நாட்டு நடப்பு
Published:Updated:

உழவாளி

ஊழல் பெருச்சாளிகளை சுளுக்கெடுக்க வருகிறான்...

உழவாளி

அதிகாரிகளின் அட்சயப் பாத்திரம் ‘ஆத்மா’ ?

‘இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள்தான்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டிய வேளாண் துறையில் இருக்கும் பலரும் செய்யும் அடாவடிகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்தத் துறையில் நல்லவர்கள் எண்ணிக்கைக் குறைவாக இருப்பது, விவசாயிகள் செய்த பாவம் என்று சொல்லித்தான் மனதைத் தேற்றிக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது!

-‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே...’ என்று புலவர் புலமைப்பித்தன் எழுதிய திரைப்படப் பாடலின் வரிகளை சற்றே மாற்றி... ‘எந்தத் திட்டமும் நல்ல திட்டம்தான் அரசு அறிக்கையிலே... அது பயனாய் இருப்பதும், பாழாய் போவதும் அதிகாரிகள் கையினிலே’ என்று சொன்னால் மிகையாகாது. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது, அரசாங்கம் அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும்!

அதிகாரிகளின் அலட்சியங்களாலும், ஊழலாலும் எத்தனையோ நல்ல திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று... விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட ‘ஆத்மா’ திட்டம் (ATMA-Agricultural Technology Management Agency). இதை ‘அட்மா’ என்றுதான் அழைக்க வேண்டும். ஆனால், விவசாயிகள் தொடங்கி அதிகாரிகள் வரை அனைத்துத் தரப்பும் ‘ஆத்மா’ என்றே சொல்லிப் பழகிவிட்டதால், நாமும் அப்படியே அழைப்போம்.

‘விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் அற்புதத் திட்டமான இந்த ‘ஆத்மா’வில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, விவசாயிகளுக்குப் பயன் கிடைக்குமாறு செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை பரவலாக வரவே, அதுகுறித்துத்தான் முதலில் விசாரிக்க ஆம்பித்தேன்.

உழவாளி

‘வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை’ என்பதற்கான ஆங்கில பதத்தின் சுருக்கமே இந்த ‘ஆத்மா’. ஒரு மாவட்டத்தினுடைய வேளாண்மை வளர்ச்சி மற்றும் முடிவுகளை நிர்வகிப்பதில் இம்முகமை முக்கியமான பங்காற்றுகிறது. மத்திய அரசின் நிதிப்பங்களிப்பு 90%, மாநில அரசின் பங்களிப்பு 10% என்ற விகிதத்தில் இந்தத்திட்டம் செயல்படுகிறது.

வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, நீராதார பொதுப்பணித்துறை உள்பட இன்னும் சில துறைகளும் இதில் பங்காற்றுகின்றன. தொழில்நுட்பங்கள் முழுமையாக விவசாயிகளுக்குச் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இத்தகைய ஏற்பாடு.

வழக்கமாக அனைத்துத் திட்டங்களும் மேல்மட்டத்தில் வகுக்கப்பட்டு, செயல்படுத்தும் வேலை மட்டும்தான் கீழ்மட்டத்தில் இருக்கும். ஆனால், இதில் கீழ்மட்டத்திலிருந்தே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு என்ன விதமான தொழில்நுட்பங்கள் தேவை எனக் கண்டறிந்து, அதற்குத் தேவையான பயிற்சிகளைக் கொடுப்பது; தொழில்நுட்பங்கள் நேரடியாகக் கண்டுணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாக மாவட்ட, மாநில, தேசிய அளவில் பண்ணைச் சுற்றுலாக்களுக்கு விவசாயிகளை அழைத்துச் செல்வது; அந்தந்தப் பகுதிக்கு, பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களைத் தேர்வு செய்து மாதிரி செயல்விளக்கப் பண்ணைகள் அமைப்பது; செயல் விளக்கப் பண்ணைகளில் ஆறுகால கட்டமாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டத்திலும் பயிரின் வளர்ச்சி, பிரச்னைகள், தீர்வுகள் அனைத்தையும் கற்றுத்தருவது; மானிய விலையில் கருவிகள், விதைகள் போன்றவற்றை வழங்குவது என்று பல்வேறு பயன்கள் இத்திட்டத்தில் அடங்கியிருக்கின்றன.

இதனால், இந்தத் திட்டத்துக்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதை வைத்து விவசாயிகளுக்கு நன்மைகள் ஏற்படுவதற்கு வழி செய்யவேண்டிய அதிகாரிகளில் பலர், ஆளும் அரசியல்வாதிகளைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, தங்களுக்கு பணம் கொழிக்கும் அட்சயப் பாத்திரமாக இந்த ஆத்மா திட்டத்தை மாற்றி வைத்திருப்பதுதான் சோகம்!

2014-15 -ம் ஆண்டு இத்திட்டத்துக்கு 43.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 40 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் தொகையில் எத்தனை கோடி ரூபாய், திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றியது என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி.

இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வட்டாரத்துக்கும் இளங்கலை வேளாண்மை படித்த ஒருவரை பிளாக் டெக்னிக்கல் மேனேஜர் (பி.டி.எம்) என்ற பெயரிலும், டிப்ளோமா வேளாண்மை படித்த இரு நபர்களை (ஏ.டி.எம்) என்ற பெயரிலும் நியமித்து இருக்கிறார்கள். இந்தப் பணியிடங்களை முறையாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நிரப்பாமல், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலமாகத்தான் பல மாவட்டங்களில் நிரப்பி இருக்கிறார்கள். இதனால், இதில் நிறையவே பணம் விளையாடியிருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்து நிற்கின்றன!

‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 27 பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நிரப்பாமல் செட்டிகுளத்திலுள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலமாக, மேலாளர் பணியிடத்துக்கு 2 லட்சம், துணைமேலாளர் பணியிடத்துக்கு 1 லட்சம் என வாங்கிக்கொண்டு நிரப்பியுள்ளார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதீப் தேவராஜ் என்பவர் 2011-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிறகு, அவருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவே, வழக்கு வாபஸ் ஆகிவிட்டது. அவர் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்’’ என்கிறார்கள், விவரம் அறிந்த விவசாயிகள்.

சேலத்தில் நான் சந்தித்த முன்னோடி விவசாயி ஒருவர், ‘‘இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் 75% விவசாயிகளுக்காகவும், 25% அலுவலகத் தேவைகளுக்காவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது விதி. ஆனால், நிஜத்தில் நடப்பதோ நேரெதிர். அதிகாரிகள், தங்களுக்கும் அலுவலகத்துக்கும் தேவையானவற்றை வாங்குவதற்கு 75 சதவிகித தொகையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். உதாரணமாக அலுவலகத்துக்குத் தேவையான கம்ப்யூட்டர், எல்.சி.டி டி.வி, கேமரா என அனைத்துப் பொருட்களையும் இந்தத் திட்டத்தில் வாங்குகின்றனர். எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான ஆயுள் காலம் மூன்று ஆண்டுகள் எனக் கணக்குக் காட்டி, புதிய பொருட்களையே சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்கின்றனர்” என ஆதங்கப்பட்டார்.

“மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்படும் பயிற்சிகளில் கலந்துகொள்ள விவசாயி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சில பயிற்சிகள் 5 நாட்கள் நடத்தப்படுகின்றன. சில பயிற்சிகள் 7 நாட்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 20 நபர்கள், அல்லது 40 நபர்கள் வீதம் தேர்வு செய்யப்படுகிறார்கள். வெளிமாநிலங்களில் சுற்றுலா செல்வதற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும்; மாநிலத்துக்குள் சுற்றுலா செல்ல நாள் ஒன்றுக்கு
400 ரூபாயும்; மாவட்டத்துக்குள் சுற்றுலா செல்ல நாள் ஒன்றுக்கு 300 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், குறைவான ஆட்களை அழைத்துச் சென்றுவிட்டு அதிகமான ஆட்களை அழைத்துச் சென்றது போல கணக்குக் காட்டுகிறார்கள்.

இதேபோல, செயல் விளக்கத்திடல் அமைக்க, ஓர் இடத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. சம்பிரதாயத்துக்கு ஒரு சில இடங்களில் செயல் விளக்கத்திடல் அமைத்துவிட்டு, பல செயல் விளக்கத்திடல்களை அமைத்தது போல கணக்குக் காட்டுவதும் பெரும்பாலும் நடக்கிறது. மேலிருந்து கீழ்மட்டம் வரை பெரும்பாலான அதிகாரிகளும் இதில் கூட்டுக்கொள்ளை அடிக்கின்றனர்” என குற்றம்சாட்டுகிறார்கள், விவசாயிகள்.

விவசாயிகளுக்கான பணத்தில் செல்போன் வாங்கி வைத்திருக்கும் அதிகாரிகள், ‘விவசாயிகளுக்கான பட்டறிவுப் பயணம்’ என்கிற பெயரில் தமக்கு வேண்டியவர்கள் மற்றும் ஆளுங்கட்சிக்காரர்களை அழைத்துக் கொண்டு இன்பச் சுற்றுலா சென்று வரும் அதிகாரிகள்... இன்னும் பல ரூபங்களில் நடத்தப்படும் ஊழல்கள் குறித்தெல்லாம் அடுத்த இதழில் பார்ப்போம்.

உங்கள் பகுதிக்கும் உழவாளி வர வேண்டுமா?

உங்கள் பகுதியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் அலட்சியங்களையும் அட்டூழியங்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். ‘உழவாளி’ உங்கள் ஊருக்கு வந்து உண்மை நிலையை விசாரித்து, அவற்றை உலகறிய செய்வான். உங்கள் பகுதி பிரச்னைகளை 044-66802927 என்ற எண்ணில் அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, செய்யும் தொழில், ஊர் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைக் கூறி, உங்கள் பிரச்னைகளைச் சொல்லுங்கள். உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் விரும்பினால் ரகசியமாக வைக்கப்படும். அதேசமயம், உழவாளியின் வேட்டையும் ஆரம்பமாகிவிடும்.