
மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!
பதிலடி கொடுத்த பாரம்பர்ய விவசாயம்...
விவசாயிகளிடம் பயிற்சி எடுக்கும் விஞ்ஞானிகள்!
‘ஏண்டீஸ்’ உழவர்களின் பாரம்பர்ய மண் வகைப்பாடுகளுள் சில, நவீன வகைப்பாட்டியலுடன் பொருந்தக்கூடியவையே. எனினும், ஈரப்பத நிலையில் நிகழும் மண்ணின் குண மாறுபாடுகளைச் ‘சாக்ரா’வின் மூலம் உற்றுக் கவனித்து சாகுபடி செய்தவர்கள் இம்மக்கள். எடுத்துக்காட்டாக, 1,500 ஆண்டுகளாக வேளாண்மை நடக்கும் ‘கோல்கா’ பள்ளத்தாக்குக்கு அருகில் இன்னமும் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படாத நிலம் இருக்கிறது. இந்நிலத்தைக் காட்டிலும் இவர்கள் சாகுபடி செய்துகொண்டிருந்த நிலமானது, மண்வளத்தை இழக்காமல் நல்ல நிலையில் இருந்தது. சாக்ரா கற்றுத்தந்த இத்தகையப் பாரம்பர்ய அறிவை இங்கு வலிய நுழைக்கப்பட்ட கார்ப்பரேட் அறிவியல் கருத்தில் கொள்ளவில்லை. .

ஆறு ஆண்டுகளில் அடிபணிந்த அமெரிக்கா!
புதிய திட்டத்தின்படி நீர்ப்பிடிப்புப் பகுதியில் சாகுபடி செய்ய வேண்டுமென கூறப்பட்டபோது உழவர்கள் திடுக்கிட்டார்கள். “அப்படியெல்லாம் செய்யக்கூடாது. நிலத்துக்குத் தகுந்தபடி சாக்ரா என்ன சொல்கிறதோ, அதன்படியே செய்ய வேண்டும்’’ என்றனர். ஆனால், அவர்களுடைய சொற்கள் அமெரிக்காவின் தடித்த காதுகளில் விழவில்லை. மலைப்பகுதியின் பாரம்பர்ய அறிவிடம், சமவெளி அறிவு வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. ஆனால், ஆறே ஆண்டுகளில் ‘அமெரிக்க அறிவு’ படுதோல்வியைக் கண்டது.
முதல் திட்டத்தின் தோல்விக்குப் பிறகு, 1989-ம் ஆண்டில் ‘PRATEC’ என்கிற இரண்டாவது திட்டம் நடைமுறைக்கு வந்தது. முதல் திட்டத்தின் தோல்வியில் பாடம் கற்றுக்கொண்ட அறிவியலாளர்கள், இம்முறை ‘ஏண்டீஸ்’ உழவர்களுடன் கலந்து பேச முன்வந்தனர். பிறகுதான், இந்த மக்களுக்கு ‘சாக்ரா’ கற்றுத் தந்திருக்கும் பதினைந்து நூற்றாண்டு காலத்தின் பாரம்பர்ய அறிவு பற்றி, ‘நவீன கார்ப்பரேட் புத்தி’க்கு, தெரியவந்தது. அதோடு, தம்முடைய திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதும் புரிந்தது. இன்று அங்கு காட்சி மாறிவிட்டது. இப்போது அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வேளாண் பொருளியலாளர்கள், பேராசிரியர்கள் என அனைவருமே ஏண்டீஸ் உழவர்களிடம்தான் பயிற்சி எடுக்கிறார்கள். 1993-ம் ஆண்டிலிருந்து பெரு நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் சாக்ரா என்கிற பாரம்பர்ய அறிவுதான் பாடத் திட்டமாக இருக்கிறது. என்ன பாடம் கற்றுக்கொடுத்து என்ன... கார்ப்பரேட் நிறுவனங்கள் திருந்தவா போகின்றன? லத்தீன் அமெரிக்க மண்வளத்தைப் பிளக்க அவை கையிலெடுத்த அடுத்த கோடரி, சோயா என்கிற பணப்பயிர்.
இது சோயாவின் கதை!
பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்திலுள்ள ஒரு சோயா தோட்டத்தின் பெயர் எஸ்பிரிட்டோ. 1995-ம் ஆண்டில் ஏறக்குறைய 60 பேர் இங்கு கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 17 வயதான ஜோஸ், பரானா எனும் இரு இளைஞர்கள் அங்கிருந்து தப்பி இருக்கிறார்கள். வழியில், தோட்டப் பாதுகாவலர்களின் துப்பாக்கி குண்டுக்கு பரானா இறந்துவிட, காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ந்த ஜோஸ் வழியாக சோயா தோட்டங்களின் உண்மை நிலவரம் வெளியுலக்குத் தெரிய வந்தது. இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம். இப்படி வெளிவராத கதைகள் இன்னும் பல. கொத்தடிமைகளாக சிறைப்பட்டிருக்கும் பலரும் இம்மண்ணின் மைந்தர்களே. இன்னும் சொல்லப்போனால் உழவர்கள். அதுவும் தம் சொந்த நிலத்தில் பயிர் செய்த உழவர்கள். சோயா தோட்டங்களை அமைக்க எண்ணிய கார்ப்பரேட்டுகள், அரசு உதவியுடன் இவர்களின் நிலங்களைக் கைப்பற்றி அவற்றைப் பெரும் சோயா தோட்டங்களாக மாற்றினர்.
எங்கோ கேள்விப்படுகிற செய்தியைப் போல இருக்கிறதா? சிறு,குறு உழவர்களை விளைநிலத்திலிருந்து விரட்டி அவற்றை கார்ப்பரேட்டுக்கு கைமாற்றியளிக்க இம்மண் மீது பாசமற்ற ‘மன்மோகன் அரசு’ செய்ய துடித்ததும், நடப்பு மோ(ச)டி அரசு செய்யத் துடிப்பதும் இதைத்தான். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் நோக்கமும் இதுதான். இச்சட்டத்தால் நிறைய வேலை வாய்ப்புகள் அமையுமென கூசாமல் பொய்யும் சொல்கின்றனர். வேளாண்மை கார்ப்பரேட் வசம் சென்றால், இயந்திரமயமாக்கப்பட்ட அவ்வேளாண்மையில் மனிதவளம் அதிகம் தேவைப்படாது என்பதுதான் உண்மை. இதற்கு பிரேசிலில் உள்ள சோயா தோட்டமே சான்று.
200 ஏக்கர் அளவுள்ள தோட்டத்துக்கு ஒரேயொரு ஆள்தான் தேவைப்படுகிறது. ஏற்கெனவே நிலங்களை இழந்த மக்கள், இதனால் வேலைகளையும் இழந்தனர். ஏ.டி.எம், டவ் கெமிக்கல்ஸ், டூபாண்ட், மான்சான்டோ போன்ற பல நிறுவனங்கள் சோயா உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இன்றைக்கு 85% சோயா, பண்ணை விலங்குகளின் தீவனத்துக்காகவே பயிரிடப்படுகிறது. இப்பண்ணையின் உற்பத்திப் பொருட்களும் இம்மக்களுக்குப் பயன்படாமல் பணக்கார நாடுகளை நோக்கித்தான் பயணிக்கின்றன. இவ்வகையில் சோயாவை அடிப்படையாகக் கொண்ட பண்ணைப் பொருட்களின் பெரிய நுகர்வோராக சுவிட்சர்லாந்து உள்ளது. இந்நாட்டில் சோயா விளையாது. ஆனால், இந்நாட்டு மக்களின் நுகர்வுக்காக தலைக்கு 230 சதுரஅடி லத்தீன் அமெரிக்க நிலம் தேவைப்படுகிறது.
உண்மையில் சோயா நல்ல ஊட்டச்சத்து உணவு. சீனா, ஜப்பான், கொரிய நாடுகளில் இது அன்றாட உணவு. சோயாவிருந்து பால், சோயாக்கட்டி, தயிர் போன்ற பலவகையான உணவுப் பொருட்களை இவர்கள் தயாரிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் வெகுவாகக் காணப்படும் மார்பகப் புற்றுநோய் ஜப்பானிய பெண்களிடம் இல்லாமல் இருப்பதற்கு சோயா உணவே காரணம். ஆனால், அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்ததும் இப்பயிரின் உணவுப்பயன்பாடு தொழிற் பயன்பாடாக மாறிவிட்டது.
தொழிற்சாலைக்கான கச்சாப் பொருளாக சோயாவைப் பார்த்த கார்ப்பரேட் நிறுவனங்களில் ஃபோர்டு நிறுவனம் முதன்மையானது. ‘கார் தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனத்துக்கும் சோயா மொச்சைக்கும் என்ன தொடர்பு?’ என திகைக்க வேண்டாம். கார் தயாரிப்பில் சோயாவிலான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கார் தயாரிப்பில் சோயா.!
பருத்திக்கு மாற்றாக செயற்கை இழைத் தயாரிப்பில் கார்ப்பரேட்டுகள் கவனம் செலுத்தி வந்த காலம் அது. ஃபோர்டு நிறுவனமும் இப்போட்டியில் இறங்கியது. அஸ்லான் (Azlon) எனும் செயற்கைப் பட்டிழையை அந்நிறுவனம் கண்டுபிடித்தாலும்... அதே காலக்கட்டத்தில் டூபாண்ட் நிறுவனம் கண்டுபிடித்த ‘நைலான்’ எனும் செயற்கை இழையே சந்தையில் வெற்றியை ஈட்டியது. இதனால் ஃபோர்டு நிறுவனத்தின் செயற்கை இழை மதிப்பிழந்தது. ஆனால், சோயா பற்றிய ஆய்வில் ஓராண்டில் மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் டாலரை ஃபோர்டு நிறுவனம் செலவளித்திருந்தது. இத்தொகையை வீணாக்க முடியுமா? ஆய்வு திசை மாற்றப்பட்டது. 1935-ம் ஆண்டில் சோயாப் பொருட்களை கார்களில் பயன்படுத்த ஆரம்பித்தனர். சோயா எண்ணெயிலிருந்து உருவாக்கப்பட்ட பெயின்ட்கள், கார்களில் பூசப்பட்டன. இந்த எண்ணெயிலிருந்து உருவாக்கப்பட்ட மசகு (கீரிஸ்), காரின் ‘ஷாக் அப்சர்பர்’ பாகங்களில் பயன்படுத்தப்பட்டன.
இன்று சந்தையில் டீசலுக்கு மாற்றான உயிரி எரிபொருளாகவும் சோயா எண்ணெய் பயன்படுகிறது. இச்சந்தையை விரிவாக்க சில கார்ப்பரேட்டுகள் முயன்றபோது, டவ் கெமிக்கல் என்கிற கார்ப்பரேட் நிறுவனம் இம்முடிவை கடுமையாக எதிர்த்தது. ‘இந்த கார்ப்பரேட் நிறுவனத்துக்கு இவ்வளவு சமூகப் பொறுப்புணர்வா?’ என்று யாரும் அவசரப்பட்டு புளகாங்கிதம் அடைய வேண்டாம். இந்த நிறுவனம், சோயாவை மூலப்பொருளாகக் கொண்டு ‘ஃபோம்’ எனும் செயற்கை மெத்தைப் பொருட்களைத் தயாரித்து வருகிறது. அத்தொழிலுக்கு மூலப்பொருள் பற்றாக்குறை ஏற்பட்டு விடுமோ என்கிற கவலையால்தான் இந்த எதிர்ப்பு. இன்றும் கார் இருக்கைகளின் மெத்தைகள் சோயாவில்தான் தயாரிக்கப்படுகின்றன.
உணவுப் பயிர், தொழிலுக்கான மூலப்பொருளாக மாற்றப்பட்டதால் ஓரினப்பயிர் சாகுபடி தீவிரமாக்கப்பட்டது. விளைவாக வளமான சவான்னா புல்வெளி நிலத்தில் சாகுபடி விரிவாக்கம் செய்யப்பட்டது. இத்தகைய நடவடிக்கைக்கு இயற்கையின் எதிர்வினை என்ன தெரியுமா? மண் அரிமானம். பிரேசிலில் மட்டும் ஆண்டுக்கு 5.5 கோடி டன்னுக்கு மேலாக மண் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அமேசானின் வளமான பகுதிகளில் ஒன்றான ‘செராடோ’ படுகையில் மட்டும் ஹெக்டேருக்கு எட்டு டன்கள். முதலாம் உலகப்போருக்கு பிந்தைய பொருளாதார பெருமந்தத்தின்போது ஐக்கிய அமெரிக்க மண் பெருமளவில் நைட்ரஜன் சத்தை இழந்திருந்தபோது, இச்சத்தை திரும்பப் பெற இதே சோயா பயிர்தான் பயன்பட்டது. ஆனால், தன் தொழில் முன்னேற்றத்துக்காக அமெரிக்கா, சோயாவைக் கொண்டு லத்தீன் அமெரிக்க மண்ணை வளமிழக்க செய்து கொண்டிருக்கிறது.
மண் அரிமானத்தால் கார்ப்பரேட்டின் செலவுகள் கூடின. இவ்வளத்தை மீட்க மீண்டும் கார்ப்பரேட் தொழில்நுட்பமே அங்கு நுழைக்கப்பட்டது. இதனால் மண் மட்டுமின்றி இம்மண்ணின் மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரேசிலில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்டு, 4,000 பேர் வரை இறக்கின்றனர். இருப்பினும் இதையெல்லாம் தாண்டி இங்கு பூச்சிக்கொல்லி விற்பனை மும்மடங்காகியுள்ளது. இதற்கு மண் என்ன பதில் தரப் போகிறது? விடையை இயற்கையின் கைகளில் விட்டுவிட்டு, கார்ப்பரேட்டுகளின் நடவடிக்கையைக் காண அடுத்து ஆப்பிரிக்கக் கண்டத்துக்குச் செல்வோம்.
-தடுப்போம்
‘சூழலியலாளர்’ நக்கீரன்