டெல்டாவை செல்லரிக்கும் ஷேல் மீத்தேன் !கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன், க.சதீஷ்குமார்
‘வாலு போய், கத்தி வந்த’ கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘கத்தி போய், வாள் வந்த’ கதை தெரியுமோ? டெல்டா மாவட்ட மக்களின் நிம்மதியை நிரந்தரமாகப் பறிபோகச் செய்திருக்கும் மீத்தேன் விவகாரம்தான் இந்தக் கதை!
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் நிலக்கரியிலிருந்து மீத்தேன் எடுக்கும் திட்டத்தை வீராவேசமாக கையில் எடுத்தது மத்திய அரசு. இந்தத் திட்டம் டெல்டாவையே பாலைவனமாக்கும் என்பதை அறிந்து பதைபதைத்த மக்கள், போராட்டங்களில் குதித்து, அதற்கு தற்காலிகமாக தடை ஏற்படுத்தினர். ஆனால், ‘ஷேல்-மீத்தேன் எடுக்கும் திட்டம்’ என்ற பெயரில் நிலத்துக்குள்ளிருக்கும் பாறைகளில் இருந்து மீத்தேன் எடுக்கும் புதிய திட்டத்துடன் தற்போது மிரட்டத் தொடங்கியிருக்கிறான் மீத்தேன் எமன். இதனால், டெல்டா மாவட்டங்களில் போராட்டங்கள் மீண்டும் வலுவடைந்து வருகின்றன.
முன்னர், நிலக்கரி-மீத்தேன் எடுப்பதற்கு ‘தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், டெல்டாவின் தொடர் போராட்டங்கள் மற்றும் அரசியல் காரணங்களால் அப்பணிகளை அந்த நிறுவனத்தால் தொடங்க முடியவில்லை. இதையடுத்து, ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநிலங்களவையில் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இதனால், மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த மீத்தேன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

ஆனாலும் ‘‘மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. ஒ.என்.ஜி.சி நிறுவனம் மூலமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என அபயக்குரல் எழுப்பியவர்களின் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வந்தது ‘பசுமை விகடன்’.
இந்நிலையில்தான் கடந்த சில வாரங்களாக திருவாரூர் மாவட்டத்தி லிருக்கும் விக்கிரபாண்டியம், கொராடாச்சேரி, அய்யம்பேட்டை, திருக்கண்ணமங்கை, மணக்கால், நன்னிலம் ஆகிய இடங்களில்... ஒ.என்.ஜி.சி நிறுவனம் புதிய கேஸ் கிணறுகள் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. இவை அனைத்துமே மீத்தேன் எடுப்பதற்கான கிணறுகள்தான் என அச்சம் தெரிவித்து இப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தி, தடுத்து நிறுத்தினார்கள். இந்நிலையில், ‘ஆய்வுப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் வழக்குத் தொடர்ந்தார்.
இதனால் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆய்வுப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 10-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ஏதும் எங்களுக்கு இல்லை’ என ஒ.என்.ஜி.சி தரப்பு தெரிவித்ததால் தடையை நீக்கியது, பசுமைத் தீர்ப்பாயம். இந்நிலையில்தான் தற்போது, ஷேல்-மீத்தேன் எடுக்கும் திட்டம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் மக்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளன.

வேளாண் பொருளியல் ஆய்வாளரும் தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகருமான கி.வெங்கட்ராமன் இது தொடர்பாக ஆதாரப்பூர்வமான தகவல்களோடு நம்மிடம் பேசினார். ‘‘பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் வாய் கூசாமல் பொய் பேசுகிறார்கள். மிகவும் ஆபத்தான ‘ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்’ முறையில் காவிரிப் படுகையில் ஷேல்-கேஸ், ஷேல்-ஆயில் எடுப்பதற்கான அனுமதியை மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடமிருந்து 2013-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஒ.என்.ஜி.சி நிறுவனம் பெற்றுள்ளது. ஷேல்-கேஸ் எனச் சொல்லப்படுவதும் மீத்தேன்தான். பல ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும் பாறைகளின் துகள்களுக்கு இடையே உள்ள இயற்கை எரிவாயுவைத்தான் ஷேல்-கேஸ் என்கிறார்கள். இதில் 85 முதல் 90 சதவிகிதம் அளவுக்கு மீத்தேன் இருக்கும்.
நிலக்கரி-மீத்தேன் எடுப்பதற்கான அதே ஆபத்தான நீரியல் விரிசல் முறையைத்தான் இதற்கும் பயன்படுத்துவார்கள். இன்னும் சொல்லப் போனால், நிலக்கரி-மீத்தேன் எடுக்கும் திட்டத்தைவிட ஷேல்-மீத்தேன் எடுக்கும் திட்டம் மிகவும் அபாயகரமானது. 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள பாறைகளின் துகள்களுக்கு இடையில் உள்ள மீத்தேனை எடுக்கும் திட்டம் இது. 600-க்கும் மேற்பட்ட மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனக் கரைசல்களை, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரில் கலந்து உயர் அழுத்தத்தில் உள்ளே செலுத்தி, அங்கிருக்கும் பாறைகளைத் துகள்துகள்களாகத் தகர்த்தெறிந்து, மீத்தேனை வெளியில் எடுப்பார்கள். இதற்குப் பயன்படுத்தப்படும் ஆபத்தான ரசாயனக் கரைசல்கள் வெளியில் எடுக்கப்பட்ட பிறகு நீர்நிலைகளிலும் விளைநிலங்களிலும் கொட்டப்படும். இதனால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், நீர்நிலைகள் நஞ்சாக மாறக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன” என்று அதிர வைத்தார்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் ‘‘தமிழக அரசு, நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சிகள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என யாருடைய அனுமதியையுமே பெறாமல் எவ்வித விதிமுறைகளையுமே பின்பற்றாமல்... விளைநிலங்களில் குழாய் பதிக்கும் ஒ.என்.ஜி.சியைக் கண்டிப்பதற்கு பதிலாக, இதற்கான தடையை பசுமைத் தீர்ப்பாயம் நீக்கியிருப்பது, வேதனைக்குரியது. விவசாயத்தை அழிக்கும் செயல்.
ஒ.என்.ஜிசி, கெயில், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களை இங்கிருந்து முற்றிலுமாக உடனடியாக வெளியேற்ற வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இதெல்லாம் நடைபெற்றால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்... விவசாயத்தையும் வாழ வைக்க முடியும்!” என்று சொன்னார்.
ஆர்ப்பாட்டம்!
ஷேல்-கேஸ் எடுக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இத்திட்டத்துக்்கு அனுமதி வழங்கக் கூடாது... ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18-ம் தேதி, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த சேதுராமன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். இதேபோல, மன்னார்குடி, சிதம்பரம், திருவாரூர், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களிலும் இந்த அமைப்பு சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.
‘‘ஷேல்கேஸ் எடுக்கவில்லை...!”
காரைக்காலில் உள்ள ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி டி.கே.கே.ராமனிடம் இது குறித்து கேட்டபோது “காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. பசுமைத் தீர்ப்பாயத்தில் தெளிவாக இதனைத் தெரிவித்துவிட்டோம். ஷேல்கேஸ் எடுக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை. தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் எங்களுடைய ஒ.என்.ஜி.சி நிறுவனம் மேற்கொள்ளும் புதிய பணிகள் அனைத்துமே வழக்கமான பெட்ரோல்-கேஸ் எடுப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள்தான். இதனால் இங்குள்ள மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது” என்றார்.