அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்
காலாவதியானது அவசரச் சட்டம்... பணிந்தது மத்திய அரசு..!
வளமான, பசுமையான தேசம் பற்றி எரியும்போது, பதற்றப்படாமல் ‘முற்றிலும் எரியட்டும்... சாம்பலை விற்றுக் காசு பார்க்கலாம்’ என்றானாம் ஒருவன். இந்தியாவின் இன்றைய நிலை இப்படித்தான் இருக்கிறது. வறட்சி, விலையின்மை, விவசாயிகளை வாட்டி வதைக்கிறது. நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி விட்டது. கிடைக்கும் சிறிதளவு நீரிலும், ஆலைக்கழிவுகள், ரசாயனக்கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள்... என நீக்கமற நிறைந்து, கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் காலி செய்துவிட்டன.
வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல், விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொள்கின்றனர். மனசாட்சியே இல்லாமல், இரும்பு இதயத்துடன்தான் விவசாயிகளின் பிரச்னைகளை பார்க்கின்றன, மத்திய, மாநில அரசுகள். பிரதமரோ, ‘5 லட்சம் கோடி முதலீடு வருகிறது... 6 லட்சம் கோடி முதலீடு வருகிறது’ என்று வாய்ப்பந்தல் போடுகிறார். ஆனால், விவசாயிகள் தற்கொலை பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.

மத்திய விவசாயத்துறை அமைச்சர், ராதாமோகன் சிங், ‘வறுமையாலும், கடனாலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. காதல் தோல்வி, கள்ளக்காதல், ஆண்மைக் குறைவு, குடும்பப் பிரச்னைகளால்தான் தற்கொலை செய்கின்றனர்’ என்று வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்.
இந்நிலையில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை யாரிடம் வைப்பது, எங்கு நிவாரணம் கேட்பது?
‘வல்லான் வகுத்ததே நீதி... என்ற தேசத்தில் இன்னும் நாம் விவசாயியாக இருக்க வேண்டுமா? ஊருக்கானது நமக்கு. அரசாங்கத்துக்கு அடிமாட்டு விலைக்குக் கொடுக்கறதுக்கு பதிலா ரியல் எஸ்டேட்காரனுக்குக் கொடுத்தா நாலு காசாவது மிஞ்சும். அதை பேங்க்ல போட்டுட்டு வட்டியை வாங்கித் தின்னுட்டு காலத்தை ஓட்டுவோம்’ என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இந்த நிகழ்வு பெரும்பான்மையாக நடந்தால், என்ன விளைவுகள் ஏற்படும் என யோசிக்கும் நிலையில் அரசுகள் இல்லை. அவர்களுக்கு விவசாயிகளின் வாழ்வைவிட, வாக்குகள் முக்கியம். அதை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகளாக ஓடிக்கொண்டிருக்கும் அத்தனை நதிகளும், ஆறுகளும், நீர்நிலைகளும் கழிவுகளால் நிறைந்து கிடக்கின்றன. சிப்காட் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகளால் பல நதிகளை மரணிக்கச் செய்து விட்டோம். திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளை மொத்தமாகச் சேமித்து வைத்து, மழை நீருடன், நொய்யலில் கலந்து விடுகிறார்கள், ஆலை அதிபர்கள். அனைத்துக் கழிவுகளும், காவிரியில் கலந்து, தமிழகத்தின் உணவுக் களஞ்சியமான தஞ்சை டெல்டாவில் நஞ்சை விதைக்கிறது. இந்தக் கழிவு நீரால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பொட்டலாக மாறிக்கிடக்கின்றன. நிவாரணம் கேட்டு பல ஆண்டுகளாக நீதிமன்றப் படிகளில் தவம் கிடக்கிறார்கள், விவசாயிகள்.
இலவசங்களின் துணையோடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் மாநில அரசு, குடி கொடுத்து குடி கெடுக்கும் அரசு, தனது மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் கஜானா நிறைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அரசு, பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் விவசாயிகளைப் பற்றி சிந்தித்துக்கூட பார்க்க மறுக்கிறது.
ஆக, அரசுக்கும் மனசாட்சி இல்லை, ஆலைமுதலாளிகளுக்கும் மனசாட்சி இல்லை. மாசுக் கட்டுப்பாடு வாரியம், காசு பிடுங்கும் வாரியமாக மாறிவிட்டது. ‘மாசு கட்டுப்பாடு வாரியம் வந்த பிறகுதான் ஆறுகள் அதிகமாக கெட்டு விட்டன’ என்கிறார்கள், சூழலியலாளர்கள்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு ஓரளவு நன்மை தரும் வகையில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், கம்பெனிகளுக்கு ஆதரவாகத் திருத்தம் கொண்டு வருவதில் முனைப்பாக இருந்தது மோடி அரசு. இந்தச் சட்டத் திருத்த அறிவிப்பு வந்ததில் இருந்து, அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதகங்கள் குறித்து ‘பசுமை விகடன்’ தனது ஆதங்கத்தை அழுத்தமாகவே பதிவு செய்து வந்திருக்கிறது.
விவசாயிகளுக்கு பாதகமான ஷரத்துக்கள் கொண்ட சட்டத்திருத்தத்தை எப்படியாவது தடுத்த நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் தொடரை எழுதத் தொடங்கினேன். நான்காவது முறையாக அவசரச் சட்டம் திருத்தம் கொண்டு வர இருந்த நிலையில், விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சிகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள்... எனத் தொடர் போராட்டங்களின் பலனாக சட்டத்திருத்த மசோதாவை காலாவதியாக அனுமதித்திருக்கிறது, மோடி அரசு. கடந்த கால காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமே தொடரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது கூட்டுமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி. மீடியாக்களின் செயல்பாடும் இதில் வெகுவாகத் துணைபுரிந்திருக்கிறது என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.
‘எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் போராடிக்கிட்டே இருந்தா எப்படி... நாடு வளர்ச்சியடைய வேண்டாமா?’ என்ற கேள்வி சிலரிடம் இருக்கிறது. அய்யா, அறிவாளிகளே... ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். விவசாயிகள், வளர்ச்சிக்கு எதிரிகள் இல்லை. தொழிற்சாலைகள் வர வேண்டாம் எனச் சொல்லவில்லை. மண்ணையும் மக்களையும் பாதிக்காத தொழில்களாக வர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. தொழிற்சாலைகளுக்கு நிலம் கொடுக்க மாட்டோம் எனச் சொல்லவில்லை. நாட்டுக்காக நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டமே தொடரும் என்கிற நிலையில், புதிதாக ஓர் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைச் சட்டம், ரயில்வே சட்டம், பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 13 சட்டங்கள் இந்த புதிய அரசாணையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 13 சட்டங்களுக்கு உட்பட்டு, இந்தத் துறைகளின் திட்டங்களுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருப்பதோடு, இதற்கு 4 மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் சரி, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறாது என்பதற்கு என்ன உத்தரவாதம். அதாவது மோடி மீண்டும் பல்டி அடிக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. என்றாலும், நம்பிக்கைதானே வாழ்க்கை. அந்த நம்பிக்கையோடு... தற்போதைக்கு இந்தத் தொடரின் நோக்கம் நிறைவுற்றதாகவே மகிழ்கிறேன்.
இந்த சந்தோஷத்துடன்கூடவே... ஒரு கோரிக்கையையும் வைக்கிறேன். இது என்னுடைய கோரிக்கை அல்ல... நிலம் இழந்து இன்று அனாதை ஆக்கப்பட்டவர்களின் இதயத்தில் தேங்கி நிற்கும் உள்ளக் குமுறல். ‘எங்கள் நிலங்களை ஏக்கருக்கு வெறும் 50 ஆயிரம், ஒரு லட்சம் எனக் கொடுத்துப் பறித்துக் கொண்டது, அன்றைய அரசு. இன்று அதே அரசு, ஒரு ஏக்கர் நிலத்தை 30 லட்சம் 35 லட்சம் என வாடகைக்குக் கொடுக்கிறது. நிலம் இழந்து, வாழ்வு இழந்து உள்நாட்டு அகதிகளாக, அனாதைகளாக வாடும் எங்கள் வாட்டத்தைப் போக்க, ஏக்கருக்குக் குறைந்தது 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுக்க வேண்டும்’ என்கிறார்கள்.
விவசாயிகளின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. மனசாட்சி உள்ள ஆட்சியாளர்கள், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து, செய்த தவறுக்குப் பரிகாரம் தேட வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்!
-முற்றும்
தூரன் நம்பி