
மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!
கரிமச்சத்தைச் சேமிக்கும் நுட்பங்கள்!
ஆரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளிக் கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும், ‘காலுக்குக் கீழுள்ள தூசு’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சர்யங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதுமே இத்தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கும் இந்தத் தொடர்.
பருவநிலை மாற்றத்தால் மண்ணில் ஏற்படும் விளைவுகளைப் பார்த்தோம். தொடர்ந்து, கரிமச்சத்து வீணாகும் விதம், அதை நிலைநிறுத்தும் விதம் ஆகியவற்றைக் குறித்துப் பார்ப்போம். ‘மண்ணிலும் சில செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால், மண் உயிரோட்டமாக உள்ளது’ என்பதை உணர்த்துவது கரிமச்சத்துதான். உணவு, உறைவிடம் அனைத்தையும் கொடுப்பது மண்தான். அதனால்தான், ‘பொன்னைப் போல மண்ணைப் பேண்’ என்றனர், நம் மூதாதையர். மண் நலம், வளம் இரண்டையுமே நிர்ணயிப்பது மண்ணில் உள்ள அங்ககப் பொருட்கள்தான்.
அங்ககப் பொருட்கள் நிலத்தில் சிதையும்போது ஏற்படும் மாற்றங்களால் மண்துகள்கள் உடைகின்றன. அதனால், மண் கட்டமைப்பு சிறப்பாக மாறுகிறது. மண்ணின் வெப்பநிலை, நீர் உறிஞ்சும் தன்மை, காற்றோட்டம், பல்லுயிர்ப் பெருக்கம், கார அமில நிலை, அயனிப் பரிமாற்றத் திறன்... போன்ற ஏராளமான இயற்பியல், வேதியியல் தன்மைகளை பயிரின் வளர்ச்சிக்கு ஏற்றபடி அமைத்துக் கொடுப்பதில் அங்ககப்பொருட்கள் பெரிதும் உதவுகின்றன. இந்த அங்ககப் பொருட்களில் 58 சதவிகிதம் கரிமப்பொருட்கள் இருக்கின்றன. ஆனால், தமிழகம் உட்பட இந்திய மண் வகைகளில் அங்ககப் பொருட்களின் அளவே 2 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இப்படியிருக்கும்போது, கரிமப் பொருட்களை எங்கே தேடுவது?

கரிமச்சத்தின் பயன்கள்!
கரிமச்சத்துதான், பயிரூட்டங்களின் சேமிப்புக் கிடங்கு. தவிர, மண்ணில் ஈரப்பதத்தை அதிகரிப்பதிலும், அயனிப் பரிமாற்றத்திலும் முக்கிய பங்காற்றுகிறது, இச்சத்து. மண்துகள்களுக்கு இடையே பிணைப்பை அதிகப்படுத்தி, மண் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. மண்ணின் மேற்பரப்பில் நீர் வழிந்தோடுவதைக் குறைக்கிறது. மண்வாழ் உயிரினங்களுக்கு உணவாகவும், ஆற்றல் தரும் பொருளாகவும் உள்ளது. உயிரூட்டங்களும், பயிரூட்டங்களும், நீரும் பயிருக்குக் கிடைக்கச் செய்வதில் முக்கிய இடம் வகிக்கிறது. ரசாயன இடுபொருட்கள், தொழிற்சாலைக் கழிவுகளால் மண்ணின் கார அமிலத்தன்மை மாற்றம் அடைவதைத் தடுக்கிறது. மண்ணின் வெப்பநிலையைச் சீராக்குகிறது. வேளாண்மை மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலிலும் கரிமச்சத்துக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வண்டல் படிவதைக் குறைக்க உதவுகிறது, இச்சத்து. அதோடு, வேளாண் வேதிப்பொருட்களை வடிகட்டி நிலத்தடி நீர் மாசுபாட்டையும் தடுக்கிறது. இப்படி இதன் பயன்கள் பல.
தாவரங்கள் மூலமாக கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்சைடு), மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வாயுக்கள் உற்பத்தியாகின்றன. அதனால், புவிவெப்பமாவதற்கு வேளாண்மையும் ஒரு காரணம் என்று ஏற்கெனவே பார்த்தோம். காற்று மண்டலத்தை மாசுபடுத்துவதில் இந்த மூன்று வாயுக்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. கடந்த 250 ஆண்டுகளில் படிமங்களை எரித்ததன் மூலமாக 27 ஆயிரம் கோடி டன் கரிமமும் (கார்பன்), நிலப் பயன்பாடு மூலம் 13 ஆயிரத்து 600 கோடி டன் கரிமமும் (கார்பன்) வளிமண்டலத்தில் கலந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து நிலத்தில் பயிர் செய்வதால் மண்ணில் உள்ள கரிமச்சத்துக்கள், நுண்ணுயிர்களால் சிதைக்கப்படுவதால்... கரியமில வாயுவும் மீத்தேன் வாயுவும் வெளியேறுவதால் மண்ணில் உள்ள கரிமத்தின் அளவு கணிசமாகக் குறைகிறது.
மண்ணில் கரிமச்சத்தை எப்படி சேமிப்பது?
உழவியல் முறைகள்: சரியான பருவத்தில், பயிருக்கு ஏற்றபடி முறையான உழவு செய்வதன் மூலம் மண்ணில் கரிமச்சத்தை நிலைப்படுத்தலாம். இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு ஹெக்டேரில் 3 டன் வரை கரிமச்சத்தைச் சேமிக்க முடியும். கலப்புப் பயிர்கள், ஊடுபயிர்கள் மற்றும் மூடாக்கு மூலமாக அதிகளவு கரிமப் பொருட்களைச் சேமிக்கலாம். பயிர் வகைக்கு ஏற்றபடி மூடாக்கு இடுவதால் மண்ணில் பல்லுயிர்ப் பெருக்கம் உருவாகிறது. பயிர்க் கழிவுகளை நிலத்தில் இடுவதன் மூலமாகவும் கரிமச்சத்தை நிலத்தில் அதிகரிக்கலாம்.
பயிர் சுழற்சி: ஒவ்வொரு பயிருக்கும் போதுமான இடைவெளி விட்டு, திட்டமிட்டு சாகுபடி செய்வதன் மூலம் கரிமச்சத்தை அதிகப்படுத்தலாம். முதல் பயிராக பயறு வகையைப் பயிரிட்டால், நிலத்தில் நைட்ரஜனை நிலைப்படுத்தலாம். இரண்டாவதாக பாஸ்பரசை நிலைநிறுத்தும் பயிர்களையும், மூன்றாவதாக பொட்டாஷை நிலைநிறுத்தும் பயிர்களையும் சாகுபடி செய்வதன் மூலம் கரிமச்சத்தை அதிகரிக்கலாம்.
உர மேலாண்மை: பயிர்களுக்குத் தேவையான அளவு மட்டுமே உரங்களைப் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக உரங்களைப் பயன்படுத்தும்போது மண்ணில் உள்ள கரிமம் வெளியேற்றப்படுகிறது. ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறையில், ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை விட்டு, இயற்கை உரங்களான கால்நடைக் கழிவுகள், பசுந்தாள் உரங்கள், உயிர் உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம் ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்துவதால் மண்ணில் கரிமச்சத்தின் அளவு அதிகரிக்கும்.
நீர் மேலாண்மை : நெல் வயலில் நீரைத்தேக்கி வைப்பதால் மீத்தேன் வெளியேறுகிறது, என முன்பே பார்த்தோம். இதைக் குறைக்கத்தான் ஒற்றைநாற்று சாகுபடியை ஊக்குவிக்கிறது, வேளாண்மைத் துறை. ‘நீர் மறைய நீர் கட்டு’ என்பதுதான் ஒற்றை நாற்று சாகுபடியின் கோட்பாடு. தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்துவதால் பயிர்களில் வேர் வளர்ச்சி அதிகமாவதுடன், கரிமச்சத்தும் நிலை நிறுத்தப்படுகிறது.
தரம் குறைந்த நிலங்களை மேம்படுத்துவதன் மூலமும் மண்ணில் கரிமச்சத்தை அதிகப்படுத்தலாம். சதுப்பு நிலங்கள், பாலை நிலங்கள், வறண்ட நிலங்கள் ஆகியவற்றில் காடுகளை வளர்ப்பதன் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கரிம வாயுவை (கார்பன்) இழுத்து, நிலத்தில் கரிமச்சத்தாக சேமிக்க முடியும். இதன் மூலம் ஒரு ஹெக்டேரில் ஓர் ஆண்டுக்கு 800 முதல் 1000 கிலோ கரிமத்தைச் சேமிக்கலாம். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் மேற்பரப்பு மண்ணில் 30 முதல் 48 சதவிகித கரிமச்சத்து குறைந்துள்ளது. 1970-ம் ஆண்டு ஹெக்டேருக்கு 6.8 டன் முதல் 19.8 டன் வரை இருந்த கரிமம், தற்போது 6.4 டன் முதல் 10.2 டன் என்ற அளவில்தான் இருக்கிறது. எனவே முறையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மண்ணில் கரிமச்சத்தை அதிகரிக்கச் செய்தால் நல்ல மகசூல் கிடைப்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.
-வாசம் வீசும்
தொகுப்பு: ஆர்.குமரேசன்
காற்றில் கரையும் கரிமம்!
நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வளிமண்டலத்தில் 280 பி.பி.எம்- ஆக இருந்த கரியமில வாயு, இன்றைக்கு 367 பி.பி.எம் என அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதிலும் மண்ணில் உள்ள கரிமப் பொருட்கள் சிதைந்து மட்கும் போது மட்டும் 78 கோடி டன் கரிமம் வாயுவாக (கார்பன்) வளிமண்டலத்தில் கலக்கிறது.
வளமான மண்ணில், மேற்பரப்பிலிருந்து 15 சென்டி மீட்டர் ஆழம் வரை ஒரு ஹெக்டேருக்கு 7.5 டன் முதல் 13.5 டன் கரிமப் பொருட்கள் உள்ளன.
நெல்லும், வாத்தும்!
தென்கிழக்காசிய நாடுகளில் நெல் பயிரோடு சேர்த்து வாத்துகளை வளர்க்கும் பழக்கம் இருக்கிறது. வாத்துகள் நெல் வயலில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும்போது, சிறிய களைகள் மண்ணில் அமிழ்த்தப்படுகின்றன. அதோடு வாத்துகள் நடக்கும்போது, ஈர மண் அழுத்தப்படுவதால், மீத்தேன் ஆக்சிஜனேற்றம் ஏற்பட்டு மீத்தேன் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த முறையைத்தான் நாம் ஒற்றை நாற்று சாகுபடியில் ‘கோனோவீடர்’ மூலம் செய்து கொண்டிருக்கிறோம்.
நீ.செல்வம், ஆ.பாலமுருகன்