நாட்டு நடப்பு
Published:Updated:

பால் பரிசோதனை...

மீண்டும் கிலி கிளப்பும் கேரளா !ஜி.பழனிச்சாமி

'கேரளாவுக்கு வரும் காய்கறிகளில் விஷத்தன்மை இருப்பதால், தமிழகத்திலிருந்து வரும் காய்கறிகளுக்குத் தடை’ என்பதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன் செய்தி ஒன்று புறப்பட்டு வர, தமிழக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் ரீதியிலும் இந்தப் பிரச்னை பற்றிக் கொண்டது. ஆனால், அப்படி எந்தத் தடையும் விதிக்கப்படாததால் அந்தப் பரபரப்பு அடங்கிப் போனது! 

இந்நிலையில், 'எல்லையோர சோதனைச் சாவடிகளில் தற்காலிகப் பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டிலிருந்து வரும் பால், தயிர், மோர் மற்றும் வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களின் மாதிரிகள் எடுக்கப்படும். தரமில்லாத பால் பொருளாக அது இருக்கும்பட்சத்தில் தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படும். சம்பந்தப்பட்டவர் மீது வழக்கும் பதியப்படும்’ என்று கேரளாவிலிருந்து ஒரு தகவல் வெளியாக, மீண்டும் பரபரப்பு கிளம்பிவிட்டது தற்போது!

இதைக் கேள்விப்பட்டு, பொள்ளாச்சிபாலக்காடு சாலையில் உள்ள கோபாலாபுரம் செக்போஸ்ட்டில் கேரள காவல்துறை உதவி ஆய்வாளர் சந்தோஷை சந்தித்தோம். அவர் நம்மிடம், ''காய்கறிகள், பால் என்று எதுவுமே இந்த செக்போஸ்டில் சோதனை செய்யப்படுவதில்லை. தற்காலிக ஆய்வுக்கூடமும் அமைக்கப்படவில்லை. குழப்பம் இல்லாமல் எல்லா பொருட்களும் தமிழகத்திலிருந்து போய்க்கொண்டிருக்கின்றன'' என்று சொன்னார்.

பால் பரிசோதனை...

அடுத்து, பொள்ளாச்சிதிருச்சூர் ரோட்டில் உள்ள மீனாட்சிபுரம் சோதனைச்சாவடிக்குச்  சென்ற நாம், கேரள பால் வளத்துறையின், பாலக்காடு கோட்ட தரக்கட்டுப்பாட்டு அதிகாரி வர்க்கீஸ் ஜார்ஜை சந்தித்தோம். அவர், ''இங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஆய்வுக்கூடத்தில் பால், தயிர், மோர் மற்றும் நெய் உள்ளிட்ட பால் பொருட்களை மட்டும் மாதிரி எடுத்து ஆய்வு செய்து வருகிறோம். காய்கறிகள் எங்கும் ஆய்வு செய்யப்படுவதில்லை. அதற்கான ஆய்வுக் கூடங்களும் தற்போதைக்கு கேரளத்தில் இல்லை. இந்த சோதனைகள் கூட ஓணம் பண்டிகை வரை மட்டும்தான். ஆகஸ்ட் 27 ம் தேதிக்குப் பிறகு இந்தத் தற்காலிக ஆய்வுக்கூடம் செயல்படாது'' என்று சொன்னார். கூடவே அவர் ஒரு குண்டுபோடத் தவறவில்லை.

''தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குள் வரும் தேங்காய் எண்ணெயில் சில வேதிப்பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால், எண்ணெயை ஆய்வு செய்யும் பரிசோதனைக் கூடம் அனைத்து செக்போஸ்டிலும் விரைவில் நிறுவப்படக்கூடும்'' என்றார் வர்கீஸ் ஜார்ஜ்.

பால் பரிசோதனை...

என்னவோ போங்க சேட்டா... ஏதாச்சும் குடைச்சலைக் கொடுத்துட்டேதான் இருக்கீங்க!