Published:Updated:

கார்ப்பரேட் கோடரி - 3

கார்ப்பரேட் கோடரி
News
கார்ப்பரேட் கோடரி ( கார்ப்பரேட் கோடரி )

பூமியிடம் அனுமதி பெற்ற பிறகே விவசாயம் ...வியக்க வைக்கும் தொல்குடி மக்கள் ! ‘சூழலியலாளர்’ நக்கீரன்

தென்அமெரிக்கக் கண்டத்தில் வடக்கு தெற்காக கொலம்பியாவிலிருந்து அர்ஜென்டினா வரை நீண்டுள்ள ஒரு மலைத்தொடர்தான், ஏண்டீஸ் மலைத்தொடர். மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் போலவே உலகின் பல்லுயிர்ச் செறிவுமிக்க பகுதிகளில் இதுவும் ஒன்று. ஆனால், மோசமான பருவநிலையால், மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக இப்பகுதி கருதப்பட்டாலும், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வேளாண்மை நடைபெற்று வந்திருக்கிறது. 

இம்மலைத் தொடரின் நடுப்பகுதியானது, ‘பறவைகள் எச்சப் புகழ்’ பெரு நாட்டில் அமைந்துள்ளது. இங்குள்ள உயரமான சிகரப்பகுதிகள் ஏறத்தாழ 4 ஆயிரம் மீட்டர் உயரம் கொண்டவை. ஆண்டு முழுமைக்கும் பனி மூடிக்கிடக்கும் இப்பகுதிதான் உலகின் மிகப்பழமையான வேளாண்மைப் பகுதிகளுள் ஒன்று என்பது வியப்புக்குரிய செய்தி. இவ்வியப்பு இத்தோடு நிற்பதில்லை. இந்தப் பகுதி உலகின் எட்டு சாகுபடி பயிர்கள் நடுவங்களில் ஒன்று. தற்போது உலகில் சாகுபடி செய்யப்படும் 70 வகையான பயிர்கள் இப்பகுதியில்தான் பழக்கப்படுத்தப்பட்டவை என்பது அமெரிக்கர்களே ஒப்புக்கொண்ட உண்மை.

இதற்கெல்லாம் காரணம், இங்குள்ள தொல்குடி மக்களின் வேளாண்மை முறையும், மண்ணியல் அறிவும்தான். மண்ணையும் சூழலையும் ஓர் உயிர்ப் பொருளாகப் பார்க்கும் இவர்கள், அதனை ‘சாக்ரா’ என்று அழைக்கிறார்கள். இந்த சாக்ராதான் இயற்கையை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பது இவர்களது நம்பிக்கை. மேலும் புவியைத் தாயாக கருதுகிறார்கள். அத்தாய்க்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் ‘பச்சமாமா’. இவர்களது இந்த நம்பிக்கைகளைப் பற்றி ஓர் ஏண்டீஸ் தொல்குடி மனிதரின் சொற்களிலேயே கேட்போம்.

கார்ப்பரேட் கோடரி - 3

“நாங்கள் பச்சமாமாவின் மீது அன்பும் மரியாதையும் செலுத்துபவர்கள். ஏனெனில் பச்சமாமாவின் ஒவ்வொரு கூறுக்கும் உயிருண்டு. அதனால்தான் நாங்கள் இயற்கையின் அனைத்துக் கூறுகளையும் எங்கள் உறவினரைப் போலவே கருதி அவற்றை அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம். அவை அனைத்தும் சாக்ராவின் மூலம் எங்களுடன் பேசும்.

மின்னும் விண்மீன்கள், காட்டுப்பூக்களின் மலர்ச்சி, பறவைகளின் அணிவகுப்பு, காற்றின் நிறம், மழையின் சுவை... ஆகியவை மண்ணின் மாற்றம், பருவ மாற்றம் போன்றவற்றைப் பற்றி எங்களுக்குக் கற்றுத் தருகின்றன. 
‘பச்சமாமா’ எங்களது புவித்தாய். இவர் துணையில்லாமல் எதுவுமே நடக்காது. ஒரு தாய் தன் குழந்தையைப் பராமரிப்பது போல அவர் எங்களைப் பராமரிக்கிறார். நாங்களும் ஒரு தாய்க்குரிய அனைத்து மரியாதையையும் அவருக்கு அளிக்கிறோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு வேளாண்மை நடவடிக்கையையும் இவரிடம் அனுமதி பெற்றுதான் தொடங்குவோம். அப்போது நாங்கள் அவருக்கு ‘பச்சமாமா! நாங்கள் இம்மண்ணை மென்மையாகவே கையாளுவோம். ஒருபோதும் இம்மண்ணுக்கு துன்பம் தந்திட மாட்டோம்’ என்று உறுதியளிப்போம். ஏனென்றால், மண் என்பது ஓர் உயிர். நம்மைப்போலவே அதற்கும் உணர்வுண்டு. அதனால்தான் மண் களைப்படையும் போது நாங்கள் அதற்கு ஓய்வு கொடுக்கிறோம். மண்ணைத் தரிசாக விடுவது என்பது, ‘பொருள் இழப்புக் காலம்’ அல்ல. அது, இழந்த வளத்தை தானே மீட்டுக்கொள்ள, மண்ணுக்குக் கொடுக்கும் ஓய்வு” என்கிறார் அந்த தொல்குடி மனிதர். 

கார்ப்பரேட் கோடரி - 3

இந்த இடத்தில் சற்று இடைநிறுத்தி தமிழர்களின் திணை வாழ்வியல் பற்றிப் பேசுவோம்.

நமக்கும் சங்க காலத்திலும் இதே பார்வைதான் இருந்தது. நிலமும் பொழுதும்தான் முதற் பொருள் என்கிறது, தொல்காப்பியம். நாமும் இயற்கையை உயிர்ப்பொருளாகப் பார்த்தவர்கள்தாம். ‘மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே’ என்பதுதானே நம் பார்வை? இது இன்று எங்கே போனது? சுருங்கச் சொன்னால், நவீனத்திடம் பாரம்பர்யத்தை இழந்துவிட்டோம்.

ஜெர்மன் மற்றும் டென்மார்க் நாட்டிலிருந்து சூழல் அறிவியலில் முனைவர் பட்டம் பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழகத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு தமிழ்ச் சூழலியல் குறித்து வகுப்பெடுக்க நேர்ந்தது. ‘நவீன அறிவியலைப் போலன்றி தமிழர்கள் இயற்கையை உயிர்ப்பொருளாக பார்த்தவர்கள்’ என்று அவர்களிடம் கூறினேன். அப்போது ஒரு ஜெர்மன் மாணவி இடைமறித்து, ‘நவீன அறிவியலிலும் இக்கருத்து உண்டு. இது ‘ஆழ்ந்த சூழலியல்’ (Deep Ecology) என்று அழைக்கப்படும்’ என்றார்.

‘அப்படியென்றால் என்ன பொருள்?’ என்று அவரிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு அம்மாணவி ‘மனிதன் தொடங்கி நுண்ணுயிர் வரை அனைத்துக்கும் சம உரிமை உண்டு என்பதே இதன் பொருள்’ என்றார். ‘அப்படியானால் இதை முதலில் உங்களுடைய பூச்சிக்கொல்லி நிறுவன முதலாளிகளிடம் சொல்லுங்கள்’ என்றேன். மேலும் அவருக்கு விளக்குகையில் ‘ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதனை எங்கள் வள்ளுவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறிவிட்டார், என்றேன். அவர் வியந்து ‘ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ‘டீப் ஈக்காலஜி’ பேசிய உங்கள் அறிவுக்கு எம் வணக்கம்’ என்று கூறி அமர்ந்துவிட்டார். இப்படி ஜெர்மனியை வியக்க வைத்தது, நம் அறிவு. ஆனால், நம் அறிவையும் வியக்க வைப்பது ஏண்டீஸ் தொல்குடி மக்களின் வேளாண்மை அறிவு.
நீண்ட பாரம்பர்யம் கொண்ட இம்மக்களின் வேளாண்மை முறையானது, மண் பல்வகைமை, தாவர பல்வகைமை, மழையை முறையாகப் பயன்படுத்துதல், உழவுநுட்பம், தரிசு, பயிர்சுழற்சி ஆகிய பல முறைகளை உள்ளடக்கியது. எந்தக் காலநிலையிலும் நல்ல அறுவடையைப் பெற இவர்கள் தவறியதேயில்லை. மழைக்காலமோ, பனிக்காலமோ, வேனிற்காலமோ எதுவானாலும் சரி, மழையோ, வறட்சியோ எதுவானாலும் சரி, பூச்சிகள் தாக்குதல் இருக்கிறதோ இல்லையோ கவலையில்லை. இவர்கள் என்ன விதைத்தார்களோ அதை அறுத்தார்கள். ‘வளங்குன்றா வேளாண்மை’க்குச் சொந்தக்காரர்கள் இவர்கள்.

உலகிலேயே அதிகமான சோள வகைகளைப் பயிட்டவர்கள் இவர்கள்தான். தவிர 1,500 வகையான ‘கின்வா’ (quinoa) தானியங்களையும், 330 வகையான கேனிவ்வா (kaniwa) தானியங்களையும், 228 வகையான டார்வி (tarwi) என்கிற பயறு வகைகளையும், 250 வகையான உருளைக்கிழங்கு வகைகளையும், ஓகா (Oca) என்கிற கிழங்கு வகைகளோடு இன்னும் பல பயிர்களையும் பயிரிட்டு உலகுக்கு அளித்தவர்கள்.

இத்தகைய பெருமைமிக்க இவர்களது பாரம்பர்ய வேளாண்மை அறிவை வெட்டி வீழ்த்த புதிதாக ஒரு கோடரி வந்தது. ‘நவீன அறிவியல் அறிவு’ என்கிற பெயரில் அமெரிக்காவிலிருந்து வந்த அந்தக் கோடரியின் பெயர், யு.எஸ்.டி.ஏ. (USDA-U.S. Department of Agriculture) எனும் அமெரிக்க வேளாண்மைத் துறை. பி.எல்-480 (PL-480) திட்டத்தின் மூலம் இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மையை வெட்டி வீழ்த்திய அதே கோடரிதான்.