மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'ஒரு நாள் விவசாயி!'

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்

சிரமம் இல்லாத பழப்பயிர் சாகுபடி!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’.

‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

'ஒரு நாள் விவசாயி!'

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள பொன்னேகவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள முன்னோடி விவசாயிகள் பழனியப்பன், சுந்தர்ராஜன் ஆகியோரின் தோட்டத்தில், ஒருநாள் விவசாயிகள் பயற்சி பெற்றது குறித்து, கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழில்...

பத்து நிமிட வண்டிப்பயணத்தில் வந்து சேர்ந்தது, மஞ்சள் தோட்டம். “இது அஞ்சு மாச மஞ்சள் பயிர். இங்க இப்போ களை எடுக்கப் போறோம்” முன்னோடி விவசாயி பழனியப்பன் சொல்லி முடிப்பதற்குள், மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு தோட்டத்தில் இறங்கி விட்டனர், ஒரு நாள் விவசாயிகள்.

“மஞ்சள் கிழங்கை எவ்வளவு நாள் ஸ்டாக் வைக்கலாம்?” களையெடுத்துக்கொண்டே கேட்டார், ஜெயந்தி.

‘‘அறுவடை முடிஞ்ச மஞ்சள் கிழங்குகளை வேகவெச்சு பாலீஷ் போட்டு மூட்டை பிடிச்சு பக்குவம் பண்ணி வெச்சா, ஆறு வருஷம் வரைக்கும்கூட இருப்பு வைக்கலாம்” என்றார், பழனியப்பன்.

'ஒரு நாள் விவசாயி!'

“வாய்க்கால் வழிப் பாசனத்துக்கும் சொட்டு நீர்ப்பாசனத்துக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்ட இளங்கோவுக்கு,

“சொட்டு நீர்ப்பாசனம், விவசாயிங்களுக்குக் கிடைச்ச வரப்பிரசாதம். தண்ணீர் மிச்சமாகுறதோட சீரான பாசனமும் கிடைக்கும். வாய்க்கால்ப் பாசனத்தில ஒரு ஏக்கருக்கு பாயுற தண்ணியை, சொட்டுநீர்ப் பாசனத்தில் மூணு ஏக்கருக்குக் கொடுக்கலாம்” என்று பதில் சொன்னார், சுந்தர்ராஜன்.

மஞ்சள் தோட்டத்தில் களையெடுக்கும் பணி முடிந்ததும், அனைவரும் சப்போட்டா தோட்டத்துக்கு நகர்ந்தனர். சப்போட்டா மரங்களில் பழங்களைத் தேடிப் பிடித்து, அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

“நல்ல சுவையா இருக்கே” என அனைவரும் சொல்ல... ‘‘இது முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயத்துல விளைஞ்ச சப்போட்டாங்க. பஞ்சகவ்யா, மண்புழு உரம்னு கொடுத்து வளர்த்ததாலதான் அத்தனை சுவை’’ என்ற பழனியப்பன்,

'ஒரு நாள் விவசாயி!'

‘‘அதிக சிரமம் இல்லாமல் விவசாயம் பார்க்க நினைக்கிறவங்க பழப்பயிர் சாகுபடிக்குப் போயிடலாம். கொஞ்சமா பராமரிச்சா போதும். நாலாவது வருஷத்துல இருந்து நல்ல மகசூலை எடுக்கலாம். சப்போட்டா பழத்துக்கு என்னைக்குமே கிராக்கிதான்” என்றார்.
அந்த நேரத்தில் ‘அய்யோ’ என அன்பாதித்தன் அலற, அவரை இரண்டு மூன்று தேனீக்கள் வலம் வந்துகொண்டிருந்தன.

‘‘ஓ... தேனீ கொட்டிடுச்சா?’’ எனக் கலாய்த்த கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணவேணி, ‘‘தேனீ கடிப்பது ஒரு அக்குபஞ்சர்தான். வெளிநாடுகள்ல தேனீ வளர்க்கிறவங்ககிட்ட காசு கொடுத்து, தேனீக்களிடம் கொட்டு வாங்குறதுக்கு ஒரு கூட்டமே இருக்கு” என்றார் சிரித்தபடி.

'ஒரு நாள் விவசாயி!'

‘‘சப்போட்டா தோட்டத்தில பல இடங்கள்ல தேன் பெட்டிகளை வெச்சிருக்கேன். இதன் மூலமா மாதா மாதம் ஒரு வருமானம் வருது. அதில்லாம மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் உதவியா இருக்கிறதால மகசூலும் கூடுது” என்று சொல்லிக்கொண்டே தேனீப் பெட்டிகளைக் காட்டினார், சுந்தர்ராஜன்.

அடுத்து குழித்தட்டு நாற்றங்கால் தயாரிக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்ற சுந்தர்ராஜன், “தக்காளி, கத்திரி, மிளகாய், பப்பாளி போன்ற பயிர்களுக்கான நாற்றுகளை, தென்னை நார்க்கழிவுகளைப் பயன்படுத்தி குழித்தட்டு முறையில உற்பத்தி செய்றோம். இதனால குறைஞ்ச நாள்ல தரமான நாற்றுகள் கிடைக்கும்” என முடிக்க...

'ஒரு நாள் விவசாயி!'

“வெயில் இறங்க ஆரம்பிச்சிடுச்சு. இப்போ கிளம்புனாதான் சரியா இருக்கும்” என்று பழனியப்பன் எச்சரிக்கை செய்ய, பயிற்சியை நிறைவுசெய்து கிளம்பினர், ஒரு நாள் விவசாயிகள்.

-பயணம் தொடரும்

நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.

மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.

 ஜி.பழனிச்சாமி

 படங்கள்: த.ஸ்ரீனிவாசன்