கூடி கழிவு நீர் சுமந்து வரும் குழாயைப் பிடுங்கி எறிந்தனர். அன்றைய மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டோம். அவரோ, ‘உங்களைக் குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ள போட்டிடுவேன் ஜாக்கிரதை’ என மிரட்டி விரட்டியடித்தார். அந்த நேரத்தில் ‘சாயப்பட்டறைகள் கழிவு நீரை ஜீரோ டிஸ்சார்ஜ் செய்து, மறுசுழற்சி முறையில் நீரைப் பயன்படுத்த வேண்டும். கடைசியில் மிஞ்சும் திடக் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்’ எனச் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புதான் எங்கள் வாழ்வாதாரங்களை அடியோடு பறித்து விட்டது. மறுசுழற்சி முறையில், கழிவு நீர் ஆவி ஆக ஆக, மிஞ்சிய நீரில் டி.டி.எஸ். 30,000, 40,000 என எகிறியது. அதிக விஷம் கூடிய அதாவது சுண்ட காய்ச்சிய விஷ நீரை, போர் போட்டு பூமிக்குள்ளும், குழிதோண்டி குழிக்குள்ளும் விட்டு, மேலே விறகுகளைப் போட்டு மூடி வைத்து விட்டனர், ஆலை முதலாளிகள். வெளியில் கழிவு நீரைக் காண முடியவில்லை. ஆனால் சுற்று வட்டார கிணற்று நீரில் டி.டி.எஸ் அளவு கூடிக்கொண்டே போக... சந்தேகம் வந்து ஆய்வு செய்தபோதுதான், இந்த அநியாயம் வெளிச்சத்துக்கு வந்தது. அப்போதிலிருந்து இன்று வரை மக்கள் துணையோடு சூழல் மாசுபாட்டை எதிர்த்துப் போராடி வருகிறேன். இதுதான் என்மேல் பொய் வழக்குப் போடப்பட்டதற்கான காரணம்” என்றார், சிவக்குமார்.

அப்போதிருந்து இன்று வரை பணியம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பொறுப்பை சிவக்குமார்தான் வகித்து வருகிறார்.

2002-ம் ஆண்டில், தென் ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள ஜோகன்ஸ்பர்க் நகரில், ‘உலக பூமி மாநாடு’ நடைபெற்றது. அடியேனும் அதில் கலந்து கொண்டேன். உலகம் முழுவதிலுமிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் பரிகாரம் தேடி அங்கே குவிந்திருந்தனர்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

‘நாங்கள் சூரியனைத் தொலைத்து விட்டோம் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவ வாருங்கள்’ என ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கல்லூரிப் பெண்கள் கண் கலங்க கோரிக்கை வைத்தனர். ‘நாங்கள் வசிப்பது ஒரு சிறிய தீவு. அந்தத் தீவில் ஏகப்பட்ட இரும்பு உருக்கும் தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் இரும்பை உருக்கி வருவதால், தொழிற்சாலையிலிருந்து கிளம்பும் கரிய மற்றும் செம்மண் புகை இரண்டும் இணைந்து வளி மண்டலத்தில் ஒரு தூசு படலமாக விரிந்து விட்டது. சூரியனின் மெல்லிய கதிர் கரங்களால் அந்தக் கனத்த தூசு திரையை உடைக்க முடியவில்லை. அதனால், சூரியனைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகி விட்டன” என்று அந்தப் பெண்கள் அழுத காட்சி, எனக்கு சிப்காட்டைத்தான் நினைவுபடுத்தியது.

சிப்காட்டில் உள்ள ஆலைகள், இரும்புத் தாதுவிலிருந்து, இரும்பைப் பிரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனக் கழிவுகளை ஆங்காங்கே... சிப்காட் வளாகத்தில் இருக்கும் குழிகளில் கொட்டி வைத்துள்ளனர். மழைநீர் சேரும்போது அந்த ரசாயனக் கழிவுகளும் கரைந்து, முடிந்தவரை நச்சுத் தன்மையை அந்தப் பகுதி நீரில் கூட்டி வருகிறது. கனமழை பொழியும் போது, இந்த நச்சுக் கழிவுகள், நொய்யல் ஆற்றில் கலக்க... நொய்யல் காவிரியில் கலக்க... தஞ்சை தரணியில் நஞ்சுதான் பாயும். அந்த மண்ணில் விளையும் உணவை உண்டால் மக்கள் உயிருடன் வாழ முடியுமா? நெல் களஞ்சியமே விஷக்களஞ்சியமாக மாறி விடும்.

இந்த கம்பெனிகள், ஆட்சியாளர்களுக்குத் தங்க முட்டையிடும் வாத்துகள். தவறு செய்தாலும் நடவடிக்கை பாயாது. தேர்தல் வரும்போது அரசியல்வாதிகள் அவர்களிடம்தானே கையேந்த வேண்டும். அதனால், கட்சி பேதமில்லாமல் கம்பெனி முதலாளிகளுக்கு வால் பிடிக்கிறார்கள்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

இந்தியா, இளைஞர்கள் மிகுந்த நாடு, அறிவாளிகள் மிகுந்த நாடு, உழைப்பாளிகள் மிகுந்த நாடு... என்பதற்காக யாரும் தொழில் தொடங்க, முதலீடு செய்ய முன்வரவில்லை. மோடி சொல்வதுபோல, ‘திறன்மிகு இந்தியா’ என்பதற்காக யாரும் வரவில்லை. பிறகு எதற்காக வருகிறார்கள்? இந்தியாவில் நிலத்தில் முதலீடு என்பது... பாதுகாப்பானது, மதிப்புக் கூடக்கூடியது. வேண்டாம் என்கிறபோது நிலத்தை விற்றுப் பணத்தை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். எனவே வருவது தொழில் முதலீடு அல்ல. ரியல் எஸ்டேட் முதலீடே. மோடி மீண்டும் மீண்டும் பொய்யுரைக்கிறார்.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவைத் தடுப்பதால் கிராம வளர்ச்சி பாதிக்கும் என்கிறார். பொதுத்துறைக்கு, அதாவது சாலை, ராணுவம், மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அணைகள் போன்ற பொதுச் சேவைக்கு நிலம் கொடுக்க விவசாயிகள் தடைபோடவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தனியார் கம்பெனிகளுக்கு நிலம் தேவை என்கிறபோது, விவசாயிகள் ஒப்புதல் மற்றும் சமூகத் தாக்கம் பற்றிய ஆய்வு, மறுவாழ்வு, மறு குடி அமர்வு தேவை என்கிறோம். கார்ப்பரேட் கம்பெனிகள் பாதிக்கப்படும் என்று கண்ணீர் வடிப்பவருக்கு, விவசாயிகள் தற்கொலை பற்றி எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை.

-தொடரும்

தூரன் நம்பி

படம்: க.தனசேகரன்