நாட்டு நடப்பு
Published:Updated:

தேவை, பெரும்மாற்றம் !

தேவை, பெரும்மாற்றம் !

னைவருக்கும் பசுமை வணக்கம்!

மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் பெயரை, 'விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை’ என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார், பெயர் சூட்டுவதில் கில்லாடியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி.

விவசாயிகள், மோடியிடம் எதிர்பார்த்தது பெயர் மாற்றம் அல்ல, பெரும்மாற்றம். ஆம், கண்மூடித்தனமான திட்டங்களால் நலிந்துகொண்டிருக்கும் விவசாயத்துறையையும் விவசாயிகளையும் வாழவைக்கக் கூடிய அளவுக்கு அதிரடியான மாற்றங்களைத்தான் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஆட்சியைப் பிடித்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், பெயர்களை மட்டும் மாற்றிக்கொண்டிருக்கிறார்!

தேர்தலுக்கு முன்பாக மேடைகளில் 'ஜெய் கிஸான்’ என்று உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருந்தார் மோடி. அதிலிருந்து இன்னமும் அவர் மீளவே இல்லை. அந்த வகையில் இந்தப் பெயர் மாற்றம்கூட உணர்ச்சிவசப்பட்ட ஒரு முடிவாகத்தான் தெரிகிறதே தவிர, உண்மையான அக்கறையின் வெளிப்பாடாகத் தோன்றவில்லை.

'விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலையைக் கொடு’ என்று 60 ஆண்டு காலமாக கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறான் விவசாயி. இதுதான் அவனுடைய முழுமுதற் கோரிக்கை. இதையல்லவா முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும் மோடி!

விவசாயிகளின் பிரச்னை பற்றி விவாதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூடி கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக எல்லாவற்றையும் பேசி முடிப்பதுதான் இங்கே காலகாலமாக நடைமுறையில் இருக்கிறது. உண்மையான விவசாயிகளையும் அழைத்துப் பேசி, தேவையறிந்து திட்டம் போடும் வகையில், இந்த நடைமுறையை அடித்து நொறுக்கியிருக்க வேண்டும் மோடி!

ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு பெயரை மாற்றிக் கொண்டிருப்பது, 'புதிய மொந்தையில், பழைய கள்’ என்பதாகத்தான் இருக்குமே தவிர, எந்த வகையிலும் பயன் தருவதாக இருக்காது!

ஆசிரியர்