‘விவசாயம் நலிவடைந்தால் குற்றச்செயல்கள் அதிகரிக்கும்..!’
விவசாயத்தில் ஆர்வம் இருக்கிறது... ஆனால், என்னிடம் நிலம் இல்லையே என ஆதங்கப்படும் நகரத்து விவசாயிகளுக்காக, ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற தலைப்பில் பயிற்சிக் கருத்தரங்குகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது பசுமை விகடன். அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 15-ம் தேதி அன்று திண்டுக்கல் விவேகானந்தா நகரில் உள்ள ஆர்.கே.ஜி.ரோட்டரி ஹாலில் ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ பயிற்சிக் கருத்தரங்கு நடந்தேறியது. இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

‘பசுமை விகடன்’, ‘அவள் விகடன்’ மற்றும் திண்டுக்கல் ‘குயின் சிட்டி ரோட்டரி சங்கம்’ ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. குயின் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர், ரத்தினமாலா, செயலாளர் டாக்டர்.சர்மிளா பாலகுரு ஆகியோர் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி தொடங்கியது.
விழாவில் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், ‘‘விவசாயம்தான் அனைத்துக்கும் அடிப்படை. விவசாயம் செழிப்பாக இருக்கும் பகுதிகளில், மனிதர்களின் வாழ்க்கையும் செழிப்பாக இருக்கும். விவசாயம் வெறும் உணவை மட்டும் உற்பத்தி செய்வதில்லை... அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு, வியாபார வாய்ப்பு போன்றவை ஒட்டுமொத்த சமூகத்துக்கான வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்துகிறது.
எங்கு விவசாயம் நலிவடைகிறதோ... அங்கு குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. சமூகச் சீர்கேடுகள் அரங்கேறுகின்றன. விவசாயம் செய்ய வாய்ப்பில்லாதவர்கள் வீடுகளில் சிறியதாக தோட்டம் போடுங்கள்..அதன் மூலம் நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்து நீங்கள் மட்டுமில்லாமல் அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்து கொண்டால், ஆரோக்கியம் வளர்வதோடு, அன்பும் இணைந்தே வளரும். அமைதியான சமூகமாற்றம் அரங்கேறும்’’ என்றார்.

இயற்கை விவசாயத்தின் நன்மைகளைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார் முன்னோடி இயற்கை விவசாயி வெள்ளைச்சாமி.
வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்துப் பேசிய வேளாண் அலுவலர் சின்னசாமி, ‘‘வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு முதல் தேவை ஆர்வம். அதுவே உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தரும்’’ என்றவர் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்களைக் கற்றுத்தந்தார்.
இறுதியாக, ‘‘வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கு முன்பாக, நீங்கள் அமைக்கும் இடத்தில் என்ன பயிர் செய்யப்போகிறோம், எந்த முறையில் வளர்க்கப் போகிறோம் போன்ற முடிவுகளை இறுதி செய்துகொண்டு வேலையில் இறங்குவது அவசியம்’’ என்ற ஆலோசனையுடன் ஆரம்பித்த வீட்டுத்தோட்ட ஆலோசகர் கனகராஜ்-கிருத்திகா தம்பதி, வீட்டுத் தோட்டம் அமைப்பதில் உள்ள சிக்கல்கள், நுணுக்கங்கள் ஆகியவற்றை படக்காட்சிகள் மூலம் விளக்கினார்கள்.
ஆர்.குமரேசன்
படங்கள்: வீ.சிவக்குமார்