Published:Updated:

கார்ப்பரேட் கோடரி - 4

கார்ப்பரேட் கோடரி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்ப்பரேட் கோடரி ( கார்ப்பரேட் கோடரி )

மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!

அடுத்த போக சாகுபடி...பயிர்க்குறி கட்டும் களைகள்!

ண்டீஸ் மலைத்தொடரில் ‘மோரே’ (Moray) என்றோர் இடம் இருக்கிறது. இந்த இடம்தான் ஏண்டீஸ் தொல்குடி மக்களின் வேளாண்மை அறிவு எத்தகையது என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லும் சான்று. மலைச்சரிவு என்பதால், படிக்கட்டு முறையில் வேளாண்மை செய்யப்பட்ட இந்த இடம், அக்காலத்தில் பயிர்களுக்கான திறந்தவெளி ஆய்வுக்கூடம்... ஏன், வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்றுகூட சொல்லலாம்!

வட்ட வடிவிலான பல படிக்கட்டுகளைக் கொண்ட இவ்வமைப்பு பார்ப்பதற்கு மிக அகன்ற கிணறு போல் தோற்றமளிக்கும். ஒவ்வொரு படியும் 1.8 மீட்டர் உயரத்துக்கு இருக்கும். இதன் உச்சிக்கும் அடித்தளத்துக்கும் இடையே நிலவும் வெப்பநிலை வேறுபாடு 15 டிகிரி செல்சியஸ். இவ்விடத்தின் பருவநிலைக்கும், வெப்பநிலைக்கும் ஏற்ப ஏறக்குறைய 250 வகை பயிர்களைத் தங்கள் அனுபவ அறிவு மூலமாக இம்மக்கள் கண்டறிந்து வைத்திருந்தனர்.

கார்ப்பரேட் கோடரி - 4

நுட்பமான மண்ணியல் அறிவு கொண்ட இவர்கள் நிலங்களை ‘மேட்டு நிலக் கரிசல் மண்’, ‘தாழ்நிலச் செம்மண்’ என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்திருந்தனர். ‘கரிசல் மண்ணிலும் கரட்டுத்துகள்களைக் கொண்டிருப்பது சாகுபடிக்கு ஏற்றது. நுண்துகள்களுடன் இருப்பது சாகுபடிக்கு ஏற்றதல்ல’ என்பதையும் அறிந்திருந்தனர். இதுபோலவே, ‘மணிமணியான செம்மண், சாகுபடிக்கு ஏற்றது, நுண்துகள்களைக் கொண்டது சாகுபடிக்கு ஏற்றதல்ல’ என்பதும் இவர்களின் அறிதல். ‘சாக்ரா’வின் (மண்ணையும், சூழலையும் உயிர்ப் பொருள்களாகப் பார்க்கும் இவர்கள், அதனை ‘சாக்ரா’ என்று அழைக்கிறார்கள்) துணை கொண்டு இவ்வாறு மொத்தம் 46 மண் வகைகளை இவர்கள் அறிந்திருக்கின்றனர். 

மண்ணில் தானாக வளரும் இயல் தாவரங்கள்தாம் இவர்களுக்கு பயிர்க்குறிகாட்டி. இவற்றின் மூலம்தான் மண்ணின் தன்மையையும், அம்மண்ணிலே எத்தகைய பயிர்கள் விளையும் என்பதையும் தெரிந்துகொண்டனர். எடுத்துக்காட்டாக ‘சாய்லா’ புற்கள் வளர்ந்திருந்தால் அது சோள சாகுபடிக்கு ஏற்ற மண். ‘தங்கார்’ புதர்கள் நிறைந்திருந்தால் அது உருளைக்கிழங்குக்கு ஏற்றது. ‘ச்சுப்பிகா கேவா’ என்கிற காட்டுத் தாவரம் மண் முழுக்க படர்ந்திருந்தால், அம்மண்ணுக்கு ஓய்வு தேவையெனப் பொருள். அந்த ஓய்வுக்குப் பிறகு மற்றொரு குறிப்பிட்ட புல் வகை பெருகினால் அம்மண்ணில் திரும்பவும் பயிரிடத் தொடங்கலாம் எனப் பொருள்.

ஏண்டீஸ் பகுதி மூன்று இயற்கை மண்டலங்களைக் கொண்டது. சுமார் 3,100 மீட்டர் முதல் 3,400 மீட்டர் வரை வரை உயரமுள்ள பகுதி ‘க்யூச்சுவா’(Quechua) மண்டலம். சுமார் 3,400 மீட்டர் முதல் 3,800 மீட்டர் வரை உயரமுள்ளது ’சூனி’ ((Suni)  மண்டலம். சுமார் 3,800 மீட்டருக்கு மேல் உயரமுள்ளது ’புனா’ (Puna) மண்டலம்.  உயரத்தில் அமைந்துள்ள இக்கடைசி மண்டலமானது பிரெய்ரி புல்வெளிகள் நிறைந்தது. எனவே மற்ற இரு மண்டலங்கள்தான் சாகுபடி மண்டலங்கள்.

பயிர் சுழற்சி முறையே இம்மண்டலங்களில் கடைபிடிக்கப்பட்டன. சாக்ரா சொல்லும்போது நிலம் தரிசாக விடப்படும். சூனி மண்டலத்தின் உயரமான பகுதிகளில் இத்தரிசுக்காலம் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். இம்மண்டலத்தின் தாழ்பகுதிகளிலும், கெச்சுவா மண்டலத்திலும் இக்கால அளவு குறையும். ஆனால், அனைத்து நிலமும் இப்படி தரிசாக விடப்படுவதில்லை. கீழ் கெச்சுவா மண்டலத்தில் சோளத்துடன் கலப்புப் பயிராக அவரை, காட்டுப் பயறுகள் வளர்க்கப்படும்.

சாக்ரா சொல்கிறது என்பதற்காகவே இவர்கள் நிலத்தை நீண்ட காலத்துக்குத் தரிசாக விடுகிறார்கள். இவ்வழக்கத்தை இன்றைய அறிவியல் பார்வையில் பார்த்தால் இவர்களுடைய வேளாண் அறிவின் மீது பெருமதிப்பு ஏற்படுகிறது. தரிசுக்காலம் என்பது நிலம் தன் வளத்தை மீட்டுக் கொள்வதற்காக மட்டுமல்ல, பயிர்களைத் தாக்கும் குறிப்பிட்ட சில ஒட்டுண்ணிகளைக் ஒழிக்கவும்தான். குறிப்பாக ’நெமாடோட்ஸ்’ (Nematodes) என்ற நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தவும் இம்முறையைக் கையாள்கிறார்கள்.

உருளைக்கிழங்குகளைத் தாக்கும் இந்த ஒட்டுண்ணிகளின் முட்டைகள் 10 ஆண்டுகள் வரை உயிர்வாழும் திறனுடையவை. வெப்ப மண்டலத்தில் இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். உயர் வெப்பநிலையில் மட்டும்தான் இவை மடியும். எனவே, இப்பகுதியில் நிலவும் குறைந்த வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு தரிசுக்காலத்தின் அளவை இவர்கள் நீட்டித்திருக்கிறார்கள். இத்தகைய அறிவை இவர்களுக்குக் கற்றுத் தந்தது சாக்ராதான். நவீன அறிவியல் அல்ல.

காலநிலை முன்னறிவிப்பையும் இம்மக்களுக்கு சாக்ரா கற்றுத் தந்திருக்கிறது. அதன்படி, வரப்போவது வறட்சி ஆண்டாக இருந்தால் மேட்டு நிலத்தின் சாகுபடிப் பரப்பை விரிவாக்குவார்கள். வழக்கத்துக்கு மாறாக நிலம் குறுக்குவாக்கில் உழப்படும். மிகக்குறைவாக பெய்யப் போகும் மழையளவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு பள்ளப்பகுதிகளிலும் விதைப்பை மேற்கொள்வர்.

வரப்போவது கடும்மழை ஆண்டாக இருந்தால், தாழ்நிலப் பகுதிகளின் சாகுபடிப்பரப்பு அதிகரிக்கப்படும். மலைச்சரிவின் பக்கவாட்டிலும் வரப்புகளிலும் விதைப்பு நடைபெறும். சரிவின் வாக்கிலேயே உழவு சால் ஓட்டப்படும். இது அரிமானத்தைத் தடுப்பதோடு, குட்டைகள் உருவாவதையும் தடுத்துவிடும். நீர் தேங்கினால் அதிகளவில் ஈரப்பதமான சூழல் உருவாகி, பூஞ்சணங்கள் பெருகி பயிர்களுக்கு அவை நோய்த்தாக்குதலை ஏற்படுத்தும் என்பதால்தான் இப்படி!  

இத்தகைய நுட்பமான அறிவுக்கு வந்தது ஆபத்து. 1980-களில் பெரு நாட்டு அரசாங்கம் நீர்ப்பிடிப்பு நிர்வாகம், மண் பாதுகாப்பு என (PRONAMACCS) புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது. இத்திட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்க நாட்டின் பிரதிநிதி ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஏண்டீஸ் உழவர்களுக்கு மண் பாதுகாப்புத் திட்டத்தைக் கற்றுத்தருவதுதான் இவருடைய பணி. இத்திட்டத்தின் மூலம் மழைநீர்ச் சேகரிப்பு அதிகரித்து, மண் அரிமானம் குறைந்து விளைச்சல் பெருகும் எனக் கூறப்பட்டது. ஐக்கிய அமெரிக்க வேளாண்மைத்துறை பயன்படுத்தும் மண் வகைப்பாட்டின் அடிப்படையில் இங்கு மண்ணியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன.

இந்த ஆய்வுகள், ‘இங்குள்ள பெரும்பான்மையான மண் சாகுபடிக்கு லாயக்கற்றது’ என்று சொன்னதுதான் அபத்தமான உண்மை. மேலும் இந்த லாயக்கற்ற மண்ணை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமென மூன்று யோசனைகளையும் ஆய்வுகள் முன்வைத்தன. முதலாவது யோசனையாக 65% நிலத்தை காடு வளர்க்கவும், கால்நடைப் பண்ணைகள் அமைக்கவும், பொழுதுபோக்கு சுற்றுலாவுக்கும் பயன்படுத்தலாம். இரண்டாவதாக 16% நிலத்தில் பழத்தோட்டம் அமைக்கலாம். இறுதியாக 19% நிலத்தை மட்டும் தீவிர வேளாண்மைக்கு உட்படுத்தலாம். இவைதான் அந்த யோசனைகள். 

அப்படியானால், இவ்வளவு நாட்களாக சாக்ரா மூலம் வேளாண்மை செய்து வந்த பாரம்பர்ய அறிவு?

அது ‘உதவாக்கரை அறிவு’ எனக் கூறப்பட்டது. உணவு உற்பத்திக்கு அது உதவாதாம். உண்மையில் பெரு நாட்டின் 50% உணவு இம்மக்களின் சாக்ரா மூலமே வந்து கொண்டிருந்தது. பல நூற்றாண்டுகளாக ‘லாட்டிஃபுன்டியா’ என்கிற பாரம்பர்ய முறை மூலம் மலட்டு மண்ணையும் மீட்டுருவாக்கம் செய்யும் அறிவைக் கொண்டிருந்தவர்கள் இம்மக்கள். ஆனாலும், இவை அனைத்தையும் புறக்கணித்து, அமெரிக்காவின் புதிய மண் வகைப்பாட்டியல் இம்மண்ணின் மீதும் இம்மக்களின் மீதும் வலியத் திணிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட விளைவு?

-தடுப்போம்

‘சூழலியலாளர்’ நக்கீரன்