மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்?

நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்?

‘‘தென்னந்தோப்பில் மரநாய்த் தாக்குதல் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வழிசொல்லுங்கள்?’’

நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்?

கே.அய்யாவு, பேராவூரணி.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் வேளாண் வளர்ச்சி அலுவலர் வி.வீரப்பன் பதில் சொல்கிறார்.

பொதுவாக, தென்னந் தோப்புகளில் மரநாய்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும். குறிப்பாக பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர் பேராவூரணிப் பகுதிகளில் இதன் தாக்குதல் அதிகமாக உள்ளது.

இளநீரில் வழுக்கை உருவாகும் 7-ம் மாதத் தொடக்கத்தில், தனது கூரிய பற்களால் வட்டமாகத் துவாரமிட்டு கடைசிச் சொட்டு இளநீர் வரை பாளையிலேயே குடித்து விடும். நாயைப் போல் இவற்றுக்கும் மோப்ப சக்தி, இருப்பதால் சரியான பக்குவத்தில் உள்ள இளநீர்க் குலைகளையும், ருசியான சுவையுடன் கூடிய இளநீரையும் எளிதாகக் கண்டுகொள்ளும். கோகோ ஊடுபயிராகச் செய்யப்படும் இடங்களில் தென்னையில் தாக்குதல் குறைந்து, கோகோ பழங்களில் மரநாய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்?

இவை பொதுவாக மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவை. மனிதர்களைக் கண்டால் அறவே அவற்றுக்குப் பிடிக்காது. மோப்ப நாய்களால்கூட இவற்றின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க இயலாது. பகலில் இவை மரத்தின் கொண்டைப் பகுதிக்குள் படுத்து உறங்கிவிடும்; இரவில் நடமாடும்போது தவறுதலாகக் கூட சிறு சப்தத்தையும் எழுப்புவதில்லை.

மரநாய்கள் எல்லா ரக தென்னையின் இளநீர்க்குலைகளையும் கடித்து சேதப்படுத்தும். ஆனால், தென்னையில் ஏற்படும் எல்லா தாக்குதல்களும் மரநாய்களால் வந்ததவை அல்ல. சில இடங்களில் பழந்தின்னி வௌவால்கள், மர எலிகள், அணில்கள் கூட இவ்வகைத் தாக்குதலைச் செய்திருக்கும். காடுகளில் வளரும் வனமரங்களில் ஆண்டுதோறும் கிடைக்கும் பழவகைகள் எவையெவையென மரநாய்களுக்கு மிகவும் அத்துப்படியாகத் தெரியும். எந்த வகை மரம், எங்கு, எந்த மாதங்களில் பழம் கொடுக்கும் என்பது மனப்பாடமாகத் தெரியும். ஆரம்ப காலங்களில் காட்டுப்பகுதிகளில்தான் மரநாய்கள் வாழ்ந்தன. காலப்போக்கில, காடுகளின் பரப்பளவு குறைந்தபடியால், தென்னந்தோப்புகளில் வாழத் தொடங்கிவிட்டன.

மரநாய்களின் தாக்குதலைச் சமாளிக்க நஞ்சுணவு கலந்து வைக்கின்றனர் சில விவசாயிகள். அதை, அவை உண்பதில்லை. மாறாக, அணில், எலி, மயில், பருந்து போன்ற உயிரினங்கள் தவறுதலாக உண்டு

நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்?

இறந்து விடுகின்றன. சில நேரங்களில் மரத்திலிருந்து விழும் நஞ்சுணவைச் சாப்பிட்டு நாட்டுக்கோழிகள், கால்நடைகள் கூட இறந்து விடுகின்றன. தென்னையின் நம்பர் ஒன் எதிரி, சிவப்புக் கூன்வண்டு. காண்டாமிருக வண்டும் மரங்களுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும். நோய்களைப் பொறுத்தவரையில், ‘சாறு வடிதல் நோய்’, ‘தஞ்சை வாடல் நோய்’ ஆகியன மரத்தையே காலி செய்து விடுகின்றன. இவற்றையெல்லாம் மனதில் கொண்டால் மரநாய்களால் உண்டாகும், சேதாரம் பெரிய நஷ்டத்தைக் கொடுக்காது.

மரநாய், ‘அரியவகை விலங்கு’ என்று பட்டியலிடப்பட்டு, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆகையால், இந்த மரநாய்களைக் கொல்வது தண்டனைகுரிய குற்றம். எனவே தென்னந்தோப்புகளில் வரப்புப் பயிராக பல வகையான பழ மரங்களையும் வளர்த்தால், மரநாய்கள் அவற்றை உண்டு வாழும். இதன் மூலம் தென்னையில் ஏற்படும் சேதாரத்தை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 80128-92818.

‘‘சுண்டைச் செடியுடன், கத்திரிச் செடியை ஒட்டுக்கட்டி சாகுபடி செய்தால், நல்ல லாபம் கிடைக்குமா?’’

ஜே.குமாரசாமி, உடுமலைப்பேட்டை.

நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்?

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித் துறையின் தலைவர் முனைவர்.சரஸ்வதி பதில் சொல்கிறார்.

‘‘காய்கறிப் பயிர்களில் ஒட்டுக்கட்டும்  தொழில்நுட்பம் கடந்த 1 9 2 0 - ம் ஆண்டு வாக்கில் ஜப்பான் , கொரியா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டது.

காய்கறிப் பயிர்களில் ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகளை  ஒட்டுக் கட்டலாம். பூச்சி, நோய் தாக்காத, ஒட்டும் பண்புடைய செடியை வேர்ச்செடியாக வைத்துக் கொண்டு... அதிக விளைச்சலைத் தரக்கூடிய பண்புடைய வீரிய ரக தாய்ச்செடியை ஒட்டுக்குச்சியாகப் பயன்படுத்தி ஒட்டுக்கட்டலாம். இவ்வாறு ஒட்டுக்கட்டிய செடியை நடவு செய்யும்போது, செடியின் தரமும், பண்புகளும் உயரும்.

சுண்டை, கத்திரி ஆகியவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்பதால், இவற்றை ஒட்டுக்கட்ட முடியும். தவிர, சுண்டைக்காய்ச்செடி, தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையில் அதிக ஆண்டுகள் வளரும் தன்மையைக் கொண்டது. சுண்டைச்செடியை வேர்ச்செடியாகவும் நமக்கு வேண்டிய ரக கத்திரியை தாய்ச்செடியாகவும் வைத்து ஒட்டுக்கட்டும்போது... வேர் அழுகல், நூற்புழுத் தாக்குதல் ஆகியவை குறையும். இதனால், மகசூல் அதிகரிக்கும். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்கவும், தொடர்ந்து காய்கறிகளைப் பயிரிடும்போது மண்ணில் தோன்றும் நூற்புழு மற்றும் வேரழுகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் ஒட்டுக்கட்டும்  தொழில்நுட்பம் உதவுகிறது.

ஒட்டுச்செடிகளை ஜூன்-ஜூலை, டிசம்பர் - ஜனவரி ஆகிய மாதங்களில் நடலாம். வயலில்  நடவு செய்த 35 முதல் 40 நாட்களில், முதல் அறுவடை ஆரம்பிக்கும். ஒட்டுச்செடியை ஆறு அல்லது எட்டு மாதங்கள் கழித்து மறுதாம்பு செய்தால்... மேலும் நான்கு மாதங்கள் வரை வளர்த்து,

நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்?

அதிக விளைச்சலைப் பெற முடியும். தேவைப்பட்டால், மற்றொரு மறுதாம்பும் விடலாம்.

ஒட்டுக்கட்டும் முறைகளின் மூலம் உருவாக்கப்பட்ட கத்திரிச்செடியில் 15 மாதங்களில்...  ஒரு செடிக்கு சராசரியா க 12 முதல் 15 கிலோ வரையிலும்; ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக  125 டன் வரையிலும் மகசூல் பெறலாம்.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 0422-6611283

‘‘மண் ஃபிரிட்ஜ் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதன் சிறப்புகளையும், விலையையும் சொல்லுங்கள்?’’

எம்.சுந்தரி, சென்னை.

சென்னையில் உள்ள ‘சுதேசி மந்திர்’ அமைப்பைச் சேர்ந்த பவனேஷ் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்?

‘‘குஜராத்தைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர் ஒருவரது தயாரிப்புதான் மண் ஃபிரிட்ஜ். இதற்கு மின்சாரம் தேவையில்லை. ஃபிரிட்ஜின் மேல் பகுதியில் இருக்கும் டேங்கில் 10 லிட்டர் தண்ணீர் நிரப்பினால் போதும். கீழே இரண்டு அறைகள் இருக்கின்றன. இதில் 7 கிலோ வரை பழங்கள், காய்கறிகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம். சமைத்த உணவு வகைகளை வைக்க முடியாது. பொதுவாக சமைத்தப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது அடிப்படை விதி. இது

நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்?

காய்கறிகள், பழங்கள், போன்றவற்றை ஐந்து நாட்கள் வரையிலும், பால் பொருட்களை மூன்று நாட்கள் வரையிலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்கக் கூடியது இந்த ஃப்ரிட்ஜ். மண்பானை எப்படித் தண்ணீரைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறதோ அதே முறைதான் இதற்கும் அடிப்படை. மேலே இருக்கும் தொட்டியில் இருந்து பண்டங்கள் வைத்திருக்கும் சேம்பரைச் சுற்றித் தண்ணீர் வழிந்துகொண்டே இருக்கும். அந்தத் தண்ணீர் சேம்பரின் வெப்பத்தை உட்கிரகித்து, சேம்பரின் வெப்பத்தைக் குறைக்கிறது. உள்ளிருக்கும் பொருட்களும் வாடி வதங்கிப் போகாமல் இருக்கின்றன. மின்சார ஃபிரிட்ஜ் உள்ளே வைக்கப்படும் பொருட்களின் சத்துக்கள் விரயம் ஆகின்றன. மேலும், அதிலிருந்து வெளியாகும் வாயுக்கள் சுற்றுச்சூழலைக் கெடுத்து வருகின்றன. ஆனால், இந்த மண் ஃபிரிட்ஜில் வைக்கப்படும் காய்கறிகளில் உயிர்ச்சத்துக்கள் விரயம் ஆவதில்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ஃபிரிட்ஜின் விலை ரூ.6,500.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 044-32912341, 044-28546088

புறா பாண்டி

படங்கள்: ஜெ.விக்னேஷ்

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.