நாட்டு நடப்பு
Published:Updated:

கூவம் நதி உயிரோடுதான் இருக்கிறது...

நதியோடு ஒரு நடைப்பயணம்!

‘கூவம்’ என்றாலே சாக்கடை, அழுக்கின் அடையாளச் சொல் என்ற நிலை இருக்கிறது. ஆனால், ‘தேம்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என லண்டன் தேம்ஸ் நதிக்கு இணையாக இதே கூவத்தை ஆராதித்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். 1950-ம் ஆண்டுக்கு முன்னர் படகு போக்குவரத்துக்கும், மக்கள் மீன் பிடித்து உண்ணும் சுற்றுலாதலமாகவும் இருந்த கூவம், மனிதத் தவறுகளால் இன்றைக்கு மரணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில், ‘சென்னையின் பெருமைகளில் ஒன்றான கூவம் நதியை உயிர்ப்பிக்கும் நோக்கில், கூவம் தொடங்கும் இடத்தில் இருந்து, முடியும் இடம் வரை நதியோடு நடைபயணம் மேற்கொண்டனர் இயற்கை ஆர்வலர்களான சாரா குழுவினர்.

கூவம் நதி உயிரோடுதான் இருக்கிறது...

கூவம் நதிப் பயணம் குறித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்ட சாரா, ‘‘திருச்செந்தூர் அருகிலுள்ள நாசரேத்,  என்னோட பூர்விகம். பள்ளி விடுமுறை நாட்களில் ஏரலில் உள்ள தாத்தா வீட்டுக்குப் போவோம். அங்கு ஒடும் தாமிரபரணியில் எப்பவும் குதியாட்டம்தான். அப்போதிருந்தே ஆறுகள் மீது அளவுகடந்த ஆர்வம். இயற்கை மேலும் ஆர்வம் ஏற்பட்டு, இயற்கையைக் காக்க பல நடைபயணங்கள் போயிருக்கிறேன்.

இந்நிலையில், புகைப்பட கலைஞர் மாதவன், ஆவணப் பட இயக்குநர் குமரன் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துது. மாதவன்தான் இந்த ஆறோடு உறவாடும் திட்டத்தைச் செயல்படுத்த யோசனை சொன்னார். எங்கள் முதல் தேர்வாக இருந்தது கூவம்தான். உடனே ஒரு குழுவை ஏற்படுத்தி பயணத்தைத் தொடங்கிட்டோம்.

கூவம் நதி உயிரோடுதான் இருக்கிறது...

ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள், 102 கிலோ மீட்டர் பயணம் செய்தோம். திருவள்ளூர் மாவட்டம், கூவம் கிராமத்துக்கு அருகிலுள்ள கேசவரம் அணையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தோம். முதல் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீரையே பார்க்க முடியவில்லை. அவ்வளவும் வறண்டு போன பாலை நிலங்களாக காட்சியளித்தன. கரையோர விவசாயிகளிடம் பேசியதில், ஒரு காலத்தில் இந்த ஆற்று நீர்தான் அவர்களின் விவசாயத்துக்கு ஆதாரமாக இருந்ததையும்... தற்போது ஆழ்துளைக் கிணறுகளையே நம்பியிருப்பதையும் தெரிந்துகொண்டோம்.

பயணத்தின் 7-ம் நாள் திருவேற்காட்டை அடைந்தபோதுதான் கூவத்தின் நிறம் மாறியதைப் பார்த்தோம். அங்கு முழுவதும் குப்பைக் கூளங்களால் ஆறு பாழாக்கப்பட்டு இருந்தது. அந்தக் குப்பைக் கூளங்களும், கழிவுநீரும் எங்கு இருந்து வருகிறது எனக் கண்டறியப் புறப்பட்டோம்.

ஒவ்வொரு தொழிற்சாலைகளையும் ஆராய்ந்தபடியே சென்றோம். அந்த ஆய்வில் முழுவதும் அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மூலமாகத்தான் நதி பாழாகியிருப்பது தெரிந்தது. லாரிகளும் தம் பங்குக்கு கழிவுநீரை ஆற்றுக்குள் கொட்டிக் கொண்டிருந்தன. தொழிற்சாலைகளைவிட அடுக்குமாடி குடியிருப்புகள்தான் கூவத்தைப் பாழாக்குவதில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.

கூவம் நதி உயிரோடுதான் இருக்கிறது...

ஒன்பதாம் நாள் கூவம் நதி முடிவடையும் சென்னையின் நேப்பியர் டெல்டாவை அடைந்தோம். அத்துடன் எங்கள் பயணமும் முடிந்தது. இந்தப் பயணம் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்... ‘கூவம் இன்னும் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறது. அதைக் காப்பாற்றுவது நமது கையில்தான் இருக்கிறது’ என்பதே.

அடுத்த கட்டமாக, கூவம் ஆற்றின் சிறப்பை உலகறியச் செய்ய ‘கூவம் திருவிழா’வை பொங்கல் திருவிழா சமயத்தில் சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலை அருகில் நடத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். அவ்விழாவில் இயக்குநர் குமரன் இயக்கிய கூவம் ஆற்றின் வரலாற்றை உள்ளடக்கிய ஆவணப்படம் திரையிடப்படும். மேலும் பல புகைப்படக்கலைஞர்களின் அரிய புகைப்படங்களும் இடம் பெறப்போகின்றன’’ என்று ஆர்வம் பொங்கச் சொன்னார் சாரா. 

கூவம் நதி உயிரோடுதான் இருக்கிறது...

.

பார்த்திபனின் கனவும் ஆபத்தான விஷமும்!

அண்மையில் நடைபெற்ற ஒரு படவிழாவில் பேசிய நடிகர் பார்த்திபன், ‘‘வாழ்க்கை அழகாக இருக்கவேண்டுமானால், நல்ல நண்பர்கள் வேண்டும். எனக்கு இயற்கைச் சூழலில் வாழவேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. தற்போது சென்னையில் நான் வசிக்கவில்லை. சென்னையிலிருந்து 125 கி.மீ தூரத்திலிருக்கும் மரக்காணம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கிறேன். கிராமத்துச் சூழலில் பசுமையான மரங்களுக்கு மத்தியில் வாழ்கிறேன். அங்குள்ள எனது தோட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன். என் தோட்டத்தில் இருக்கிற தாவரங்களுக்கு சாண உரம்தான் கொடுக்கிறேன். ‘இதுக்கு பதிலா கூவத்துல இருந்து சகதியை அள்ளிக்கிட்டு வந்துப் போட்டா பயிர் நல்லா வளரும்’ என்று ஒரு விவசாயி ஆலோசனை சொன்னார். அது நல்ல யோசனையாக இருந்தது. ஒவ்வொருவரும் உரத்துக்காக சகதியை அள்ளினால், கூவம் சுத்தமாகிவிடுமே என்று தோன்றுகிறது’’ என பேசிய பார்த்திபன், இதுதொடர்பாக மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

கூவம் நதி உயிரோடுதான் இருக்கிறது...

நடிகர் பார்த்திபனின் இந்தப் பேச்சு பற்றி, ‘மண்புழு விஞ்ஞானி’ முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயிலிடம் கேட்டபோது, ‘‘கூவத்தில் இருப்பது சாக்கடை மட்டுமல்ல, ஆபத்தான தொழிற்சாலை விஷங்களும் கலந்துள்ளன. அதன் கழிவுகளை வயலில் கொட்டினால் நிலம் கெட்டுப் போய்விடும். கூவத்தில் உள்ள நீரைப் பரிசோதனை செய்து, முறையாகச் சுத்திகரித்த பிறகே கழிவுகளையும், நீரையும் பயன்படுத்த வேண்டும்’’ என்று சொன்னார்.

நாங்க ரெடி! நீங்க ரெடியா?

கூவத்தைச் சுத்தப்படுத்தி கழிவுகளை உரமாக்குவது குறித்து பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ‘‘கூவம் ஆற்றின் கழிவுநீரை வேறு ஒரு இடத்தில் கொண்டு சென்று கொட்டினால் நிலமும், நிலத்தடி நீரும் பாதிப்படையும்.

கூவம் ஆற்றுக் கரையின் மேல் பகுதியைச் சுத்தப்படுத்துவதே சிறந்தது. கூவத்தில் உள்ள நச்சுப்பொருளில் மொத்த அளவு 3 சதவிகிதம் மட்டுமே. மீதி உள்ள 97 சதவிகித நீரில் நோய்த் தாக்கும் கிருமிகள் குறைவு. எனவே 3 சதவிகித திடப்பொருளை மட்டும் வாரி சுத்தப்படுத்தினாலே போதும். இந்த நச்சுப் பொருளும் 90 சதவிகிதம் நதியின் கீழ்பகுதியில்தான் திடப்பொருளாகப் படிந்து இருக்கும். எனவே, கூவம் கரையோரத்தில் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுகளை வாரி, ஈரப்பதம் மற்றும் கிருமிகளை நீக்கி உரமாக மாற்றலாம். குஜராத் மாநில அரசு வதோதராவில் இதனை செய்து இயற்கை உரத்தை விற்பனை செய்து வருகிறது. தமிழக அரசு இந்த வகையில் முயற்சித்துப் பார்க்கலாம்’’ என்று கூறி இருக்கிறார் டேனியல் செல்லப்பா.

ஒருங்கிணைந்த கூவம் நதித் திட்டம்!

அண்மையில் ‘ஒருங்கிணைந்த கூவம் நதிச் சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்ட’த்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்திருக்கிறார். இதில் கூவம் நதியின் சீரமைப்புப் பணிக்காக குறுகியகால திட்டமாக 60 துணைத் திட்டங்களைச் செயல்படுத்திட 604 கோடியே 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ஆவடி அருகேயுள்ள பருத்திப்பட்டு அணையிலிருந்து கூவம் முகத்துவாரம் வரையிலான 27.3 கிலோ மீட்டர் நீளமுள்ள கூவம் நதிப் பகுதிகள் சீரமைக்கப்படவுள்ளன. இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கூவத்தைச் சுத்தப்படுத்துவதற்காக கோடிகளைக் கொட்டுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே தி.மு.க., அ.தி.மு.க என்று ஆட்சிகள் மாறும்போதெல்லாம் கொட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள் கோடிகளை. ஆனால், கூவம் மட்டும் சுத்தமாகவே இல்லை.

துரை.நாகராஜன்