மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா!

மண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா!

லேசியாவுல இருந்து, ஒரு ‘வாட்ஸ் அப்’ சேதி கிடைச்சது. ‘கியூபா நாடு முன்னுக்கு வந்ததுக்கு மூலக்காரணம், வீட்டுத் தோட்டமும், இயற்கை விவசாயமும்தான்’னு அதுல சொல்லியிருந்தாங்க. இந்தச் சேதியை படிச்சவுடனே, சுமாரா, பத்து வருஷத்துக்கு முன்ன, ஈரோடு மாவட்டத்துல சிறப்பா நடக்கிற இயற்கை விவசாயப் பண்ணையைப் பார்வையிடறதுக்காக, கியூபா நாட்டுல இருந்து ஆணும், பொண்ணுமா நாலு பேரு, வந்து போன விஷயம் எனக்கு பளீரிட்டிச்சி. அவங்ககிட்ட பேசுறப்போ, ‘தோட்டத்துல மட்டும் இயற்கை விவசாயம் செய்தால், போதாது. வீட்டிலும் இயற்கை விவசாயம் செய்யணும். எங்க நாட்டுல இயற்கை விவசாயப் புரட்சி வெடிக்கக் காரணமே வீட்டுத் தோட்டம்தான். நகரத்துல இருக்கிறவங்க காய்கறியை விளைவிச்சிப் பார்த்தால்தான், விவசாயிங்க மீது அவங்களுக்கு மரியாதை வரும்’ங்கிற சங்கதியைச் சொல்லி அசத்தினாங்க. அதோட அந்த நாட்டுல எப்படி இயற்கை விவசாயப் புரட்சி வந்துச்சுன்னும் விளக்கமா சொன்னாங்க. இப்போ, கியூபாதான் இயற்கை விவசாயத்துக்கு உலக அளவுல முன்னோடி.

மண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா!

கியூபா, வடஅமெரிக்கக் கண்டத்துல இருக்கிற குட்டி நாடு. அந்த நாட்டுல இருக்கிற இயற்கை வளத்தால பல நாடுகள், பல நாட்டு முதலாளிங்கனு பலரோட பிடியில சிக்கித் தவிச்சுக்கிட்டு இருந்துச்சி கியூபா. சொல்லப் போனா, நமக்குப் பிறகுதான் அந்த நாடு சுதந்திரக் காத்தையே சுவாசிக்க ஆரம்பிச்சுது. அதாவது 1959-ம் வருஷம் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில நிகழ்ந்த புரட்சியால, கம்யூனிச நாடா மாறிச்சு. அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் ஏழாம் பொருத்தம்தான். எப்ப பார்த்தாலும், அமெரிக்கா, கியூபாவை நசுக்கிறதுக்குத் துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

‘உலகின் சர்க்கரை கிண்ணம்- கியூபா’னு ஏழாம் கிளாஸ் பாட புத்தகத்துலயே படிச்சிருப்போம். கியூபாவுல பிரதான பயிர் கரும்பு, கரும்பு, கரும்பு.... கரும்பு மட்டும்தான். நம்ம விவசாயிங்க, இப்போ கரும்பை சாகுபடி பண்ணிப்புட்டு, தவிச்சு நிக்கிற கதை கியூபாவிலயும் நடந்துச்சு. கியூபாகிட்ட, இருந்து சர்க்கரையை யாரும் வாங்கக் கூடாதுனு அமெரிக்கா பொருளாதார தடை விதிச்சது. அந்த சமயத்துல சோவியத் ரஷ்யா உதவிக்கு வந்துச்சு. அதுவும்கூட ரொம்ப நாளைக்கு நீடிக்கல. 1990-ம் வருஷம் சோவியத் ரஷ்யா உடைஞ்சு விழுந்தப்ப, கியூபாவோட பொருளாதாரமும் கீழ விழுந்துடுச்சு.

சோவியத் ரஷ்யா கொடுத்த உதவியே, ஒரு கட்டத்துல கியூபாவுக்கு வினையா முடிஞ்சதுதான்

மண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா!

சோகம். அதாவது, கரும்பு உற்பத்தியைக் பெருக்க, ரசாயன உரத்தையும், பூச்சிக்கொல்லி விஷத்தையும் கியூபாவுக்கு கப்பல், கப்பலா சோவியத் ரஷ்யா அனுப்பி வெச்சுது. அதைக் கொட்டி, ஆரம்ப காலத்துல நல்ல விளைச்சல் எடுத்தாங்க. சோவியத் ரஷ்யா உதவி நிக்கிறதுக்கும், ரசாயன விவசாயத்தோட பாதிப்பு வெளியில வர்றத்துக்கும் சரியா இருந்துச்சு.

கியூபாவுக்கு சர்க்கரையைத் தவிர, மத்த எந்தப் பொருளும் சாப்பிடறதுக்கு இல்ல. எந்த நாடும் அப்போ, உதவிக்கும் வரல. அப்போதான் அந்த நாட்டோட, அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ முக்கிய முடிவை எடுத்தாரு. இனி கரும்பு மட்டும் சாகுபடி செய்யக் கூடாதுனு சொல்லி, நாடு, முழுக்க உள்ள நிலத்தை, மக்களுக்குப் பிரிச்சு கொடுத்தாரு. ரசாயனம் கொட்டின புண்ணுக்கு, இயற்கை உரம்தான் மருந்துனு உணர்ந்து, இயற்கை உரத்தை மட்டுமே விவசாயத்துக்குப் பயன்படுத்துணும்னு கட்டளை போட்டாரு. பள்ளிக்கூட வாத்தியார் தொடங்கி, ராணுவ தளபதி வரையிலும் எல்லாரும் வயல்ல இறங்கி வேலை செய்தாங்க. ஒரு சென்ட் நிலத்தைக்கூட சும்மா விட்டு வைக்கல... வீட்டுக்கு வீடு தோட்டம், நகரத்துல இருந்தா பூங்காவுல, எல்லாம் விதவிதமான காய்கறிகளைப் பயிர் செய்தாங்க.

இதனால, அடுத்த பத்து வருஷத்துல, 12 லட்சம் டன்னுக்கு மேல உணவு உற்பத்தி பண்ணி சாதனை புரிஞ்சது கியூபா. இப்போ, பல நாடுகளுக்கு விவசாயப் பொருளுங்க ஏற்றுமதியாகற அளவுக்கு முன்னேறியிருக்கு. பல விதங்கள்ல பாதிக்கப்பட்டு நொடிஞ்சு போன நாடு, இப்ப இயற்கையை மட்டும் நம்பி முன்னுக்கு வந்து, வெற்றி நடைபோடுது.

அந்த நாட்டு விவசாயிகள் மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் கிடையாது, பட்டணத்துல இருக்கிற பள்ளிக்கூட வாத்தியார் தொடங்கி, கம்ப்யூட்டர்ல வேலை செய்யுற இன்ஜினீயர்களும்கூட தேனீ கணக்கா வேலை செய்ததுதான். ஒரு நாட்டுல இயற்கை விவசாயப் புரட்சி நடக்கணும்னா, அது விவசாயிகளால மட்டும் நடக்காது. நாட்டுல இருக்குற ஒவ்வொருத்தரும்  பங்கு எடுத்துக்கணுங்கிறதுதான் கியூபா நமக்கு சொல்ற பாடம். இந்தப் பாடத்தை நல்லாவே படிச்சுப் புரிஞ்சுக்கிட்ட கேரளாவுல இருக்கிற சேட்டன்மாருங்க, வேகமா பயன்படுத்தத் தொடங்கிட்டாங்க!

நாம?

ஓவியம்: ஹரன்