Published:Updated:

2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.1,50,000 லாபம்! குதூகல வருமானம் கொடுக்கும் கொய்யா!

2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.1,50,000 லாபம்! குதூகல வருமானம் கொடுக்கும் கொய்யா!

‘ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த தட்பவெப்ப நிலையில், பருவத்துக்கேற்ப விளையும் காய்கறிகள், பழங்கள்தான் அந்த மண்ணில் வசிப்பவர்களுக்கு ஏற்றவை’ என்று சூழலியலாளர்களும், இயற்கை மருத்துவர்களும் பல்லாண்டு காலமாகச் சொல்லி வந்தாலும்... வெளிநாடுகளிலிருந்து ‘பளபள’வென இருக்கும் பழங்களை வாங்கி உண்ணப் பழகிவிட்ட நகர மக்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உள்ளூர் பழங்களை உதாசீனம் செய்வதுதான் நிதர்சனம். அப்படி நகர மக்களால் ஒதுக்கப்பட்டு வரும் பழங்களில் ஒன்று கொய்யா. ஆனால், கொய்யாவில் வைட்டமின்-சி உட்பட பல சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதனால்தான் வழிவழியாக இன்றளவும் கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் கொய்யாவின் மதிப்பு குறையாமல் இருந்து வருகின்றது.

உண்பவர்களுக்குச் சத்துக்களைக் கொடுப்பது போல, தன்னை விளைய வைப்பவர்களுக்கும் நிச்சய லாபத்தைக் கொடுக்கத் தவறுவதில்லை, கொய்யா. இதனால்தான் பலரும் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டம், வடஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன்.

2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.1,50,000 லாபம்! குதூகல வருமானம் கொடுக்கும் கொய்யா!

பராமரிப்பு இல்லாமலே பணம்!

கனிந்த கொய்யாப் பழத்தின் வாசனை காற்றில் கசிந்து வந்துகொண்டிருந்த ஒரு காலை வேளையில், லோகநாதனைச் சந்தித்தோம். ‘‘எனக்குச் சொந்த ஊர் கலசப்பாக்கம் பக்கத்துல இருக்கிற மேட்டுக்கார்குணம். பத்தாவது வரைக்கும் படிச்சிட்டு, அப்பாகூட சேர்ந்து நெல், கரும்பு, மணிலானு விவசாயம் பார்த்தேன்.  ஒரு கட்டத்துல சில தேவைகளுக்காக சொந்த ஊர்ல இருந்த 10 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு, இந்த ஊர்ல (வட ஆண்டாப்பட்டு) வந்து 25 ஏக்கர் நிலம் வாங்கினேன். நான் வாங்கினப்போ, தரிசா... புதர் மண்டிக் கிடந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா சுத்தம் செஞ்சு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். வழக்கமான முறையில மணிலா, நெல், கரும்புனு சாகுபடி செஞ்சேன். ஒரு பகுதியில பழ மரங்களை நடவு செய்யலாம்னு முடிவு செஞ்சேன்.

2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.1,50,000 லாபம்! குதூகல வருமானம் கொடுக்கும் கொய்யா!

எங்க கிராமத்துல ஒருத்தர் கொய்யாத் தோட்டம் வெச்சிருந்தார். அவர்கிட்ட யோசனை கேட்டு... 14 வருஷத்துக்கு முன்னாடி 2 ஏக்கர்ல கொய்யாவும், 2 ஏக்கர்ல சப்போட்டாவும் நடவு செஞ்சேன். சப்போட்டா, மரங்கள்ல நல்ல காய்ப்பு இருந்தலும், இதை பக்குவமா அறுவடை செய்து விற்பனை செய்யத் தெரியலை. அதனால சப்போட்டா மரங்கள்ல இருந்து சரியான வருமானம் கிடைக்கலை. இதனால கோபமான என்னோட மனைவி சப்போட்டா மரங்களை வெட்டிட்டாங்க. கொய்யா மரங்கள்ல அதிகமான பராமரிப்பு இல்லாமலே போதுமான அளவுக்கு வருமானம் கிடைச்சது. அந்த சமயத்துல ‘பசுமை விகடன்’ புத்தகத்தோட அறிமுகம் கிடைச்சது. அதைப்படிக்க ஆரம்பிச்சதும் இயற்கை விவசாய முறையில கொய்யாவை சாகுபடி செய்யலாம்னு முடிவெடுத்துட்டேன். வருஷத்துக்கு ரெண்டு முறை எரு கொடுக்கிறதோட சரி. வேற உரம் எதுவும் கொடுக்கிறதில்லை” என்று தெம்பாகச் சொன்ன லோகநாதன், தொடர்ந்தார்.

2 ஏக்கர்... 8,500 கிலோ!

“ரெண்டு ஏக்கர்ல 200 கொய்யா மரங்கள் நடவு செய்தேன். அதுல 30 மரங்கள் சேதமாகிடுச்சு. இப்போ 170 மரங்கள் காய்ப்புல இருக்கு. ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 500 காய்கள் கிடைக்கும். ஒரு காய் 50 கிராம்ல இருந்து 200 கிராம் வரை எடை இருக்கும். சராசரியா ஒரு மரத்தில் 50 கிலோ அளவுக்கு காய்கள் கிடைக்கும். மொத்தம் இருக்குற 170 மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு சராசரியா 8 ஆயிரத்து 500 கிலோ அளவுக்கு காய்கள் கிடைக்குது.

2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.1,50,000 லாபம்! குதூகல வருமானம் கொடுக்கும் கொய்யா!

கொய்யாவுக்கு நல்ல தேவை இருக்கிறதால வியாபாரிகளே நேரடியா பண்ணைக்கு வந்து காய்களைப் பறிச்சி, எடை போட்டு பணத்தைக் கொடுத்து எடுத்துக்குறாங்க. அதனால, விற்பனையில பிரச்னையே இல்லை. வியாபாரிகளுக்கு கிலோ 20 ரூபாய்னு கொடுக்கிறேன். தனியாக வாங்க வர்றவங்களுக்கு கிலோ 30 ரூபாய்னு கொடுக்கிறேன். சராசரியா கிலோ 25 ரூபாய்னு வெச்சுக்கிட்டா, 8 ஆயிரத்து 500 கிலோ கொய்யா மூலமா 2 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். இதில் எல்லா செலவும் போக ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார், லோகநாதன்.

தொடர்புக்கு,
லோகநாதன்,
செல்போன்: 95663-33915

காசி.வேம்பையன்

படங்கள்: கா.முரளி

வெப்பமண்டல ஆப்பிள்!

கொய்யாவின் அறிவியல் பெயர், ‘பெசிடியம் குஜாவா’ (Psidium guajava). இது, வெப்ப மண்டலப்பகுதிகளில் விளைவதால், இதை ‘வெப்பமண்டல ஆப்பிள்’ என்கின்றனர். இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகக் காணப்பட்டாலும் திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிக அளவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது.

ஆடிப்பட்டத்துக்கு ஏற்ற கொய்யா!

கொய்யா சாகுபடி செய்யும் விதம் பற்றி லோகநாதன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

‘‘கொய்யாவை தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகை உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். கொய்யா நடவுக்கு ஆடிப்பட்டம் சிறந்தது. இந்தப் பட்டத்தில் கிடைக்கும் பருவமழையில் செடிகள் நன்கு வேர் பிடித்து வளர ஆரம்பித்து விடும்.

தேர்வு செய்த நிலத்தை களைகள் நீங்குமாறு உழவு செய்து... 20 அடி இடைவெளியில் 2 அடி நீள, அகல, ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் ஏக்கருக்கு 100 குழிகள் வரை எடுக்கலாம். குழிகளை 10 நாட்கள் ஆறவிட்டு,  ஒவ்வொரு குழியிலும்... அரை அன்னக்கூடை எருவோடு மேல் மண்ணைக் கலந்து குழியின் முக்கால் பாகம் வரை நிரப்ப வேண்டும். பிறகு ஒட்டுக் கொய்யா நாற்றுக்களின் ஒட்டுப்பகுதி  தரையில் இருந்து அரையடி உயரத்துக்கு மேலே இருப்பது போல நடவு செய்து... மேல் மண்ணை நிரப்பி காற்றுப் புகாத அளவுக்குக் காலால் மிதித்து விட வேண்டும்.

நடவிலிருந்து 6 மாதங்கள் வரை வாரம் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும். செடிகள் வளர்ந்து மரமாக மாற ஆரம்பித்த பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் விட்டால் போதும். நடவு செய்த நான்கு ஆண்டுகள் வரை ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்ளலாம், நடவு செய்ததில் இருந்து எட்டு மாதங்கள் வரை பூக்கின்ற பூக்கள் அனைத்தையும் கிள்ளி விட வேண்டும். அதே போல, செடி உயரமாக வளர விடாமல் கவாத்து செய்து, பக்கவாட்டில் கிளைகள் விட்டு புதர் போல படரும்படி விட வேண்டும். நுனிக்கொழுந்தைக் கிள்ளிவிட்டால் பக்கக் கிளைகள் புதிதாக உருவாகும். அப்போதுதான் அதிகப் பழங்கள் கிடைக்கும். பறிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

கொய்யா மரங்களுக்கு ரசாயன உரம் வைத்தால் சுவை மாறுபடும். எனவே ஆண்டுக்கு இரண்டு முறை (மே மற்றும் செப்டம்பர் மாதங்கள்) தொழுவுரம் கொடுக்க வேண்டும். எரு வைப்பதற்கு முன்பு மரங்களில் தேவை இல்லாமல் இருக்கும் கிளைகளை நீக்க வேண்டும்.

மாவுப்பூச்சி உள்ளிட்ட ஒரு சில பூச்சித் தாக்குதல் இருந்தால்... டேங்குக்கு (10லிட்டர்) 50 மில்லி வேப்பண்ணெயையும், சிறிதளவு காதி சோப்பையும் கலந்து தெளிக்க வேண்டும். நடவு செய்து ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காய்கள் காய்க்கத் தொடங்கி, மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, முழு மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டிலும்  ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் காய்ப்பு அதிகமாக இருக்கும்.”