மாடியில் மூலிகைத்தோட்டம்!
மாடித்தோட்டம் அமைத்து நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்வது போல, சின்னச்சின்ன வியாதிகளுக்கு வைத்தியம் செய்துகொள்ளும் வகையில் சில மூலிகைச் செடிகளை தன் மாடித்தோட்டத்தில் ஏழு ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறார், சென்னை, ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த சுபஸ்ரீ.

‘எம்.எஸ்.சி பிசிக்ஸ் படிச்சிட்டு, சித்த மருத்துவர்கிட்ட உதவியாளரா வேலை பார்த்துட்டு இருந்தேன். எனக்கு தோட்டம்னா ரொம்ப பிரியம். அதனால, வீட்டுல மாடித்தோட்டம் அமைச்சிருந்தேன். அதைத் தெரிஞ்சுக்கிட்ட அந்த சித்த மருத்துவர்தான், மூலிகைத்தோட்டம் அமைக்க ஆலோசனை சொன்னார்.
எனக்கு ‘பசுமை விகடன்’, ‘விருஷ ஆயுர்வேதம்’ ஆகிய ரெண்டு புத்தகங்களும்தான் வழிகாட்டிகள். இப்ப 168 தொட்டிகள்ல மூலிகைகளை வளர்த்துட்டு இருக்கேன். அரிய வகை மூலிகைகளான எலும்பொட்டி, தழுதாழை, கொடிபசலைக்கீரை, நிலவேம்பு, கட்டுக்கொடி, வெட்டிவேர், கற்பூரவல்லி, முடக்கத்தான், திப்பிலி, ஓமவல்லி, நொச்சி, ஆவாரை, வல்லாரை, கேசவர்த்தினி, செம்பருத்தி, கொடிக்கிழங்கு, சீந்தில், நுணா (நோனி), குப்பைமேனினு பல மூலிகைகள் இங்க இருக்கு. ‘நரி மிரட்டி’னு ஒரு செடி இருக்கு. ரொம்பவும் அற்புதம் வாய்ந்த செடி. இது பூக்கிற தருணத்திலும், செழிப்பா இருக்கிற தருணத்திலும் இதைச் சுத்தி ஏகப்பட்ட பட்டுப்பூச்சிகள் பறக்கும்.

பசுமை விகடன் மூலமா தெரிஞ்சுக்கிட்டு இப்போ தட்டுக் கூடைகள்லயும் பயறு வகைகளை வளர்க்க ஆரம்பிச்சிருக்கேன். மூலிகைச் செடிகளுக்கு சாணம், மண்புழு உரம், மூலிகைப் பூச்சிவிரட்டினு இயற்கை இடுபொருட்களைத்தான் பயன்படுத்துறேன். வீணாகும் காய்கறிக் கழிவுகளையும் உரமா பயன்படுத்துறேன். இந்த மூலிகைச் செடிகளை என் குழந்தைபோல பாதுகாத்துக்கிட்டு வர்றேன். எங்க வீட்டுல தினமும் ஏதாவது மூலிகைத் துவையல் இருக்கும். அதனால் எங்களுக்கு மருத்துவச் செலவு ரொம்பவும் குறைஞ்சுடுச்சு” என்ற சுபஸ்ரீ,
“இப்ப நகரத்துல வசிக்கிறவங்களுக்கு சாதாரணமான மூலிகைகளைப் பத்திகூட தெரியுறதில்லை. அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. குரோட்டன்ஸ் செடிகளுக்கும், ஆங்கில மருத்துவத்துக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை, நம்ம மூலிகைகளுக்கு நாம கொடுக்கிறதில்லை. அதைப்பத்தின விழிப்பு உணர்வு மக்களுக்கு அவசியம். வீட்டுக்கு வீடு, மூலிகைத் தோட்டம் இருந்தா, நோய், நொடிங்க எட்டிக் கூடப் பார்க்காது” என்றார் உற்சாகமாக.
தொடர்புக்கு,
சுபஸ்ரீ,
செல்போன்: 96771-01627.
துரை.நாகராஜன்
படங்கள்: பா.அருண்