மண்புழு மன்னாரு: பழைய சோறும் கலைவாணரும்!
பேப்பர்ல, டி.வி-யில, ரேடியோவுல வானிலைச் செய்திகளை வாசிக்கும்போது, ‘காஞ்சிபுரத்தில் 10 மில்லி

மீட்டர், கன்னியாகுமரியில் 20 மில்லி மீட்டர் மழை பெய்தது’னு செய்தி சொல்றதைக் கேட்டிருப்போம், பார்த்திருப்போம். இப்படி சென்டிமீட்டர், மில்லி மீட்டர் கணக்குல மழை அளவைச் சொன்னா, எந்த விவசாயிக்குப் புரியும்? பொதுவா கிராமப் பகுதியில, மழை பெஞ்ச மறுநாள், ‘என்னப்பா.... ராத்திரி, ‘ஒரு உழவு மழை’ பெஞ்சிருக்கும் போல’னு பெருசுங்க பேசிக்கிறதைக் கேட்கலாம். அதென்ன, உழவு மழை?
நிலத்தில, கலப்பையை வைச்சு உழவு ஓட்டறதுக்குத் தக்கபடி, ஈரப்பதம் இருக்கிற அளவுக்கு மழை பெஞ்சிருக்குனு அர்த்தம். இதை, நவீனகால கணிப்புப்படி, ஒரு உழவு மழைக்கு, 5 மில்லி மீட்டர் மழைப் பொழிவுனு படிச்ச விஞ்ஞானிங்க சொல்றாங்க. ஆக, 10 மில்லி மீட்டர் மழை பெஞ்சிருக்குனு இனி காதுல சேதி விழுந்தா, ரெண்டு உழவு மழை கிடைச்சிருக்குனு சந்தோஷப்படுங்க.
நமக்குத் தெரிஞ்சதெல்லாம், மழைன்னா இடி இடிச்சு பெய்றதுதான். ஆனா, பல வகையான மழை இருக்குனு இலக்கியத்துல எழுதி வெச்சிருக்காங்க.
ஆலி - துளி, துளியா மழை விழும்
சோனை - விடாமல் பெய்யும் மழை
தூறல் - சின்ன, சின்ன மழைத்துளிகள்
சாரல் - மலையில் பட்டு விழும் மழை
அடைமழை - நாள் முழுக்க பெய்யும் மழை
கனமழை - அளவில் பெரிய துளிகள் உள்ள மழை
மாரி - கனமழையைவிட வேகமானது.
ஆலங்கட்டி மழை - கட்டிக்கட்டியாக மழையுடனோ அல்லது தனியாகவோ பனிக்கட்டி விழுந்தால், அது ஆலங்கட்டி மழை.
பனிமழை - பனியானது மழையாகப் பொழிவது. இந்த வகையான மழை இமயமலை போன்ற சிகரங்களில் பெய்யும்.
ஆழிமழை - கடலில் பொழியும் இடைவிடாத மழையைக் குறிக்கும்.
புயல்மழை - புயல் என்பது காற்றுடன் வரும் மழையைக் குறிக்கும்.

மழை வரும் அறிகுறியைத் தெரிஞ்சிக்குறதுக்கு பல வழிமுறைகளை, நம்ம முன்னோருங்க பயன்படுத்தியிருக்காங்க. அதுல ஒரு நுட்பத்தைப் பத்தி இங்கே சொல்லப்போறேன். எலிங்க வெள்ளாமையைச் சேதம் செய்றதால, அதைக் கண்டாலே நமக்குப் புடிக்காது. ஆனா, இந்த எலிங்கள வைச்சுத்தான், மழை வரப்போற அறிகுறியைக் கண்டுபுடிக்க முடியும். அதாவது, ஏரிப் பகுதியில உள்ள எலிங்க, ஏரிக் கரைக்கு உள்பக்கமா வளை தோண்டி குடியிருந்தா, அந்த வருஷம் மழை சொல்லிக்கும்படி இருக்காது. இதே, ஏரி கரைக்கு வெளியில வளை தோண்டியிருந்தா... அந்த வருஷம் நல்ல மழை பெய்யுமாம்.
மறைஞ்ச நடிகர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஒரு நாள் பழைய சாதத்துல மோர் விட்டு, சின்னவெங்காயம், பச்சை மிளகாயைக் கடிச்சு, ருசிச்சு சாப்பிட்டுக்கிட்டிருந்தாராம். அவரைப் பார்க்க வந்த நண்பர், “என்னாங்க நீங்க... பழையதைப் போய் சாப்பிட்டுக்கிட்டிருக்கீங்க?”னு கேட்டிருக்கிறாரு. பதில் பேசாத கலைவாணர், தன்னோட உதவியாளரைக் கூப்பிட்டு, “நீ போய் ஹோட்டல்லே பழையது வாங்கிட்டு வா”னு அனுப்பியிருக்காரு. எங்கெல்லாமோ அலைஞ்சு, திரிஞ்சு பார்த்துட்டு, களைச்சுப் போய் வீட்டுக்கு வந்த அந்த உதவியாளர், “ஒரு ஹோட்டல்லேயும் ‘பழையது’ கிடைக்கலைங்க”னு சொன்னாராம். “பார்த்தீங்கல்ல.. விலைக்கு வாங்க முடியாத அமிர்தம், இது’’னு வந்த நண்பர்கிட்ட சொன்னாராம் கலைவாணர்.
அவர் சொன்னது சரிதானுங்களே... நூடுல்ஸ், பீட்சா, பர்கர்னு எல்லாத்தையும் ஒரு மணி நேரத்துக்குள்ள செய்துடலாம். ஆனா, சத்தான பழைய சோறு வேணும்னா, 7 மணி நேரம் காத்திருக்கணும். நல்ல விஷயத்துக்குக் காத்திருக்கிறது நல்லதுதானே!
அந்தக் காலத்துல, தோட்டத்துல வேலை செய்யுற ஆட்கள் ஒழுங்கா வேலை செய்றாங்களானு கணிக்க சாப்பாட்டையே கருவியா பயன்படுத்தியிருக்காங்க. காலையில வேலை ஆட்களை வயல்ல இறக்கிவிட்டு வேலை செய்யவிடுவாங்க. மதியம் எல்லாருக்கும் கம்பங்கூழ் குடிக்க கொடுப்பாங்க. நிறைய கம்பங்கூழைக் குடிக்கிற ஆட்களுக்கு சபாஷ் சொல்லி, தினமும் வேலை தருவாங்க. கொஞ்சமா கூழைக் குடிக்கிற ஆட்களுக்கு வேலை தரமாட்டாங்க. ஏன்னா, உடல் உழைப்பு நல்லா இருந்தா மட்டும்தான் கம்பங்கூழை வயிறு முட்ட குடிக்க முடியும். வளைஞ்சு, நெளிஞ்சு வேலை செய்யாத ஆளுங்களால, கூழை சரியா குடிக்க முடியாதுங்கிறதுதான் காரணமாம்.
ஓவியம்: ஹரன்