பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்
மணத்துக்கு மந்தாரை...மூளைக்கு வல்லாரை...வேலிக்கு கிளுவை!
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

இந்த முறை ஒருநாள் விவசாயிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்... கொதிகலன் கட்டுமான பொறியாளர் தங்கபாலு, டாஸ்மாக் சூப்பர்வைசர் துரைமுருகன், விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அம்ஜத், அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணிபுரியும் ரவி, மாணவர்களுக்கான உளவியல் ஆற்றுநர் நான்சி டயானா, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் செயலாளராகப் பணிபுரியும் கோபிநாத், இயந்திரவியல் பொறியாளர் ரகு ஆகியோர். இவர்களை நாம் அழைத்துச் சென்ற பண்ணை, திருவாரூர் மாவட்டம், செம்பியநல்லூரில் உள்ள ‘தாய் மண் இயற்கை வேளாண்மைப் பண்ணை’.
‘‘வாங்க, வாங்க, நீங்க எல்லாரும் இங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்’’ என்று புன்னகையோடு வரவேற்றார், பண்ணையின் உரிமையாளரான முன்னோடி இயற்கை விவசாயி திருநாவுக்கரசு. அறிமுகப்படலம் முடிந்ததும் அனைவருக்கும் இனிப்பான பலாச்சுளை கொடுத்து உபசரித்தார், திருநாவுக்கரசுவின் சகோதரர் சரவணன்.
அதைச் சாப்பிட்டுக் கொண்டே, ‘‘இந்தப் பண்ணை எவ்வளவு ஏக்கர்?” என்று கேட்டார், கோபிநாத்.
‘‘மொத்தம் 18 ஏக்கர். இங்க மகோகனி, மந்தாரை, மகிழம், வில்வம், வேங்கை, மலைவேம்பு, குமிழ்தேக்கு, ரோஸ்வுட், கொய்யா, தென்னைனு பத்தாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் இருக்கு. அதில்லாம வாழை, மூலிகைச் செடிகள், பாரிஜாதம், இட்லிப் பூ, பவளமல்லி, அடுக்குச் செம்பருத்தினு நிறைய பயிர்களும் இருக்கு. ஒரு மீன் வளர்ப்புக் குளமும் இருக்கு’’ என்றார், திருநாவுக்கரசு.
‘‘பெரியளவுல விவசாயத்துல இறங்கலாம்னு நினைக்கிறேன்’’ என்று சொன்ன துரைமுருகனை முதுகில் தட்டிக்கொடுத்து...
“விவசாயத்துக்கு வர்றது ரொம்பவே நல்ல விஷயம்தான். ஆனா எடுத்ததுமே பெரிய அளவுல இறங்கக்கூடாது. ஆரம்பத்துல வீட்டுத் தேவைகளுக்கு மட்டும் குறைவான பரப்புல ஆரம்பிச்சு, நல்லது கெட்டதுகளை அனுபவபூர்வமா தெரிஞ்சிக்கிட்ட பிறகுதான் படிபடியா விரிவுப்படுத்தணும். விவசாயம் செய்றோம்னா, எல்லா வேலைகளும் நமக்குத் தெரிஞ்சிருக்கணும். எந்த ஒரு வேலைக்கும் வேலையாட்களை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது’’ என்று சொல்லிக்கொண்டே அனைவரையும் அழைத்துக் கொண்டு பண்ணையைச் சுற்றிக் காட்ட ஆரம்பித்தார், திருநாவுக்கரசு.
நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்தும் வல்லாரை!
“இது வல்லாரை மூலிகைச் செடி. ஒரே ஒரு செடியைத்தான் வச்சேன். ஆறே மாசத்துல நல்லா பரவி பெருகிடுச்சு. நாங்க இதை துவையல் செஞ்சி சாப்பிடுவோம். நரம்பு மண்டலத்துக்கு ரொம்ப நல்லது. ஞாபக சக்தியும் அதிகரிக்கும். எங்களோட மாடு இரும்புக் கம்பியில மோதினதுல தலையில காயமாகி, மூளை பாதிச்சிடுச்சு. மனநோய்க்கான எல்லா அறிகுறிகளுமே அப்பட்டமா தெரிஞ்சுது. வல்லாரையையும் பிரண்டையையும் சேர்த்து அரைச்சி உருண்டையாக்கி மூணு நாள் கொடுத்தோம். படிப்படியா குணமாயிடுச்சு’’ என்று திருநாவுக்கரசு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அதை வேகமாக ஆமோதித்த நான்சி டயானா, “குழந்தைகளுக்கு தினமும் ஒரு இலை கொடுத்தாலே போதும்... நினைவாற்றல் அதிகமாகி, நல்லா படிப்பாங்கனு சித்த மருத்துவர்கள் சொல்றாங்க. நாங்க புதுசா வாங்கின வீட்டுமனையில வல்லாரை வச்சோம். ஆனா சரியா வளரல. வெயில் கடுமையா இருந்ததால காய்ஞ்சிடுச்சு’’ என்றார்.
‘‘எந்தப் பயிரா இருந்தாலும் இளம்பயிராக இருக்கும்போது, அதுக்குப் பக்கத்துல பனை, தென்னை மட்டையைச் செங்குத்தா சொருகி வச்சிட்டா, அதுக்குத் தேவையான அளவுக்கு நிழலும் சூரிய ஒளியும் மிதமா கிடைச்சுடும். வல்லாரையை செங்குத்தா நடவு செய்யக் கூடாது. பதியம் போடணும், அதாவது, கணுக்களை மண்ணுக்குள்ள சொருகணும்’’ என நடவு செய்து காண்பித்தார், திருநாவுக்கரசு. அதேபோல ரகுவும் ஒரு செடியை நடவு செய்து காண்பித்ததும் அவரை திருநாவுக்கரசு பாராட்டினார்.
‘‘தண்ணீர் தேங்கி நிக்கக்கூடிய இடத்துலதான் வல்லாரை நல்லா வளரும்னு சிலர் சொல்றாங்க. இது உண்மையா’’ என அம்ஜத் தன் சந்தேகத்தை எழுப்ப, ‘‘மண்ணுல ஈரம் இருந்தாலே போதும். தண்ணீர் தேங்கி நிக்கணும்னு அவசியம் இல்லை’’ என்றார், திருநாவுக்கரசு.
சந்தன மரத்தைப் பார்க்கணுமே!
அடுத்து மந்தாரை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார், திருநாவுக்கரசு. “இது ரொம்பவே அவசியமான மரம். நல்லா நிழல் தரக்கூடியது. பூ பூக்கும் பருவத்துல ‘கமகம’னு வாசனை வீசும். இதுல மருத்துவ குணம் நிறைஞ்சிருக்கிறதால சுவாசத்துக்கு நல்லது. இந்த மரம் அதிகளவுல இலைகளை உதிர்க்கும். நிழலும் இலைகளும் இருக்கிறதுனால, எப்போதும் மண்ணுல ஈரம் இருந்துக்கிட்டே இருக்கும். இதுமாதிரி இருந்தால் பூச்சிகள் நிறைய வரும். அதை புடிச்சி சாப்பிட பறவைகள் வரும். அதோட எச்சங்கள் உரமாகி மண்ணை வளமாக்கும்’’ என்றார்.
‘‘இங்க சந்தனமரம் இருக்கா? அதைப் பார்க்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை’’ என்று துரைமுருகன் கேட்க, அங்கு அழைத்துச் சென்றார், திருநாவுக்கரசு. ‘‘இதோ பாருங்க. இதுதான் சந்தனமரம். நாலு வருஷத்துக்கு முன்னாடி நடவு செஞ்சோம். ஓரளவுக்கு நல்லா வளர்ந்திருக்கு. சூரிய ஒளி நல்லா கிடைச்சிருந்தா இன்னும் சிறப்பா வளர்ந்திருக்கும். இதுக்கு துணை மரமா பக்கத்துல மகோகனி இருக்கு. மற்ற மரங்களோட சத்துக்களை எடுத்துக்கிட்டு வளர்றதுதான் சந்தன மரத்தோட இயல்பு’’ என்று சொன்ன திருநாவுக்கரசிடம், ‘‘சந்தனமரம் வளர்க்க, அரசாங்கத்துக்கிட்ட அனுமதி வாங்கணுமா’’ என அம்ஜத் கேட்டார்.
‘‘கிராம நிர்வாக அலுவலர் கிட்ட, நம்ம நிலத்துல சந்தனம் நட்டிருக்கோம்னு பதிவு செய்யணும். கடைசியில சந்தன மரத்தை வெட்டும்போதுதான் வனத்துறையின் அனுமதி வாங்கணும்’’ என்றார் திருநாவுக்கரசு.

செலவில்லாமல் உயிர்வேலி!
‘‘உயிர்வேலினா என்ன?’’ என்று ஒரு கேள்வியைப் போட்டார் ரகு.
‘‘வளரக்கூடிய பயிர்களை வேலியா வெச்சா அதுதான் உயிர்வேலி. கம்பிவேலி, முள்வேலி எல்லாம் தடுப்பு அரணாக மட்டும்தான் இருக்கும். ஆனா உயிர்வேலி, வெளியில இருந்து வரக்கூடிய மாசுகளை தடுத்து நிறுத்தி, சுகாதாரமான காற்றை நமக்குக் கொடுக்கும். ஒரு தடவை நட்டு வச்சிட்டா தானா வளர்ந்துக்கிட்டே இருக்கும். அதுக்குப் பிறகு நாம செலவு செய்ய வேண்டியதில்லை’’ என்று ரத்தினச் சுருக்கமாக விளக்கம் கொடுத்தார், திருநாவுக்கரசு.
‘‘உயிர்வேலிக்கு எந்தப் பயிரை வளர்க்கலாம்?’’ என டயானா ஆலோசனை கேட்க,
‘‘கிளுவை வச்சீங்கனா நல்லா நேர்த்தியா பார்க்கிறதுக்கு ரொம்பவே அழகா இருக்கும். பசுமையா மனசுக்கு இதமாவும் இருக்கும். நிழலும் கொடுக்கும்’’ என்றார், திருநாவுக்கரசு.
நீண்டநேரமாக அமைதியாகவே இருந்த ரவி, ‘‘எங்களுக்கு ஏதாவது தோட்ட வேலை கொடுங்க செய்றோம்” என்றார்.
உடனே, “நீங்க தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிச்சிப் போடுங்க’’ என திருநாவுக்கரசு சொன்னதும், ரவி முகத்தில் பீதியுடன், “மரம் ரொம்ப உயரமா இருக்கு. இதுல எல்லாம் ஏறி எங்களுக்குப் பழக்கம் இல்லை’’ என்று பின்வாங்கினார்.
மண் அணைப்பு அவசியம்!
‘‘சும்மா தமாசுக்கு சொன்னேன். தென்னை மரத்துல ஏறி, உச்சிக்குப் போறது எல்லாம் அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல’’ எனச் சிரித்துக்கொண்டே சொன்ன திருநாவுக்கரசு,
‘‘சரி, இப்ப நீங்க எல்லாருமே இங்க உள்ள மரங்களுக்கு மண் அணைங்க. மரம் வளர்ப்புல இது ரொம்பவே அவசியமான பணி. மரங்களோட வேர்கள் நிலத்துக்கு மேல வெளியில வந்தால், மரங்கள் பலம் இழந்துடும். மண் அணைச்சா, வேர்கள் மண்ணுக்குள்ள நல்லா பிடிமானமாகி, மரங்கள் நல்லா உறுதியாகி, நீண்டகாலத்துக்கு நிலைச்சு இருக்கும். அதுமட்டுமில்லாம, வேர்கள் வெட்டவெளியில மேல்மட்டத்துல இருந்தா, அதுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. வெப்பத்தோட தாக்கமும் வேர்களைப் பாதிக்க வாய்ப்புண்டு. மண் அணைக்கிறது மூலமா, இதுமாதிரியான பாதிப்புகள்ல இருந்து மரங்களைப் பாதுகாக்க முடியும்’’ என்று சொல்லிவிட்டு மண் அணைக்கச் சொல்லிக் கொடுத்தார்.
அதைப்பார்த்து கற்றுக்கொண்ட ஒரு நாள் விவசாயிகள் அனைவரும் மண் அணைப்பதில் மும்முரமானார்கள்.
கவாத்து, காய்ப்பறிப்பு, வாய்க்கால் வெட்டுதல், மீன்பிடிப்பு, எள் அறுவடை, டிராக்டர் ஓட்டுதல் என ஒரு நாள் விவசாயிகளின் அசத்தல்கள்.... அடுத்த இதழில்.
-பயணம் தொடரும்
கு.ராமகிருஷ்ணன்
படங்கள்: கே.குணசீலன்
நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.