நாட்டு நடப்பு
Published:Updated:

ஆடைகளிலும் இயற்கை...மூலிகைநார் துணிகள் !

துரை.நாகராஜன், படங்கள்: ஜெ.விக்னேஷ்

சாயன இடுபொருட்களின் பயன்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்பு உணர்வு, இயற்கை விவசாயத்தை காலத்தின் கட்டாயம் ஆக்கியுள்ளது. தற்போது இயற்கை வழி விவசாயத்தில் விளைந்த உணவுப்பொருட்கள் சந்தைகளில் தாராளமாகக் கிடைக்கும் நிலையில், உணவைத் தாண்டி 'உடைகளிலும் இயற்கை’ என்ற கோஷத்தை முன்வைக்கிறார்கள், சூழலியலாளர்கள். 

அதன் முதல் கட்டமாக ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை, பம்மல் அருகே உள்ள அனகாபுத்தூரில் 'இயற்கை மூலிகை நார்களால் ஆன துணிகள் அறிமுகப்படுத்தும் விழா’ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திட்ட கமிஷன் துணைத்தலைவர் சாந்த ஷீலா நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மூலிகை நார்களால் ஆன புடவையை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆடைகளிலும் இயற்கை...மூலிகைநார் துணிகள் !

நிகழ்ச்சியில் மூலிகைப் புடவையை உருவாக்கிய சணல் நெசவாளர் சங்கத் தலைவர் சேகர் பேசும்போது, 'முதல்முதலாக மூலிகை நார்களால் ஆன துணிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது எங்களையும் வாழ வைக்கும், விவசாயிகளையும் வாழவைக்கும். இத்துணிகளை கற்றாழை நார், வாழை நார், தேங்காய் நார், எருக்கன் செடி, வெட்டிவேர் போன்றவற்றைக் கொண்டு தயாரித்துள்ளோம். இயற்கைச் சாயங்களைத்தான் உபயோகப் படுத்தியுள்ளோம். இத்துணிகளை அணிவது, உடலுக்கு மிகவும் நல்லது. மக்கள் மத்தியில் இந்த துணிக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என நான் நினைக்கிறேன். சமீபத்தில் நெசவாளர் தினத்துக்கு சென்னைக்கு வந்த பிரதமர் மோடிக்கு நாங்கள் தயாரித்த மூலிகை நார்களால் ஆன சால்வை போர்த்தப்பட்டது.

இந்த விழாவில் அறிமுகப்படுத்திய சேலையின் விலை 2,500 ரூபாய் ஆகும். மூலிகைநார் சேலையானது இப்போதைக்கு அனகாபுத்தூரில் மட்டுமே கிடைக்கும், இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் கிடைக்கும். சேலை தயாரிப்பது சம்பந்தமாக பயிற்சியும் அளிக்கப்படும்'' என்றார்.

ஆடைகளிலும் இயற்கை...மூலிகைநார் துணிகள் !

விழாவில் நிறைவாகப் பேசிய சாந்த ஷீலா நாயர், 'இந்தியாவில் முதல் முறையாக சேலை, சட்டைகள் மூலிகை நார்களால் செய்யப்பட்டுள்ளன. இது நமக்கும் நமது நாட்டுக்கும் பெருமைதான். இது போல இயற்கைப் பொருட்களால் ஆன பல தயாரிப்புகள் வரவேண்டும்' என்றார்.

தொடர்புக்கு,

சேகர்,

செல்போன்: 98415-41883