நாட்டு நடப்பு
Published:Updated:

என் செல்லமே...

செல்லப்பிராணிகள் முதல் செல்வப் பிராணிகள் வரை...

மாதம் ரூ 36 ஆயிரம்... வாத்து வளர்ப்பில் வளமான வருமானம்

செல்லப்பிராணிகளில் நாய், பூனை போன்றவற்றுக்கு அடுத்த இடத்தில் இருப்பவை பறவைகள்தான்.

என் செல்லமே...

அவற்றில் வருமானம் தரக்கூடிய பறவைகளில் முதலிடத்தில் இருப்பது, கோழி. இதற்கு அடுத்ததாக அழகுக்காவும், இறைச்சி மற்றும் முட்டை பயன்பாட்டுக்காகவும் வளர்க்கப்படுபவை வாத்துக்கள். தற்போது, வாத்து வளர்ப்பும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அப்படி, வாத்து வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்.

எம்.ஆர்.ஜி.ராஜகோபால். செய்துங்கநல்லூரிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அய்யனார்குளம்பட்டி கிராமத்தில்தான் இவருடைய பண்ணை இருக்கிறது.

எலும்பு மூட்டு டாக்டரான ராஜகோபால், சென்னை மருத்துவக்கல்லூரியில் டீனாக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். தற்போது சென்னையில் தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றின் டீனாக பணியாற்றிக்கொண்டே, உறவினர் உதவியோடு தன் பண்ணையைப் பராமரித்து வருகிறார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, விவசாயம், ஆடு, மாடு வளர்ப்புல ரொம்ப ஆர்வம்கிறதால ரிட்டையர்மென்டுக்குப் பிறகு, ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க இந்த இடத்தை வாங்கி வேலைகளை ஆரம்பிச்சேன். அந்த சமயத்துலதான் தனியார் மருத்துவக்கல்லூரி வேலை வந்தது. அதனால, என்னோட உறவினர் அர்த்தநாரீஸ்வரன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு சென்னை வந்துட்டேன். தினமும் பண்ணை நிலவரத்தை போன்ல விசாரிச்சிடுவேன். மாதம் ஒரு முறை பண்ணைக்குப் போயிட்டு வந்துடுவேன். மத்த விஷயத்தையெல்லாம் நீங்க அர்த்தநாரீஸ்வரன்கிட்டயே பேசிக்கங்க” என்றார்.

என் செல்லமே...

அழகுக்காக வளர்க்கப்படும் வெள்ளை வாத்துக்கள்!

அர்த்தநாரீஸ்வரனை பண்ணையில் சந்தித்தோம்.

“8 வருஷமா நான்தான் பண்ணையைப் பராமரிச்சுக்கிட்டு இருக்கேன். மொத்தம் 10 ஏக்கர். இதில் 2 ஏக்கர்ல தென்னை இருக்கு. 10 நாட்டு மாடுங்க, 25 தலைச்சேரி ஆடுங்க, 100 வெள்ளை வாத்துங்க (கூஸ் வாத்து) இருக்கு. எங்க நிலத்துல களை எடுக்கிறது இந்த வாத்துங்கதான். களைகள் அதிகமாயிருக்குற நிலத்துல பத்து வாத்துகளை விட்டா போதும். வேரோட பிடுங்கி எடுத்துடும். இந்த வெள்ளை நிற வாத்துகளைத்தான் (கூஸ் வாத்துகளை) அழகுக்காக வளர்ப்பாங்க. வீடு, தோட்டம், அலுவலகம்னு எல்லா இடங்கள்லயும் வெள்ளை வாத்தை வளர்க்கிறாங்க.

வாத்துங்க இரை எடுக்கும் நேரத்தை விட குளிக்கும் நேரம்தான் அதிகம். தண்ணீரில் மிதந்து தன்னைத்தானே அடிக்கடி சுத்தப்படுத்திக்கும். வாத்துகளுக்கு பெரிசா தடுப்பூசி, மருந்துனு என எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. இங்க 70 பெண் வாத்து, 30 ஆண் வாத்துனு மொத்தம் 100 கூஸ் வாத்துக்கள் இருக்கு” என்று முன்னோட்டம் கொடுத்த அர்த்தநாரீஸ்வரன், தொடர்ந்தார். 

முட்டையாகவே விற்பனை!

“நாங்க 1 மாத வயசுல குஞ்சுகளை வாங்கி வளர்ப்போம். மூணு மாச வயசு ஆனப்பறம் வாத்துக்கள் இனப்பெருக்கத்துக்காக சேர ஆரம்பிக்கும் (சத்தம் எழுப்பும்). உடனே, ஆண் வாத்து, பெண் வாத்தை மிதிக்கத் தொடங்கிடும். அதிலிருந்து 10, 20 நாள் கழிச்சு முட்டை கிடைக்க ஆரம்பிக்கும். வாத்து, முட்டையைக் கொத்தி உடைக்காது. அதனால, முட்டை சேதாரமாகாது. வாத்து அடை காக்காது. அந்த முட்டைகளை அடைகாக்கிற கோழிக்கடியிலோ,  இன்குபேட்டர்லயோதான் பொரிக்கணும். அதனால, நாங்க குஞ்சு உற்பத்தி பண்றது கிடையாது. முட்டையாவே விற்பனை செஞ்சுடுறோம். 
 
ஒரு முட்டை 20 ரூபாய்!

வாத்து, 100 நாளைக்கு தொடர்ச்சியா முட்டை வைக்கும். அதுக்கப்பறம் ரெண்டு மூணு நாள் இடைவெளி விட்டு திரும்ப முட்டை வைக்க ஆரம்பிச்சுடும். இங்க இருக்குற 70 பெட்டை வாத்துகள் மூலமா மாசத்துக்கு சராசரியா 1,800 முட்டைகள் கிடைக்குது. வெள்ளை நிற வாத்துக்களுக்கு அதிக தேவை இருக்கிறதால பெரும்பாலும் முட்டையை குஞ்சு உற்பத்திக்காகத்தான் வாங்கிறாங்க. ஒரு முட்டை 20 ரூபாய்னு விற்பனை செய்றோம். அது மூலமா, மாசத்துக்கு 36 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில், தீவனம், வேலையாட்கள் சம்பளம்னு 8 ஆயிரம் ரூபாய் போக, 100 வாத்துங்க மூலமா மாசம் 28 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். இதில்லாம வயசாகி முட்டை உற்பத்தி குறைஞ்ச வாத்துகளையும், அதிகப்படியா இருக்கிற ஆண் வாத்துகளையும் அப்பப்போ உயிர் எடைக்கு ஒரு கிலோ 300 ரூபாய்னு விற்பனை செஞ்சிடுவோம். அதுல கணிசமா ஒரு வருமானம் கிடைக்கும். இந்தப் பணத்தைத் திரும்ப குஞ்சுகள் வாங்க உபயோகப்படுத்திக்குவோம்” என்ற அர்த்தநாரீஸ்வரன் நிறைவாக,

வீட்டிலேயே வளர்க்கலாம்!

“அழகுக்காக வளர்க்கிற வெள்ளை வாத்துங்க நம்மைவிட்டு அதிக தூரத்துக்குப் போகாது. நாட்டு வாத்து மாதிரி அடிக்கடி இடம் மாத்த வேண்டிய அவசியமில்லை. வீட்டில் சின்ன இடம் இருந்தாகூட இந்த வாத்துகளையும் வளர்க்கலாம். அதுல கிடைக்கிற முட்டைகளை கோழி அடையிலேயே அடை வெச்சு, குஞ்சு பொரிச்சு விற்பனை செய்ய முடியும். எப்பவுமே இந்த வாத்துகளுக்கு நல்ல தேவை இருக்கு” என்றார்.

தொடர்புக்கு,

அர்த்தநாரீஸ்வரன்,

செல்போன்: 99441-55299.

என் செல்லமே...

• வாத்து அடை காக்காது. குஞ்சு பொறிப்பான் அல்லது அடைக்குப் படுக்கும் நாட்டுக்கோழிக்கடியில் வாத்து முட்டைகளை வைத்து குஞ்சு பொறிக்க வேண்டும்.

• முயலைக் காதைப்பிடித்து தூக்குவதைப்போல வாத்தை கழுத்தைப் பிடித்துத்தான் தூக்க வேண்டும். கழுத்து நீண்டு இருப்பதால், மூச்சுத்திணறல் ஏற்படாது. கால் மற்றும் இறக்கையைப் பிடித்து தூக்கினால், வாத்து பதற்றத்தில் துள்ளும்போது கால், இறக்கை ஆகியவை முறிந்துவிட வாய்ப்புள்ளது.

• கால் தடிமனாகவும் உறுதியாகவும் இருந்து, வால் மேல் நோக்கிச் சுருண்டும், அலகு அகலமாகவும் இருந்தால், அது ஆண் வாத்து என்று கண்டுபிடித்து விடலாம்

• முட்டையில் கரு இருக்கும் இடம் தட்டையாகவும் எதிர்புறம் கூம்பு வடிவிலும் இருந்தால் அந்த முட்டையிலிருந்து ஆண் வாத்துக் குஞ்சு வரும். கரு இருக்கும் இடமும் எதிர்புறமும் தட்டையாகவே இருந்தால் அந்த முட்டையிலிருந்து பெட்டைக் குஞ்சு வரும்.

• அடைகாக்கச் சேகரித்து வைத்திருக்கும் முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. மண் பானை அல்லது ஓலைப்பெட்டியில் வைக்கோலைப் பரப்பி முட்டையின் கூம்புப்பகுதி கீழ் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். வைக்கோலுக்குப் பதில் தவிடு, உமி அல்லது வட்டவடிவமாகச் சுற்றப்பட்ட துணி என எதை வேண்டுமானாலும், பயன்படுத்தலாம்.

• புதிய நபர்கள் வீட்டுக்குள் வந்தால், வழக்கத்துக்கு மாறாக அதிக சத்தம் எழுப்பி, வாத்துகள் நம்மை அழைக்கும்.

• வீடுகளில் வளர்க்கும் வாத்துக்களுக்கு பச்சைக் காய்கறிக்கழிவுகள், வடித்த சாதம், பழைய சாதம் என எதை வேண்டுமானாலும், உணவாகக் கொடுக்கலாம்.

முட்டையின் தேவை அதிகம்!

நாட்டு வாத்துக்களை மேய்ச்சல் முறையில் வளர்த்து வருகிறார், திருநெல்வேலி மாவட்டம்

என் செல்லமே...

ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த முருகன். அவரிடம் பேசியபோது, “எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து வாத்து மேய்க்கிறதுதான் தொழில். என்கிட்ட 200 வாத்துகள் இருக்கு. கேரள மாநிலம், கொல்லத்துல இருந்துதான் குஞ்சுகள் வாங்கிட்டு வருவோம். ஒரு நாள், ரெண்டு நாள் குஞ்சுகளாத்தான் வாங்குவோம். முதல் 15 நாட்களுக்கு பச்சரிசி மாவுக் கூழை சாப்பிடக் கொடுப்போம். 15 நாளுக்கு மேல முக்கால் வேக்காடு வெந்த சாதத்துல கருவாட்டுத்தூள் கலந்து தீனியா கொடுப்போம். பிறந்து 30 நாள் ஆயிடுச்சுனா மேய்ச்சலுக்குக் கூட்டிட்டுபோக ஆரம்பிச்சிடுவோம். மேய்ச்சலுக்குப் போனாதான் வாத்துகள் நல்லா வளரும்.

ஊர் ஊரா தண்ணீர் இருக்கிற இடங்கள்ல வாத்துக்களை மேய்ச்சலுக்குக் கூட்டிக்கிட்டுப் போவோம். நடவுக்காக உழவு அடிச்சு சமப்படுத்தின வயல்கள்ல அதோட  உரிமையாளர்கிட்ட, அனுமதி வாங்கி வாத்துகள மேய விடுவோம். அந்த வயல்கள்ல இருக்கிற களைகள், கோரைக்கிழங்குகள் எல்லாத்தையும் வாத்துங்க வேரோட மேய்ஞ்சுடும். அதோட நத்தை, நண்டுகளும் வாத்துக்களுக்கு இரையாகக் கிடைச்சிடும்.

அஞ்சு மாச வயசு ஆன பிறகு வாத்துங்க முட்டை இட ஆரம்பிக்கும். ராத்திரி நேரங்கள்ல ஆட்டுப்பட்டி அடைக்கிற மாதிரி அடைச்சிடுவோம். காலையில வாத்துகளைத் திறந்து விட்டுட்டு முட்டையை எடுத்துடுவோம். இந்த முட்டையை 8 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கிக்கிறாங்க. நேரடியா விற்பனை செய்தா ஒரு முட்டை 10 ரூபாய்னு விலை போகும்.

கேரளாவில் நாட்டு வாத்து முட்டைக்கு அதிகமான தேவை இருக்கிறதால முட்டை விற்பனைக்கு பிரச்னை இல்லை. என்கிட்ட 100 பெட்டை வாத்து, 100 ஆண் வாத்து இருக்கு. அது மூலமா, எப்படியும் எல்லா செலவும் போக மாசம் 20 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும். ஆனா, அலைச்சல் மட்டும்தான் கொஞ்சம் அதிகம். வெள்ளை வாத்துகளை அழகுக்குத்தான் வளர்ப்பாங்க. அதோட முட்டையில சத்து கிடையாது. நாட்டு வாத்து முட்டையிலதான் சத்து அதிகம். நாட்டு வாத்துக் கறி ருசியாவும் இருக்கும். நாட்டு வாத்து உயிர் எடைக்கு கிலோ 400 ரூபாய் வரைக்கும் விலை போகுது’’ என்றார், முருகன்.

தொடர்புக்கு,

முருகன், செல்போன்: 89738-87239.

மூன்று முறை உணவு!

என் செல்லமே...

வாத்துகளுக்கான உணவு குறித்துப் பேசிய அர்த்தநாரீஸ்வரன், “அரிசி மில்கள்ல நெல் பதர் கிடைக்கும். கிலோ ஒரு ரூபாய்னு விற்பனை பண்றாங்க. இதையும் தீவனமா கொடுக்கிறோம். காலையில 6 மணியில இருந்து 7 மணிக்குள்ள வாத்துகளை, மேய்ச்சலுக்குத் திறந்து விடுவோம். திறந்து விட்டதும் 10 கிலோ பதரைத் தூவி விடுவோம். இது 100 வாத்துக்களுக்கும் போதுமானது. வாத்துக்கான தண்ணீர் தொட்டியிலகூட இதைத் தூவலாம். 3 கிலோ நெல் தவிடு அல்லது கோதுமைத் தவிடை 6 லிட்டர் தண்ணீர் விட்டு பிசைஞ்சி, 30 நிமிடம் ஊற வெச்சு... 9 மணியில இருந்து 10 மணிக்குள்ள தீனியா கொடுக்கணும். மதியம் 12 மணிக்கு 2 கிலோ நவதானியக்கலவையைத் தரையில் தூவி விடுவோம். காலையில கொடுத்த மாதிரியே ஊறவெச்ச தவிடை சாயங்காலமும் கொடுத்திடுவோம். ராத்திரி தீனி போடத் தேவையில்லை. குடிக்க தண்ணீர் மட்டும் வெச்சிட்டா போதும்.

சுத்தம்... கவனம்!

தினமும் காலையில வாத்துகளை மேய்ச்சலுக்காகத் திறந்து விட்டதும் முட்டைகளைச் சேகரிக்கணும். அடுத்து, கொட்டகைக்குள் உதிர்ந்து கிடக்கும் இறக்கைகளை அப்புறப்படுத்தணும். ஒவ்வொரு முறை தண்ணீர் வைக்கும்போதும் பாத்திரத்தை சுத்தம் செய்த பிறகே தண்ணீர் கொடுக்கணும். அதேபோல, வாத்து நீந்துவதற்கு தண்ணீர்த் தொட்டி அவசியம். 10 வாத்துகளுக்கு இரண்டு அல்லது மூன்று வட்டவடிவ பிளாஸ்டிக் டப் போதுமானது. அசோலா வளர்க்கப் பயன்படுத்தப்படும் நீளமான ‘குழி’யிலும் தண்ணீர் நிரப்பி வைக்கலாம்.

பத்து பெட்டைக்கு ஓர் ஆண்!

முட்டைக்காக வளர்க்கும்போது, பத்து பெட்டை வாத்துகளுக்கு ஓர் ஆண் வாத்து என்ற விகிதத்தில் வளர்க்கணும்.  மூணு மாத வயது நிரம்பிய பிறகுதான் வாத்துகள்ல, ஆண், பெண் அடையாளம் தெரியும். அதனால், மூணு மாச வயது ஆனவுடனே தேவையான அளவு ஆண் வாத்துக்களை மட்டும் வெச்சிக்கிட்டு, மற்றதைக் கழிச்சுடணும். மூணு மாசங்களுக்கு மேல வாத்துங்க பருவத்துக்கு வர ஆரம்பிக்கும். இனச்சேர்க்கை நடந்த பத்து நாள்ல பெட்டை வாத்துங்க முட்டையிட ஆரம்பிக்கும். பொதுவா வாத்துங்க அதிகாலையில்தான் முட்டையிடும். அதை இரவு கூண்டுக்குள் அடைச்சு வைக்கிறாதல முட்டையை சுலபமா சேகரிக்க முடியும். வாத்துகளுக்குத் தொடர்ச்சியா முட்டையிடும் பழக்கம் உண்டு. ஒரு வாத்து வருஷத்துக்கு 200 முட்டைகள் வரை கூட இடும்” என்றார்.

ஒரு மாத குஞ்சுகளே ஏற்றவை!

பொதுவாக எந்தப் பறவையை வாங்கி வளர்ப்பதாக இருந்தாலும், ஒரு மாத வயதில் வாங்குவது நல்லது. சிலர் ஒரு நாள் குஞ்சுகளை விற்பனை செய்வார்கள். அப்படி வாங்கி வரும்போது... அவற்றை நாய், பூனைகள் போன்ற விலங்குகளிடம் இருந்தும் நோய்களில் இருந்தும் காப்பாற்றுவது கடினம். அதனால், ஒரு மாத வயதுடைய வாத்துக் குஞ்சுகளை வாங்குவது நல்லது. வாத்துகளுக்கு இரவில் அடைக்க கொட்டகை அல்லது, கூண்டு அவசியம். 100 சதுர அடி கொட்டகை அல்லது  கூண்டில் 50 வாத்துகளை அடைக்கலாம். கொட்டகையின் தரைப்பகுதியில, கடலைத்தோல், தென்னை நார்க்கழிவு பரப்பி வைக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை கழிவுகளைச் சேகரித்து செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

இ.கார்த்திகேயன்

படங்கள்: எல்.ராஜேந்திரன்