ஓவியம்: ஹரன்
தேநீர் கடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டு ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர, இருவரும் பேசிக்கொண்டே தோட்டத்துக்கு வந்தனர். ஏற்கெனவே, கடலை மூட்டைகளை சந்தையில் விற்றுவிட்டு திரும்பியிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் தயாராக இருக்க, அன்றைய மாநாடு ஆரம்பமானது.
‘‘ஒவ்வொரு வேலையையும் கண்ணும்கருத்துமா பார்த்தாத்தான் எதிர்பார்க்கிற பலன் கிடைக்கும். கவனம் இல்லாம போனா, ஒட்டுமொத்த உழைப்புக்கும் பாதிப்பு வந்துடும்” என்று தத்துவமாகப் பேசினார் ஏரோட்டி.
‘‘சரியா சொன்னப்பா... இதுக்கு ஒரு கதை சொல்றேன், உன்னிப்பா கேளுங்க” என்று ஆரம்பித்தார் வாத்தியார்.
“ஆத்தங்கரையோரமா குடியிருக்குற ஒருத்தன், ஒரு நாள் வீட்டை ஒதுங்க வெச்சுக்கிட்டு இருந்தான். அப்போ ஒரு பழங்காலத்து ஓலைச்சுவடி கையில கிடைச்சுது. அதுல நிறைய மருத்துவக் குறிப்பெல்லாம் இருந்துச்சு. ஒரு ஓலையில கூழாங்கல்லை ஒரு குறிப்பிட்ட பச்சிலைச் சாறுல 48 நாள் ஊற வெச்சா, அது தங்கமா மாறிடும்னு எழுதியிருந்துச்சு. அந்தப்பச்சிலையும் ரொம்ப சுளுவா கிடைக்கிறதுதான். அதனால, அவனுக்கு தங்கம் செய்ற ஆசை வந்துடுச்சு. ‘அதிகாலை நேரத்துல ஆத்தங்கரையில கிடக்கிற கூழாங்கல்லை எடுத்து உள்ளங்கையில வெச்சுப் பாக்கணும். எந்தக் கல்லு வெதுவெதுப்பா இருக்கோ... அதுதான் தங்கமா மாறும்’னு ஓலையில சொல்லியிருந்ததால, தினமும் அதிகாலையில எழுந்திரிச்சு ஆத்தங்கரைக்குப் போய் ஒவ்வொரு கூழாங்கல்லையா எடுத்து சோதிச்சுப் பாக்க ஆரம்பிச்சான். எல்லாமே ‘குளுகுளு’னே இருந்துச்சு. விடாம தினமும் போனவன், ஒரு கல்லை எடுத்துப்பாத்துட்டு கரையில போடாம, ஆத்துக்குள்ளயே வீசிடுவான். ஏன்னா, அடையாளம் தெரியாம மறுநாளும் அதே கல்லை எடுத்துக்கக்கூடாதுல்ல.

இப்படியே மாசக்கணக்குல போயிக்கிட்டிருக்கு. கல்லை எடுக்கிறது, அதை உள்ளங்கையில வெச்சுப் பாக்கிறது, ஆத்துல வீசுறதுங்கிறது ஒரு பழக்கமாவே ஆயிடுச்சு. ஒரு நாள் இவன் கையில ஒரு தேங்காய் அளவுக்கு பெரிய கூழாங்கல் கிடைச்சுது. உள்ளங்கையில வெச்சா ‘வெதுவெது’னு இருக்கு. அதுதான் இவன் தேடிட்டு இருந்த கல்லுனு உறைக்கிறதுக்குள்ள பழக்க தோஷத்துல தூக்கி ஆத்துக்குள்ள வீசிட்டான். பிறகு அதை உணர்ந்து துடிச்சவன், ஆத்துக்குள்ள தேடிப்பார்த்தான்... ம்ஹூம், கண்டே பிடிக்க முடியல.
எதுக்காக ஒரு வேலையைச் செய்றோம்கிற குறிக்கோள் மேலயும் கவனமா இருக்கணும். இல்லைனா கிடைச்ச வெற்றியை இழந்துடுவோம். இந்தக் கதை நம்ம எல்லாருக்குமே பொருந்தும்” என்று கதையைச் சொல்லி முடித்தார் வாத்தியார்.
“சரியாத்தான்யா சொன்னீங்க” என்ற காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு கொஞ்சம் நாவல் பழங்களை எடுத்துக் கொடுத்து, ‘‘நாட்டு நவ்வாப்பழம்யா, நல்லா ருசியா இருக்கும். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்து” என்றார்.
அதைச் சாப்பிட்டுக்கொண்டே, “ஏற்கெனவே ஒரு முறை மத்தியில பி.ஜே.பி அரசாங்கம் நடந்தப்போ வெங்காய விலை ஏறிப்போய் பெரிய பிரச்னை ஆச்சு. அதேமாதிரி இப்பவும் ‘பெரிய வெங்காய’ விலை ஏறிட்டு இருக்கிறதால... மத்திய அரசாங்கம் படாதபாடு பட்டுக்கிட்டிருக்கு. மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, பீகார், பஞ்சாப்னு சில மாநிலங்கள்லதான் அதிக அளவுக்கு பெரிய வெங்காய (பல்லாரி) சாகுபடி நடக்குது. இந்த மாநிலங்கள்ல கிட்டத்தட்ட வருஷத்துக்கு 200 லட்சம் டன் அளவுக்கு வெங்காயம் விளையுது. இதைப் பதப்படுத்தியும் விற்பனை செய்வாங்க. இப்போ, வெங்காய விளைச்சல் குறைஞ்சு போனதால தட்டுப்பாடு அதிகமாகி விலை ஏறிக்கிட்டே இருக்குதாம். இன்னும் சில வாரங்கள்ல ஒரு கிலோ 100 ரூபாய் அளவுக்குப் போயிடும்னு சொல்றாங்க. அதனாலதான் பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான் நாடுகள்ல இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்றதுக்கான ஏற்பாடுகளை ஆரம்பிச்சிருக்குது, மத்திய அரசு” என்றார் வாத்தியார்.
“ஆமாங்கய்யா பெரிய வெங்காயம் கிலோ 80 ரூபாய்னு மார்க்கெட்ல சொன்னதால நான் வாங்கவேயில்லை. சின்னவெங்காயத்தை மட்டும்தான் வாங்கிட்டு வந்தேன். பெரிய வெங்காயத்துக்கு தட்டுப்பாடுங்கிறதால சின்னவெங்காயத்துக்கு ஓரளவு விலை கிடைச்சுக்கிட்டு இருக்கு. பெரிய வெங்காயம் இறக்குமதி ஆக ஆரம்பிச்சுடுச்சுனா சின்ன வெங்காய விலையும் இறங்கிடுமேனு விவசாயிகள் கவலையில இருக்கிறாங்களாம். மார்க்கெட்ல பேசிக்கிட்டாங்க” என்றார், காய்கறி.
“ம்... சிமென்ட் விலை, கம்பி விலை ஏன் செல்போன் விலை ஏறினாகூட கவலையே படமாட்டாங்க. ஏன்னா, அதையெல்லாம் விற்பனை செய்றது கார்ப்பரேட் முதலாளிங்க. ஆனா, வெங்காயம், பருப்புனு விலை ஏறினா, உடனே இறக்குமதிக் கூப்பாடு போட ஆரம்பிச்சிடுவாங்க. ஏன்னா, வெங்காயம், பருப்பெல்லாம் விளைவிக்கிறது இளிச்சவாய விவசாயியாச்சே’’ என்று நறநறத்த ஏரோட்டி, தான் ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
``தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில இரு போக நெல் சாகுபடி நடக்கும். இந்த வருஷம் போதுமான அளவுக்கு தென்மேற்குப் பருவமழை கிடைச்சிருக்கிறதால தண்ணீர் பிரச்னை இல்லை. ஆனா, எலித் தொல்லை தாங்க முடியலையாம். எலி பிடிக்கிற ஆளுங்க இதுதான் சாக்குனு ஒரு எலிக்கு 20 ரூபாய் கேக்கிறாங்களாம். அதனால விவசாயிகள் ரொம்ப கவலையில இருக்கிறாங்க” என்றார்.
“எலிப்பிரச்னை பத்தி ‘பசுமை விகடன்’ல நிறைய எழுதியிருக்காங்களேப்பா...
வயலைச் சுத்தி வரப்புல புதினா செடிகளை நட்டுவிட்டா எலிகள் வராது. பப்பாளிக் காயைத் துண்டு துண்டா வெட்டி வரப்புல வெச்சுட்டா அதை சாப்பிடுற எலிகள் செத்துப்போகும். அதேமாதிரி, வரப்புல மீன் அமினோ அமிலம், பஞ்சகவ்யா மாதிரியான கரைசல்களைத் தெளிச்சு விட்டாலும் எலிகள் வராது. உனக்கு தகவல் சொன்ன விவசாயிக்கு போன் போட்டு இதையெல்லாம் சொல்லுய்யா” என்று ஏரோட்டியிடம் சொன்ன வாத்தியார், அடுத்த செய்திக்குத் தாவினார்.
“திருநெல்வேலி மாவட்டத்துல இருக்கிற முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியிலதான் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் இருக்கு. ஒவ்வொரு வருஷமும் ஆடி அமாவாசை அன்னிக்கு இந்தக் கோவிலுக்கு ஏகப்பட்ட கூட்டம் வரும். இப்படி வர்றவங்களை செக்போஸ்ட்ல கடுமையா சோதனை பண்ணித்தான் வனத்துறைக்காரங்க அனுப்புவாங்க. ஆனா, இந்த வருஷம் சரியா சோதனை பண்ணாததால காட்டுக்குள்ள ஏகப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பையும் குவிஞ்சு கிடக்குதாம். ‘விலங்குகள் சாப்பிட்டா இறந்து போயிடும். இனிமே, பழைய மாதிரியே வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பைப் பலப்படுத்தணும்’னு சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வெச்சிருக்காங்க” என்றார்.
அந்த நேரத்தில் வானம் இருட்டிக்கொண்டு சில தூறல்கள் விழ, அன்றைய மாநாடு அத்தோடு முடிவுக்கு வந்தது.

இளநீர் வணிக வளாகம்!
அதிக விற்பனை வாய்ப்புள்ள பொள்ளாச்சி இளநீரை இடைத்தரகர் இல்லாமல் சந்தைப்படுத்துவதற்காக... தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மூன்று கோடியே இருபத்தைந்து லட்ச ரூபாய் செலவில், மூன்றே கால் ஏக்கர் பரப்பில் வணிக வளாக மையம் கட்டப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள இந்த மையத்தில், 3 லட்சம் இளநீர் காய்களை குவித்து விற்பனை செய்ய முடியும். 3 ஆயிரம் டன் அளவு இளநீர் காய்களை இருப்பு வைக்கும் வசதியும் உள்ளது. இங்கு, ஏல முறையில் விற்பனை நடைபெற உள்ளதால் இடைத்தரகர்கள் பங்கு பெற முடியாது. இம்மையத்தின் மூலம் சிறிய தென்னை விவசாயிகளும், சிறிய வியாபாரிகளும் லாபம் அடைய முடியும்.