நாட்டு நடப்பு
Published:Updated:

வெளுத்து வாங்கும் வெள்ளிக் கிழமைச் சந்தை!

வெளுத்து வாங்கும் வெள்ளிக் கிழமைச் சந்தை!

ந்தை என்றாலே அது ஏதோ உசிலம்பட்டி பக்கம், மதுரை, தஞ்சாவூர்... பக்கம் எதாவது கிராமத்தில் இருக்கும் என்ற எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். சிங்காரச் சென்னையில் வெள்ளிக்கிழமைதோறும் இயங்கி வருகிறது, ஒரு சந்தை. சென்னை விமான நிலையம் எதிரிலுள்ள திரிசூலம் ரயில் நிலையம் அருகேயுள்ள மலை அடிவாரத்தில் வாரம் ஒரு முறை கூடுகிறது, இந்த வெள்ளிக்கிழமைச் சந்தை.

வெளுத்து வாங்கும் வெள்ளிக் கிழமைச் சந்தை!

இங்கு ஐந்து ரூபாய் காய்கறிக் கூறுகளில் தொடங்கி பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் வரை கிடைக்கின்றன. பல்லாவரம் பகுதி மட்டுமல்லாமல் சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் இச்சந்தைக்கு வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். நாமும் சந்தையை ஒரு முறை வலம் வந்தோம். எந்தக் கடைக்குச் செல்லலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில், ‘வாங்க தம்பி’ என வாஞ்சையான குரல் வந்தது, ஒரு கடையிலிருந்து.

“இது காஷ்மீர் ரோஜா. ஒரு செடி முப்பது ரூபா. இது ‘பிரிட்டிஷ் குயின்’, பூனாவுல இருந்து வருது. எண்பது ரூபாய்க்கு விக்கிறோம்’ என்று ஆர்வமாய் பூச்செடிகளை அறிமுகப்படுத்தினார், அறிவழகன் என்ற அந்தக் கடைக்காரர். ரோஜா, நாகலிங்கப் பூ, ஓசூரிலிருந்து வரவழைக்கப்பட்ட செம்பருத்தி, ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட வீரிய ரக செம்பருத்தி என பூக்களைப் பற்றி பாடமே நடத்தி விட்டார், அறிவழகன்.

வெளுத்து வாங்கும் வெள்ளிக் கிழமைச் சந்தை!

பூச்செடிகளோடு தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், மிளகாய், குட மிளகாய், பாகற்காய், புடலங்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், சிறுகீரை என வீட்டுத் தோட்டத்துக்குத் தேவையான காய்கறி விதைகள், உரம், தொட்டிகள் என அனைத்தும் இச்சந்தையில் கிடைக்கின்றன.

‘‘இந்தச் சந்தையில செடிகளை வாங்க, தி.நகர், அடையார், பாரிமுனை... னு சென்னையின் பல இடங்களிலிருந்தும் மக்கள் வருவாங்க” என்றார், சுரேஷ் என்ற வியாபாரி.

விதைகள், செடிகள், மரக்கன்றுகள் எனப் பசுமையாகக் காட்சியளிக்கும் சந்தையில் பல வகையான காய்கறிகளும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன. குளிர்பதனப்பெட்டிகளில் அடைக்கப்பட்ட பழங்களையும், காய்கறிகளையும் வாங்கியே பழக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு வெள்ளிக்கிழமைச் சந்தை நிச்சயம் ஓர் அற்புத பரிசுதான்.

ஜெ.விக்னேஷ்