நாட்டு நடப்பு
Published:Updated:

குதிரை ரூ.25 லட்சம்...நாய் ரூ.85 ஆயிரம் !

அடேங்கப்பா, அந்தியூர் சந்தை !மு.பிரதீப் கிருஷ்ணா, படங்கள்: கி.சரண் பிரசாத்

ரோடு மாவட்டம் அந்தியூரில் ஆண்டுதோறும் குருநாத சுவாமி திருக் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஐந்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிறப்பு, அங்கு நடைபெறும் கால்நடைச் சந்தைதான். இந்த ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி தொடங்கிய இச்சந்தைக்கு நாட்டின் பல இடங்களிலிருந்தும் குதிரைகள், மாடுகள் மற்றும் ஆடுகளும் வந்திருந்தன. 

குதிரை விற்க வந்திருந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 'குதிரைகள் சவாரிக்காகவும் அழகுக்காகவும் மட்டும் வளர்க்கப்படுவது இல்லை. அவை ராசிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. முகத்திலோ கழுத்திலோ மொத்தம் 9 அல்லது 10 சுழிகள் பெற்றிருந்தால், அவை ராசியான குதிரைகள். எங்களிடம் உள்ள அனைத்து குதிரைகளும் அப்படியான குதிரைகள்தான்'  என்றார்.

குதிரை ரூ.25 லட்சம்...நாய் ரூ.85 ஆயிரம் !

வெளிநாட்டைச் சேர்ந்த இரகுஹாமிரபெல்லே தம்பதி, குதிரைகள் வாங்க வந்திருந்தனர். 'நான் ருவாண்டாவைச் சேர்ந்தவன். என் மனைவி ப்ரான்ஸ். நாங்கள் பாண்டிச்சேரியில் தற்போது வசிக்கிறோம். என் மனைவிக்கு குதிரை சவாரி மிகவும் பிடிக்கும். எங்களிடம் இரண்டு காத்தியவார் ரக குதிரைகள் உள்ளன. மேலும் இரண்டு இளம் குதிரைகள் வாங்க வந்துள்ளோம்' என்றார், இரகுஹா.

அதிகபட்சமாக ஒரு குதிரை 25 லட்ச ருபாய்க்கு விற்பனையானது.

கம்பீரமான காங்கேயம் காளைகள்!

சித்தோடு பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் நான்கு காங்கேயம் காளைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. அந்தக்காளை ஒன்றின் விலை ஒரு லட்ச ரூபாய். கறவை மாடுகள் அதிகபட்சமாக 63 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டன.

ஜெர்சி வகைப் பசுக்கள் 60 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரையும், சிந்தி வகைப் பசுக்கள் 55 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையாகின. மேலும் காது நீண்ட அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆடுகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.  ஒரு அடி உயரமே உள்ள நாய் வகைகளும் விற்பனைக்கு வந்திருந்தன. அந்த நாயின் விலை 85 ஆயிரம் ரூபாய்.

குதிரை ரூ.25 லட்சம்...நாய் ரூ.85 ஆயிரம் !

இது போன்ற சந்தைகளுக்கு விவசாயிகளும் வியாபாரிகளும் வந்தால் மட்டும் போதாது. கிராமம், நகரம் என்று வேறுபாடு இல்லாமல் சிறுவர்கள், இளைஞர்கள் என்று அனைவரும் இங்கு வந்து கால்நடைகள் பற்றியும், இயற்கை பற்றியும் அறிந்துகொண்டால்தான் அருகி வரும் கால்நடை இனங்களைக் காப்பாற்ற முடியும், விவசாயமும் புத்துயிர் பெறும்!