கோவளம் கொடுமை !பா.ஜெயவேல்,, துரை.நாகராஜன்
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என உயிர்களில் ஏற்றத்தாழ்வு கூடாதென ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்குச் சொன்ன அறிவு தமிழன் அறிவு’ என மார்தட்டிக் கொள்கிறோம். அப்படிப் பெருமை கொள்ளும் நமது செவிட்டில் 'பொளேர்’ என அறைவது போலிருக்கிறது, சென்னை மாமல்லபுரம் இடையே கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள கோவளம் ஊராட்சியில் நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை!
ஆகஸ்ட் 19ம் தேதி காலையில் கோவளம் கடற்கரையோரத் தெருக்களில் திரிந்த 20 நாய்களை, ஆட்களை வைத்து சுட்டுத்தள்ளி இருக்கிறார்கள். சுட்டுக் கொல்லப்பட்ட நாய்களில் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த மோகன் என்பவரின் வளர்ப்பு நாயும் ஒன்று. அதுவும் அவரின் கண் எதிரேயே அது சுட்டுக்கொல்லப்படவேதான் விஷயம் வெளியில் வந்து பலரையும் பதைபதைக்க வைத்திருக்கிறது!
இதுதொடர்பாக மோகனிடம் கேட்டபோது, 'நான் வளர்க்கிறது நாட்டுரக நாய்தான். காலையில வழக்கம் போல கோவளம் கடற்கரையில 'டோக்கி’யுடன் (வளர்ப்பு நாயின் பெயர்) வாக்கிங் போய்க்கிட்டிருந்தேன். திடீர்னு துப்பாக்கியால சுடுற சத்தம் கேட்டுச்சு. பக்கத்துல சிலர் நாய்களை சுட்டுக்கிட்டு இருந்தாங்க. உடனே, நான் டோக்கினு கத்தினேன். டோக்கியும் என்னை நோக்கி ஓடி வந்தான். நான், 'சுடாதீங்க’னு கத்திக்கிட்டே ஓடினேன். என் கண் முன்னயே டோக்கியை சுட்டுத்தள்ளிட்டாங்க. அவன் இல்லாம வீடே வெறிச்சோடிப் போயிடுச்சு. யாரும் சரியா சாப்பிடறதுகூட கிடையாது' என்றவர், தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.

தன் நாய் சுடப்பட்டதையடுத்து பொங்கி எழுந்த மோகன், 'புளூகிராஸ்’ உதவியுடன் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் இதற்கு மூலக்காரணமே கோவளம் ஊராட்சித் தலைவர் ஜானகிராமன் என்பது தெரிய வந்திருக்கிறது.
இதுதொடர்பாக கோவளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகிராமனிடம் கேட்டபோது, 'கிராமசபைக் கூட்டத்துல இந்தப் பகுதி பெண்கள், நாய்த் தொல்லை அதிகமா இருப்பதா புகார் சொன்னாங்க. அதனால், நான் வார்டு உறுப்பினர்களிடம் நடவடிக்கை எடுக்கச் சொன்னேன். ஆனால், அதைப் பிடிக்கிறதுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்கள், சுட்டுட்டதா சொல்றாங்க' என்று தனக்கு ஏதும் தொடர்பு இல்லாதது போலவே பேசினார்.
இதைப் பற்றி புளூ கிராஸ் அமைப்பின் பொதுமேலாளர் டான் வில்லியம்ஸிடம் பேசியபோது, 'கோவளம் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. வெளியில் தெரிந்தால் பிரச்னை பெரிதாகிவிடும் என்பதற்காக, இறந்த நாய்களை படகில் ஏற்றிச் சென்று கடலில் வீசியிருக்கிறார்கள். எட்டு நாய்களின் உடல்கள் கரை ஒதுங்கியதை வைத்துத்தான் அதை உறுதி செய்தோம். கரை ஒதுங்கிய நாய்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி இருக்கிறோம். நாய்களைச் சுடுவதற்கு காரணமாக இருந்த ஜானகிராமன் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை இந்தப் பிரச்னையை விட மாட்டோம்'' என்று சொன்னவர்,
''இதுபோல பல ஊராட்சிகளிலும் தெரு நாய்களைச் சுடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். இது தவறான நடைமுறை. இதில் அரசு தலையிட்டு தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றும் சொன்னார்.

புகாரின் அடிப்படையில் ஊராட்சித் தலைவர் ஜானகிராமன், ஊராட்சி உதவியாளர் முகமது அலி மற்றும் நாய்களை சுட்டுக்கொலை செய்த செல்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீஸார், செல்வத்தை மட்டும் கைது செய்துள்ளனர். மற்ற இருவரும்... வழக்கம்போல தலைமறைவுதான்!
'சரி, நாய்களுக்காக இத்தனை தூரம் பரிந்து பேசுகிறீர்களே, இந்த நாய்களால் மக்கள் படும்பாட்டை யாராவது யோசித்தீர்களா... தினம் தினம் கடிபடும் எங்கள் அவஸ்தை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கூறும் மக்களின் கேள்வியிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. ஆனால், அதற்காக நாய்களைச் சுட்டுக்கொல்வது எந்த விதத்தில் சரி? இந்தப் பிரச்னைக்கு தீர்வு என்ன?
இதைப் பற்றி பேசிய தமிழக அரசின் சுகாதாரத்துறை துணை இயக்குநர் ராஜசேகர் ''நாய் கடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. நாய் வெறிபிடித்தால் கடிக்கும். அல்லது மனிதர்கள் அதை சீண்டும்போதும் கடிக்கும். பெரும்பாலும், தன்னை தொந்தரவு செய்யாத யாரையும் நாய்கள் கடிப்பதில்லை. எனவே நாம் எச்சரிக்கையோடு நடந்துகொள்ளும்வரை பிரச்னைகள் இருப்பதில்லை'' என்று சொன்னவர்,
''தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெறிநாய்கடிக்கு தடுப்பூசி போடும் பிரிவு 24 மணி நேரமும் செயல்படுகிறது. வெறிநாய் மட்டுமல்லாது சாதாரண நாய் கடித்தாலே வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாய்க்கடியின் தன்மைக்கு ஏற்ப
3 அல்லது 4 ஊசிகள் போடப்படும். எந்தப் பகுதியில் அதிகமாக வெறிநாய்க்கடி உள்ளதோ, அங்கு 'இனவிருத்திக் கட்டுப்பாடு’ செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது'' என்று சொன்னார்.
நாய்க்கடிப் பற்றி...

நாய்களால் உள்ளூர்க்காரர்கள் பாதிக்கப்படுவதைவிட, வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் தெரு நாய்கள் ஊரையே கூட்டிவிடும். இதைப் பற்றி பேசிய மதுரை மாவட்டம், சோழவந்தானைச் சேர்ந்த தென்னைக்குருத்து வியாபாரி நாகசெல்வம், ''ஆறு வருஷமா தென்னைக்குருத்து எடுத்துக்கிட்டு விருதுநகர்ல போய் வித்துக்கிட்டு இருக்கேன். புதுசா ஒரு தெருவுக்குள்ள நுழையும்போது அங்குள்ள நாய்கள் குரைக்கும். ரிலே ரேஸ் மாதிரி அடுத்த தெரு நாய்களும் குரைக்க ஆரம்பிச்சிடும். கிட்டவந்து கடிக்கிற மாதிரி குரைக்கும். குச்சியோ, கல்லோ எடுத்து விரட்டிடுவோம். அதையும் மீறி நாலு மாசத்துக்கு முன்ன என்னை நாய் கடிச்சுட்டுது ஊசி போட்டு குணப்படுத்திக்கிட்டேன். நாய்ங்கனு இருந்தா இப்படித்தான்... நாமதான் கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்கணும்'' என்று சொன்னார்.
'உயிர்ச் சங்கிலி உடைந்துவிடும்!''

இந்தச் சம்பவம் பற்றி வருத்தம் பொங்க நம்மிடம் பேசிய கால்நடை மருத்துவர் காசி.பிச்சை, ''எப்போதுமே மேல்நாடுகள் என்றால் நம்மவர்களின் மோகமே அலாதிதான். உடுத்தும் உடை, உண்ணும் உணவு, வசிக்கும் வீடு, வளர்க்கும் பிராணிகள் என்று எதையெடுத்தாலும் அந்நிய மோகம் பிடித்தாட்டும் தேசம் நம் தேசம். இருக்கவே கூடாத இந்த மோகம்தான், நம்முடைய பாரம்பர்ய விவசாயத்தின் அழிவுக்கு ஆரம்பப் புள்ளியை வைத்து, இன்றைக்கு நம்முடைய பெரும்பாலான பிரச்னைகளுக்கும் பெரும்காரணியாக உருவெடுத்து நிற்கிறது. அந்த வகையில் நாட்டு இனங்கள் எனப்படும் நம்முடைய மண்ணுக்கே உரித்தான பல உயிரினங்களையும் பறி கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். மாடுகள், கோழிகள், ஆடுகள் என்று பலவற்றையும் இறக்குமதி செய்யும் நம்மவர்கள், நாய்களையும் தாறுமாறாக இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள்.
சரி, அது அவர்களின் பணம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. அதற்காக, இந்த மண்ணின் மைந்தர்களான நாட்டு இனங்களை பலி கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம்? இங்கே படைக்கப்பட்டிருக்கும் நுண்ணுயிரி முதல், அத்தனை உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் பூமிக்கும், உயிர்ச்சூழலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் உதவி செய்யும் வகையிலேதான் படைக்கப்பட்டிருக்கின்றன. மனிதனும் அப்படியே, அவன் ஆறாவது அறிவு படைத்தவன் என்று இறுமாப்பு கொள்ள ஆரம்பிக்காத வரையில். அதன் பிறகுதான் பிற உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும்கேடுகள் ஆரம்பித்தன.
நம் வீட்டைச்சுற்றியே வளர்ந்து திரிந்து, நாம் போடும் மிச்சம் மீதி, நம் குழந்தைகள் கழிக்கும் மலம் என்று அனைத்தையும் தின்று வீதியையும் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு, பைசா செலவில்லாமல் வேலை செய்யும் கூலியாட்கள்தான் தெருநாய்கள். இப்போது நாகரிகம் என்கிற பெயரில் வளர்ப்பு நாய்கள் வந்துவிட்டதால், தெருநாய்களின் தேவை குறைந்துவிட்டது. கிராமப்புறங்களிலாவது பரவாயில்லை... நகர்ப்புறங்களில் மிச்சம் மீதியைக் கூட நாய்க்கு வைக்காமல், குப்பைத் தொட்டியில் வீசி, அது அப்படியே குப்பைக் கிடங்குக்குச் சென்றுவிடுகிறது லாரிகள் மூலமாக. இதனால் அங்கே தெரு நாய்களுக்கு வாழ்க்கையே இல்லாமல் போய்விட்டது.
தப்பித் தவறி வாழ்ந்து கொண்டிருக்கும் நாய்களையும் பிடித்துச் சென்று ரகசியமாக கொல்வது தொடர்கிறது. மற்றொருபுறம், நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்து திரும்பவும் அதே பகுதியில் இறக்கிவிட்டு விடுகிறார்கள். இது அந்த நாய்களின் இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறது. இனப்பெருக்கம் இல்லாமல் போனால், நாட்டு நாய்கள் என்கிற இனமே இல்லாமல்தானே போகும்.
இப்படி தெருநாய்கள் இல்லாமல் போனால், இதனால் உயிர்ச்சங்கிலி எனும் உன்னதமான ஒன்று அறுபட்டு அதன் எதிர்விளைவாக, அந்தந்த பகுதிகளில் வாழும் அனைத்து உயிரினங்களுக்குமே ஏதாவது ஒரு பாதிப்பு வரவே செய்யும். அது என்ன என்பதை காலம்தான் தீர்மானிக்கும். எனவே, தெருநாய்களான நம் நாட்டுநாய்களைக் காப்பாற்றும் வகையில், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் தெரு நாய்களை மதித்து அவற்றுக்கும் மிச்சம் மீதி உள்ள உணவைப் போட்டு வளர்க்க ஆரம்பித்தால், அவை கடைசி வரை நன்றி உணர்வோடு நிச்சயமாக வாலாட்டிக் கொண்டு நம்மோடு வளையவரும் என்பதை உணரவேண்டும். ஏனெனில், மனிதன் முதன்முதலாக வளர்க்க ஆரம்பித்ததே... நாய்களைத்தான்'' என்று அக்கறையோடு சொன்னார்.