“இயற்கை விவசாயப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’’
இந்தியா முழுவதும் இயற்கை விவசாயத்துக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் நம்மாழ்வார் மூலம் இயற்கை விவசாயம் குறித்தான விழிப்பு உணர்வு பெருகியது போல், ஆந்திர மாநிலத்தில் இயற்கை விவசாய அமைப்புகளால் இயற்கை விவசாயம் குறித்தான விழிப்பு உணர்வு வேகமாக வளர்ந்து வருகிறது. அதை மேலும் வலுபடுத்தும் விதமாக, கடந்த ஆகஸ்டு 23-ம் தேதி, இயற்கை விவசாயிகள் மாநில மாநாடு விஜயவாடாவில் நடைபெற்றது.
‘ஆந்திர மாநில பாரதிய கிஸான் சங்’ விவசாய அமைப்பின் ஓர் அங்கமான, ‘மாடுகளை அடிப்படையாகக் கொண்ட இயற்கை விவசாயிகள் சங்கம்’ இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இம்மாநாடு, விஜயவாடா நகர பி.டபிள்யூ.டி. மைதானத்தில் நடைபெற்றது. அந்த மாநிலத்தின் பாரம்பர்யம் மிக்க ஓங்கோல் மாட்டை அழைத்து வந்து, பூஜை செய்து மாநாட்டைத் துவக்கினர்.

மாநாட்டில் பேசிய மாநில அறநிலையத்துறை அமைச்சர் பிடிகொண்டல மானிக்யாலா ராவ், “பிரிட்டிஷ்க்காரர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன் 100 சதவிகிதம் இயற்கை விவசாயம்தான் செய்து கொண்டு இருந்தோம். அவர்கள் வந்த பிறகே ரசாயன விவசாயம் பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். இன்றைக்கு அதுவே நமக்கு பெரிய ஆபத்தாக வளர்ந்து நிற்கிறது. நம் முன்னோர்கள் திறமைசாலிகள். அவர்களது விவசாயம் தவறாக இருக்க வாய்ப்பில்லை. அளவுக்கதிகமான ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமாகி வருகின்றன என்கிறார்கள். இனிமேலாவது இயற்கை விவசாயத்தில் நாம் கவனம் செலுத்துவது அவசியம்” என்றார்.
பாரதிய கிஸான் சங் மாநிலச் செயலாளர் குமாரசாமி, “அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்காமல் விதைக் கம்பெனிகள், உர கம்பெனிகளை வளர்த்து விடுவதிலேதான் ஆர்வம் காட்டுகிறது. அரசின் கொள்கை வகுப்பாளர்கள், பணம் ஈட்டும் வழிகளிலேயே குறியாக இருக்கிறார்கள். இருப்பினும், தொடர் முயற்சிகள் மூலமாக தற்போது 50 ஆயிரம் ஏக்கரில் ஆந்திராவில் இயற்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. இயற்கை விவசாயத்தில் 40 சதவிகிதம் இடுபொருட்களின் செலவு குறைகிறது” என்றார்.
மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசிய, இயற்கை விவசாயிகள் சங்க துணைத் தலைவர் எம்.சி.வி.பிரசாத், “பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். இன்னும் பலபேர் இயற்கை விவசாயத்துக்கான தொழில்நுட்பம் எங்கு கிடைக்கும் என்று தேடி வருகிறார்கள். இதனால் இயற்கை விவசாயத்துக்கென்று மத்திய அரசு ஆந்திராவில் இயற்கை விவசாயப் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். இதன்மூலம் இயற்கை விவசாயத்தைப் பெரியளவில் கொண்டு போக வழிவகை ஏற்படும். வேளாண்மை சம்பந்தப்பட்ட அரசின் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்போது, விவசாயப் பிரநிதிகள் கட்டாயம் இடம்பெற வேண்டும். ரசாயன உரங்களுக்கு ஆண்டுக்கு 1.2 லட்சம் கோடி செலவழிக்கப்படுகிறது. இந்தத் தொகையில் 20 சதவிகிதத்தை இயற்கை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்“ என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தார்.

கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய ஆந்திர மாநில வேளாண்துறை அமைச்சர் பிரதிபட்டி புல்லா ராவ், “ஆயிரம் கிர் பசுக்களை 50 சதவிகித மானியத்தில் விவசாயக் குழுக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கிறேன். சிறுதானியங்கள் தற்போது மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. அதை இறவைப் பாசனத்திலும், மாற்றுப் பயிராகப் பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும். ‘க்ளீன் அக்ரிகல்சர்’ என்ற பெயரில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லா விவசாயம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போதே இயற்கை விவசாயத்துக்கென்று சில திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்“ என்றார்.
இயற்கை ஆர்வலர் கிராந்திகுமார் ரெட்டி பேசும்போது, “தமிழகத்தைப் போன்றே ஆந்திராவிலும் மண்வளம் கெட்டு விட்டது. நெல், கரும்பு, மிளகாய், வாழை முக்கிய பயிர்களாக இருந்து வருகின்றன. மேற்கு கோதாவரி டெல்டா பகுதிகள், கிருஷ்ணா டெல்டா பகுதிகள் எல்லாம் அளவுக்கதிகமாக ரசாயன உரப் பயன்பாட்டால் மண்வளம் அழிந்து வருகிறது. இயற்கை விவசாயத்தால் விளைச்சலை அதிகரிக்க முடியும் என்கிறபோது, ஏன் அரசு அதை ஊக்குவிக்கக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை” என்றார்.
மாநாட்டின் ஓர் அங்கமாக கண்காட்சியும் நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர். சிறுதானிய உணவுகளையும் ருசி பார்த்தனர். கண்காட்சியில் காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்த கிருஷ்ணா மாவட்டம், அனெகொண்டலாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரபத்ர ராவிடம் பேசியபோது, “4 வருஷமா 11 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு வர்றேன். திருப்பதியில் ‘சுபாஷ் பாலேக்கர்’ நடத்தின பயிற்சியில் இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டேன். நிலத்தோட ஒரு பகுதியில காய்கறிகள் சாகுபடி செய்றேன். ரசாயனத்துல என்ன வருமானம் எடுத்தேனோ, அந்த வருமானம் இயற்கையிலும் எடுத்திக்கிட்டு இருக்கேன். இவ்வளவுக்கும் ரசாயன விவசாயிகள் விக்கிற சந்தையிலதான் நானும் வித்துட்டு இருக்கேன். இயற்கையா விளைஞ்ச காய்கறிகளுக்கு தனி மார்க்கெட் கிடைச்சா வருமானம் இன்னும் கூடுதலாகும்“ என்றார்.
ஆக நாடு முழுக்கவே, இயற்கை விவசாயத்தின் பலன்களை விவசாயிகள் உணர ஆரம்பித்துள்ளனர். அரசுகளும் இதை முழுமையாக உணர்ந்து விவசாயிகளை ஊக்குவித்தால்... நிச்சயமாக நிஜ பசுமைப் புரட்சி நடந்தேறும் என்பதில் சந்தேகம் இல்லை!
த.ஜெயகுமார்
படங்கள்: ப.சரவணக்குமார்