Published:Updated:

வீட்டுக்குள் விவசாயம் - 15

வீட்டுக்குள் விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக்குள் விவசாயம் ( ஜி.பழனிச்சாமி )

வீட்டுக்குள் விவசாயம் - 15

ஆரோக்கியம் + ஆனந்தம்... அள்ளிக்கொடுக்கும் வீட்டுத்தோட்டம்...

ஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம்பிடிக்கின்றன.

வீட்டுத்தோட்டம் அமைப்பதென்றால்... நிறைய இடம் தேவை, நிறைய நேரம் தேவை என்றெல்லாம் மலைத்துத்தான் பலரும் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால், “அதெல்லாம் தேவையேயில்லை. மனம் இருந்தால் போதும் மார்க்கம் உண்டு’’ என்கிறார், மாடித்தோட்டம், மற்றும் புறத்தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்து வரும், கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவராஜா.

வீட்டுக்குள் விவசாயம் - 15

“அடிப்படையில் நான் ஒரு மென் பொருள் பொறியாளர். வளர்ந்தது எல்லாமே கிராமத்திலதான். அதனால விவசாயம் சார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் அதிகம். சொந்த வீடு வாங்கி தோட்டம் அமைக்கணும்னு நினைச்சேன். சென்னையில் வசிக்கும் போது அது முடியலை. கோயம்புத்தூருக்கு வந்த பின்னாடி, தோட்டம் அமைக்கறதுக்காகவே காலி இடம் இருக்கிற மாதிரியான வீட்டைத் தேடிப் பிடிச்சு வாங்கினேன்.

நல்ல இடமா அமைஞ்சதால மரங்களும் வளர்க்க முடிவு பண்ணினேன். பெருசா கிளையடிக்கிற மரமா இல்லாம, கொய்யா, நெல்லி, மா, எலுமிச்சை, சீதாப்பழம், தென்னை, சப்போட்டா, முருங்கைனு ரகத்துக்கு ஒண்ணா எட்டு மரங்களை நட்டேன். வீட்டுத்தோட்டம் பத்தி சில இடங்கள்ல பயிற்சி எடுத்துக்கிட்டு... நாலு வருஷத்துக்கு முன்னாடி வீட்டைச் சுத்தி இருந்த காலி இடங்கள், மொட்டை மாடினு எல்லா இடத்துலயும் தோட்டம் அமைச்சேன்” என்ற சிவராஜா அவரது வீட்டுத்தோட்டச் செடிகளைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

ஆன்லைன் மூலமாக நாட்டு விதைகள்!

‘‘மாடியில் அதிக வேர் விடுற செடிகளை வளர்க்க முடியாது. அதனால கத்திரி, தக்காளி, மிளகாய், முட்டைக்கோஸ், 8 வகை கீரைகள், முலாம்பழம், வெங்காயம், சோளம், மக்காச்சோளம், வெண்டை மாதிரியான பயிர்களை மாடியில வளர்க்கிறேன். பெரும்பாலும் நாட்டு விதைகளைத்தான் பயன்படுத்துறேன். இப்ப ஆன்லைன்ல கூட நாட்டு விதைகள் கிடைக்குது.

20 பைங்க உள்ள தோட்டம் அமைக்க 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம். ஆனா, ரெண்டே மாசத்துல அதை ஈடுகட்டிடலாம். மாடித்தோட்டத்துக்கு நிழல் வலை அமைக்கணும்ங்கிற அவசியம் கிடையாது.

வீட்டுக்குள் விவசாயம் - 15

நாங்க, ஒரே நேரத்திலதான் எல்லா செடிகளையும் விதைப்போம். முழுமையா அறுவடை முடிஞ்ச பிறகு, ஒரு மாசத்துக்கு தோட்டத்துக்கு ஓய்வு கொடுத்திடுவோம். தோட்டம் அமைக்கிறதோட முக்கிய நோக்கமே நம்மளோட ஆரோக்கியமும், திருப்தியும்தான். அது இப்ப முழுமையா கிடைக்கிறதா நான் நம்புறேன். எங்க தேவைக்கு அதிகமாகவே காய்கறிகள் விளையுது.  அதை பக்கத்து வீடுகளுக்குக் கொடுக்கிறோம்” என்ற சிவராஜா நிறைவாக,

நகர வாழ்க்கையிலும் இயற்கை!

“வீட்டைச்சுத்தி மரங்கள் இருக்கறதால தினமும் குருவி, மைனா மாதிரியான பறவைங்க, வீட்டுக்கு வருது. சில நேரத்துல இங்கயே கூடு கட்டுது. இதையெல்லாம் பார்க்கிறப்ப மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு.

வீட்டுக்குள் விவசாயம் - 15

பசுமையான சூழல் இருக்கிறதால வீடு எப்பவும் குளுமையாவே இருக்கு. வீட்டுத்தோட்டம் அமைக்கிறதுல நான் கத்துக்கிட்ட, கத்துக்கிற விஷயங்களை என்னோட வலைப்பக்கத்துல பதிவு செய்துக்கிட்டு வர்றேன். அதைப் பார்த்தும் பலர் ஆர்வமா இதுல இறங்கியிருக்காங்க. நீங்களும் வீட்டுத்தோட்டம் அமைச்சுப் பாருங்க... நகர வாழ்க்கையில் கூட இயற்கையை ரசிக்க முடியும்’’ என்றார்.

-செழிக்கும்

தொடர்புக்கு,
சிவராஜா,
செல்போன்: 80981-82857
இவரது வலைப்பக்கம்:
http://thooddam.blogspot.in

சிறிய விதைக்கு நாற்றங்கால் தேவை!

மாடித்தோட்டம் அமைக்கும் நுட்பம் குறித்து சிவராஜா சொல்லிய விஷயங்கள் இங்கே...

“ஜூன், ஜூலை மாதங்கள் வீட்டுத்தோட்டம் தொடங்க சிறந்த மாதங்கள். செடி வளர்ப்புப் பைகள் வாங்கி அதில் பாதியளவு தேங்காய் நார்க்கழிவை இட்டு நிரப்ப வேண்டும். 2 பங்கு தேங்காய் நார்க்கழிவு, 2 பங்கு மண்புழு உரம், 1 பங்கு செம்மண் என்ற விகிதத்தில் கலந்த கலவையை பையின் மீதிப்பகுதிக்கு நிரப்பி விதைகளை நடவு செய்ய வேண்டும். சிறிய விதைகளாக இருந்தால் குழித்தட்டில் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வது நல்லது. மாடியில் பைகளை வைக்கும் போது, கீழே செங்கல் வைக்க வேண்டும். அப்போதுதான் பைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றால் மாடிப்பரப்புக்கு பாதிப்பு ஏற்படாது.

வீட்டுக்குள் விவசாயம் - 15

அவரை, புடலை, பாகல், வெள்ளரி போன்ற செடிகளை நடவு செய்தால் கொடிகள் பற்றுவதற்கு உயரமான குச்சிகளையோ, பிளாஸ்டிக் கயறுகளையோ கட்டி வைக்க வேண்டும். தர்பூசணி, முலாம்பழம் போன்றவற்றின் கொடிகள் தரையிலேயே படர்ந்து விடும்.   

கீரைகள் குறைவான நாட்களிலேயே அறுவடைக்கு வந்து விடும் என்பதால், சுழற்சி முறையில் பயிர் செய்தால் தொடர்ந்து கிடைக்கும்.  செடிகளை தினமும் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் நோய்களைக் கண்டறிந்து சரி செய்ய முடியும். களைகள் தென்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டும். தரையில் செடிகளை வளர்க்கும் போது குறுக்கும், நெடுக்குமாக குச்சிகளைக் கட்டி விட்டால், மழை, காற்றினால் செடிகள் சாய்ந்தாலும் அவை  குச்சிகளின் மீதே படர்ந்து கொள்ளும்.

செடி சிறியதாக இருக்கும்போது, அதிக விசையாக நீர் தெளிக்கக் கூடாது. எனவே பூவாளி கொண்டு நீர் பாய்ச்சலாம். அவ்வப்போது பூச்சித்தாக்குதல் இருக்கும். அதைத்தடுக்க... ஒரு லிட்டர் தண்ணீரில், 30 கிராம் வேப்பம் பிண்ணாக்கை இடித்துப்போட்டு ஊற வைத்து வாரம் ஒரு முறை செடிகளின் மீது தெளித்து வரவேண்டும்.”

ஞா.சுதாகர்

படங்கள்: த.ஸ்ரீநிவாசன்