நாட்டு நடப்பு
Published:Updated:

என் செல்லமே...

செல்லப்பிராணிகள் முதல் செல்வப் பிராணிகள் வரை...பந்தயப் புறா... அழகுப் புறா...நிறைவான வருமானம் கொடுக்கும் வளர்ப்பு புறாக்கள்!

டிதம், தந்தி, எஸ்.எம்.எஸ்... என நவீன தகவல் பரிமாற்ற சாதனங்களுக்கெல்லாம் முன்னோடி புறாக்கள்தான். சங்க காலங்களில் காதலுக்குத் தூது சொல்வது முதல்... போருக்கான அறிவிப்பைச் சொல்வது வரை அனைத்துக்கும் புறாக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட புறா வளர்ப்பு இன்றளவும் தொடர்கிறது. அழகுக்காக, இறைச்சிக்காக, பந்தயத்துக்காக... என புறா வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. அந்த வகையில், மொட்டைமாடியில் அழகுப் புறாக்களையும், பந்தயப் புறாக்களையும் வளர்த்து வருகிறார், திருவண்ணாமாலை, தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த வேடியப்பன். 

புறாக்களுக்கு தீவனம் இட்டுக் கொண்டிருந்த வேடியப்பனைச் சந்தித்தோம். பல புறாக்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்க... சில புறாக்கள் தீவனத்தைக் கொத்திக் கொண்டிருந்தன.

என் செல்லமே...

ஆரம்பத்தில் 10 ஜோடி...

தற்போது 50 ஜோடி!

'எங்க தாத்தா, அப்பா எல்லாருமே புறா வளர்த்தவங்கதான். அதனால எனக்கும் புறா வளர்ப்புல ஆர்வம் உண்டு. எனக்கு 13 வயசு இருக்கிறப்போ அப்பா இறந்துட்டார். அதனால எட்டாவதுடன் படிப்பை முடிச்சிக்கிட்டு மளிகைக் கடை வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். கிடைச்ச சம்பளத்தை வெச்சு, பத்து ஜோடி புறாக்களை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். இருபது வருஷமா தொடர்ந்து வளர்த்துக்கிட்டு இருக்கேன். இப்போ 50 ஜோடி புறாக்கள் கையில இருக்கு.

எனக்கு புறாக்களைப் பந்தயத்துக்குப் பழக்குறதுல ரொம்ப ஆர்வம். இந்த இருபது வருஷங்கள்ல நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். புறாவை அழகுக்காகவும், பந்தயத்துக்காகவும்தான் அதிகளவுல வளர்க்கிறாங்க. பந்தயத்துல ரெண்டு விதம் இருக்கு. அதிக நேரம் பறக்கிறது ஒரு பந்தயம். தூரத்துல விட்டுட்டு வந்தாலும் இருப்பிடத்துக்குத் திரும்பி வர்றது ஒரு பந்தயம். இதுல 'பெட்டிங்’லாம் கிடையாது. பரிசு மட்டும்தான்' என்று முன்னுரை கொடுத்த வேடியப்பன், தொடர்ந்தார்.

பல்டி அடிக்கும் கர்ணப் புறா!

'அதிக நேரம் பறக்குற போட்டிக்காக நான், 'கர்ணப் புறா, பட்ன சாதா புறா’னு ரெண்டு ரகங்களை வளர்க்கிறேன். கர்ணப் புறாக்கள் அதிக உயரத்துல பறக்கும். தொடர்ச்சியாக 13 மணி நேரம் வரை கூட பறக்கும். பறக்குறப்போ 'பல்டி’ அடிக்கும். இந்த ரகம் சராசரியா ஒரு ஜோடி 2 ஆயிரம் ரூபாய்னு விற்பனையாகுது. பட்ன சாதா புறா தொடர்ந்து 15 மணி நேரம் வரைக்கும் பறக்கக் கூடியது. ஆனா, இது பல்டி அடிக்காது. இதுவும் ஜோடி 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும்.

நீண்ட தூரம் பறக்கும் ஹோமர் புறா!

ஹோமர் புறா ரகம்தான் அதிக தூர பந்தயங்களுக்குப் பயன்படுத்தப்படுது. நான் பயிற்சி கொடுத்த புறாக்கள் 125 கிலோ மீட்டர் தூரத்தை, ஒண்ணரை மணி நேரத்தில் கடந்து வந்திருக்கு. பறக்கும்போது, சில சமயங்கள்ல பருந்துகள் அடிச்சுடும். சில சமயங்கள்ல வெளியில குடிக்கிற தண்ணீர் சேராமப் போயிடும். அதனால புறாக்கள் இறந்துடும். 10 புறாக்களை இப்படி பறக்க விட்டா... அதிகபட்சமா 7 புறாக்கள்தான் திரும்பி வரும். இந்த வகைப்புறாக்கள் ஜோடி 3 ஆயிரம் ரூபாய்ல இருந்து  4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும்.  

என் செல்லமே...

அழகுக்காக வளர்க்கப்படுற புறாக்கள்ல பல வகைகள் இருக்குது. நான் கட்ட மூக்கு ஹோமர், ஆஸ்திரேலியா பர்ஃபி ரகங்களை வெச்சிருக்கேன். இதில்லாம பெயர் தெரியாத ரக பல வகையான புறாக்களையும் வளர்க்கிறேன். வீடுகள்ல அழகுக்காக வளர்க்கிற புறாக்கள் ஜோடி ஆயிரம் ரூபாய்ல இருந்து 1,500 ரூபாய் வரை விற்பனையாகும். நாட்டுப் புறாக்களையும், வயதான புறாக்களையும் மருந்துக்காக வாங்கிட்டுப் போவாங்க. அந்த மாதிரி புறாக்கள், ஜோடி 250 ரூபாய்ல இருந்து 500 ரூபாய் வரை விற்பனையாகும்' என்ற வேடியப்பன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.

270 சதுர அடியில் 85 ஆயிரம்!

"270 சதுர அடி மொட்டை மாடியில, 50 ஜோடி புறாக்களை வளர்க்கிறேன். ஒரு ஜோடி புறா மூலம் வருஷத்துக்கு ஆறு முட்டை வீதம், மொத்தம் 300 முட்டைகள் கிடைக்கும். பொரிக்க வைத்துப் புறாக்களை உற்பத்தி செய்யும்போது, பொரிக்காத முட்டைகள், இறக்கும் குஞ்சுகள் எல்லாம் போக... சராசரியா 130 ஜோடி புறாக்கள் கிடைக்கும். எப்பவும் என்கிட்ட 50 ஜோடி இருக்கிற மாதிரி பார்த்துக்குவேன். சில புறாக்கள் பந்தயத்துல இறந்துடும். அந்த மாதிரி இழப்பை புதுக் குஞ்சுகள் மூலமா ஈடுகட்டிக்குவேன். அந்த வகையில பார்த்தா வருஷத்துக்கு 100 ஜோடியைத்தான் விற்பனை செய்ய முடியும். ஒரு ஜோடி சராசரியா ஆயிரம் ரூபாய்னு விற்பனை செய்தா, 100 ஜோடி மூலம் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். வயதான புறாக்கள், மருந்துக்காக விற்பனை செய்ற குஞ்சுகள் மூலமா 10 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் வரும். அதில், தீவனம், மருந்துனு எல்லா செலவும் போக, 85 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபமா நிக்கும். சந்தோஷத்தோட வருமானமும் கிடைக்கிறதுதால புறா வளர்ப்பை நேசிச்சு செய்துக்கிட்டு இருக்கேன்' என்று முகம் மலரச் சொன்னார் வேடியப்பன்! 

 காசி.வேம்பையன்

 படங்கள்: கா.முரளி

100 புறாக்களுக்கு 3 கிலோ தீவனம்!

100 வளர்ப்புப் புறாக்களுக்கு நாள் ஒன்றுக்கு கேழ்வரகு  1 கிலோ, சோளம் அரை கிலோ, கம்பு அரை கிலோ, கோதுமை  அரை கிலோ, மக்காச்சோளம்  அரை கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தீவனமாகக் கொடுக்க வேண்டும்.

என் செல்லமே...

பந்தயப் புறாக்களைப் பொறுத்தவரை... பத்து புறாக்களுக்கு நாள் ஒன்றுக்கு பச்சைப்பட்டாணி  1 கிலோ, கொண்டைக்கடலை அரை கிலோ, பச்சைப்பயறு  அரை கிலோ, நிலக்கடலை அரை கிலோ, சஃபோலா விதை  அரை கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைக்க வேண்டும்.

புறாக்களுக்கு தினமும் காலை, மதியம், மாலை நேரங்களில் தண்ணீர் வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை கூண்டுகளை சுத்தம் செய்ய வேண்டும். அழகுக்காக வளர்க்கும் புறாக்களைக் காலையில் திறந்து விட்டு, மாலையில் அடைத்து வைத்தால் போதும். பந்தயப் புறாக்களை வாரம் ஒரு முறை மட்டும்தான் திறந்து பறக்க விட வேண்டும். புறாக்களுக்கு அம்மை, கழிச்சல் மாதிரியான நோய்கள் தாக்கினால், கடைகளில் கிடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

 வளர்ப்புக்கு ஏற்ற 4 மாத குஞ்சுகள்!

வளர்ப்புக்காக இருந்தாலும் சரி... பந்தயங்களுக்குப் பழக்குவதாக இருந்தாலும் சரி,  நான்கு மாத வயது கொண்ட புறாக்களைத்தான் வாங்க வேண்டும். புதிதாக வாங்கிவந்த புறாக்களின் இறக்கையில் ரப்பர் பேண்டு போட்டு 20 நாட்கள் வைத்திருந்தால், இடம் பழகிவிடும். பந்தயப் புறாக்களுக்கு மூன்று மாதங்கள் முடிய கடுமையான பயிற்சி கொடுக்க வேண்டும்.

 ஆண்டுக்கு 6 முட்டை!

ஒரு புறா மூன்று மாதத்துக்கு ஒரு முறை இரண்டு முட்டைகள் வீதம் இடும். ஆண்டுக்கு நான்கு முறை முட்டை விடுவதற்கு வாய்ப்பிருந்தாலும், மூன்று முறை மட்டும்தான் இனப்பெருக்கத்துக்கு அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஆண்டுக்கு 6 முட்டைகள் கிடைக்கும். இந்த ஆறு முட்டைகளும் தரமானதாக இருந்தால், 6 குஞ்சுகள் கிடைக்கும். 18 முதல் 20 நாட்களில் புறாக்கள், குஞ்சுகளைப் பொரிக்கும். தாய்ப் பறவையும், தந்தைப் பறவையும் வாயில் கொண்டு வரும் உணவைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஊட்டி வளர்க்கும். பறக்க ஆரம்பித்த குஞ்சுக்கு அந்த இடத்தைக் கொடுத்துவிட்டு, பெற்றோர்கள் வேறு இடத்துக்கு மாறிவிடுவார்கள்.

என் செல்லமே...

 புறா வளர்ப்புக்கு ஏற்ற மொட்டை மாடி!

புறாக்களை வளர்க்க மொட்டை மாடி போதுமானது. ஒரு ஜோடி புறாவை அடைப்பதற்கு, ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி அளவில் கூண்டுகள் தேவை. அதிகமான அளவில் புறாக்களை வளர்க்கும் போது... ஒரு புறாவுக்கு முக்கால் அடி நீள, அகல, உயரத்தில் சிறிய அறைகளாக அமைத்துக் கொள்ள வேண்டும். பந்தயப் புறாக்களில் ஆண், பெண் புறாக்களைத் தனித்தனியாக கூண்டுகளில் அடைக்க வேண்டும். பருவகாலத்தில் மட்டும்தான் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.

இரண்டே கால் கோடிக்கு விற்பனையான பெல்ஜியம் பந்தயப் புறா!

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் லியோ ஹெர்மன்ஸ். இவர் பந்தயப் புறாக்கள் உட்பட, பல பறவைகளை வளர்ப்பதில் நிபுணர். ஒரு பந்தயப் புறாவுக்கு 'போல்ட்’ என்று பெயரிட்டு இவர் வளர்த்து வந்தார். அது, பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பரிசுகளைக் குவித்தது. இந்நிலையில், தன்னிடம் இருந்த எல்லா பறவைகளையும் விற்பனை செய்ய முடிவு செய்த லியோ, ஆன்லைனில் தன்னிடம் இருந்த 530 புறாக்களையும் ஏலம் விட்டார். இதன் மூலம் அவருக்கு 32 கோடி ரூபாய் கிடைத்தது. அதில், 'போல்ட்’ பந்தயப் புறா மட்டும் 2 கோடியே 25 லட்ச  ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே உலக அளவில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்ட புறா.

சாதனை படைத்த போல்ட் புறாவை, சீன வர்த்தகர் ஒருவர் வாங்கி உள்ளார். அவர் போல்ட் புறா மூலம் இனப்பெருக்கம் செய்து அவற்றை விற்பனை செய்யப் போவதாகச் சொல்லி இருக்கிறார். ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் புறா பந்தயம் புகழ் பெற்றது. பந்தயங்களில் வெற்றி பெறும் புறாக்களின் முட்டைகள் 25 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட முட்டையில் இருந்து, கிடைக்கும் புறாவுடன் நம் நாட்டில் இருக்கும் பந்தயப் புறாக்களைக் கலப்புச் செய்து தரமான புறாக்களை உருவாக்குகின்றனர் நம் நாட்டினர்.

புறா வளர்த்தால் குடும்பத்துக்கு ஆகாதா...?

புறாக்கள் ஒற்றைக் காலில் நிற்கும். இதனால் அந்தக் குடும்பத்தில் கெட்டது நடக்கும். புறாக்களின் அனத்தல் சத்தம் அபசகுனம்... என்றெல்லாம் நிறைய மூடநம்பிக்கைகள் உள்ளன.

குறிப்பாக, புறாக்கள் உள்ள இடம் இடிந்து, பாழடைந்துவிடும் என்றும்கூட சொல்கிறார்கள். ஆனால், உண்மை நிலை வேறுமாதிரியாக உள்ளது. மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் புறாக்களுக்கு தனி மரியாதை உண்டு. கடிதப் போக்குவரத்து, புறாக்கள் மூலமும் நடந்தது. அரண்மனையின் அந்தப்புரத்தில் புறாக்கள் கட்டாயம் இருக்கும்.

புறாக்கள் இல்லாத அந்தப்புரத்தில் பெண்கள் வசிக்க விரும்பமாட்டார்களாம். அதாவது, புறாக்கள் இருக்கும் இடத்தில்தான் அமைதி இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

 புறா... சில தகவல்கள்!  

பலவகையான பறவைகள், விலங்குகள் இருந்தாலும் 'சமாதானப் பறவை’ என்ற அடையாளம் வெள்ளை நிறத்தில் இருக்கும் புறக்களுக்கு மட்டுமே உள்ளது.

ஒரு புறா சராசரியாக 8 முதல் 9 அங்குல உயரம் வரை வளரக்கூடியது.

தாய்/தந்தைப் புறாக்கள், குஞ்சுகளுக்காக உணவு ஊட்டும்போது, தன் உடலில் சுரக்கும் ஜீரணமாக்கும் என்சைமை உணவோடு கலந்து கலவையாக ஊட்டும். இதை 'புறாப் பால்’ என்பார்கள்.

புறாக்குஞ்சுகள் 5 முதல் 6 மாதங்களில் பருவத்துக்கு வந்துவிடும். பிறந்த 6 முதல் 8 வாரங்களில் புறாக் குஞ்சுகள் கூட்டைவிட்டுப் பறந்துவிடும்.

ஆண் புறா, தன் பெண் புறாவை அழைக்கத் தலையை ஆட்டி ஆட்டி 'குர்..குர்’ என ஒலி எழுப்பும். இதை வைத்து ஆண், பெண் புறாக்களை அடையாளம் காணலாம்.

புறாக்கள் பெரும்பாலும் உயரமான இடங்களில் வாழ்வதையே விரும்பும்.

கி.மு. 4500ம் ஆண்டில் இருந்து வீட்டுப் பறவையாகப் புறா வளர்க்கப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஒரு புறாவின் சராசரி எடை 300  கிராம் முதல் 350 கிராம் வரை இருக்கும்.

புறாக்கள் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியவை.

தொடர்புக்கு,

வேடியப்பன்,

செல்போன்: 9629677087.