மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி!

மண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி!

‘வீடு’ங்கிற பேருக்கு தமிழ் மொழியில, ‘சொர்க்கம்’னும் ஓர் அர்த்தம் இருக்கு. சமீபகாலமா வீட்டுல காய்கறித் தோட்டம் வளர்க்கிறது பத்தின விழிப்பு உணர்வு அதிகரிச்சுக்கிட்டு வருது. வீட்டுத் தோட்டம்னு சொன்னவுடனே, டவுன் பக்கம், நிலம் இல்லாதவங்க ஆசைக்கு கத்திரிக்காயும், தக்காளியும் விளைய வைக்கிற சங்கதினு நினைச்சிடாதீங்க. கிராமத்துல உள்ளவங்களுக்கும் வீட்டுத் தோட்டம் (புறக்கடைத் தோட்டம்) பொருந்தும்.

ஒரு குடும்பத்துக்கு என்னதான் பத்து ஏக்கர், இருபது ஏக்கர் நிலம் இருந்தாலும், அந்த வீட்டுல இருக்கிற பாட்டிங்க, வீட்டை ஒட்டி இருக்கிற புறக்கடையில, அவரை, பூசணினு விதவிதமா காய்கறிகளைப் போட்டு அசத்துவாங்க. அப்படி தோட்டம் போட்டு அசத்துன, தாத்தா, பாட்டிங்க தொண்ணூறு வயசானாகூட, கண்ணாடி போடாம நடமாடுவாங்க. தாத்தாங்க தினமும் பத்து கிலோ மீட்டர் தூரம் நடந்தோ, சைக்கிள் மிதிச்சோ, அசால்ட்டா போயிட்டு வருவாங்க.

மண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி!

இப்படி ஆரோக்கியமா அவங்க வாழ்ந்த வாழ்க்கைக்குப் பின்னாடி வீட்டுத் தோட்டமும் இருக்குங்க. இப்பல்லாம், நாப்பது வயசுக்குள்ள, +4 வெள்ளெழுத்துக் கண்ணாடி, மாட்டிக்கிட்டும் செல்போன்ல மிஸ்டு கால் பார்த்து ரத்தம் தளதளனு கொதிக்கிறதும் சாதாரணமா இருக்கு. கண்பார்வை சரியில்லையா, கண்ணாடி போடுங்க, கூடவே இங்கிலீஷ் காய்கறியை, குறிப்பா கேரட்டை அடிக்கடி சாப்பிடுங்கங்கிற ஆலோசனையைக் கேட்டிருப்போம்.

ஆனா, பல நூறு வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த, ‘தேரையர் சித்தர்’, ‘இந்த மாதிரி விஷயத்துக்கு வீட்டுத் தோட்டத்துலேயே மருந்து இருக்குடா படவா’னு பாட்டா பாடி வைச்சிருக்காரு.

‘சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும் பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையாவெண்முதிரைப் பிஞ்சாம் விதி’

அதாவது, பித்தத்தினால் உண்டாகும், ‘கண்சூடு’, ‘கண்பார்வை மங்கல்’ போன்ற கண் பாதிப்புகளுக்கு, அவரைக்காய்ப் பிஞ்சு வாரம் ரெண்டு தடவை சாப்பிட்டா, பித்தம் குறைஞ்சு, கண் நரம்புகள் குளிர்ச்சியாகி, மங்கிய பார்வை தெளிவடையுமாம். அவரைக்காயை அடிக்கடி சாப்பிட்டா, வெள்ளெழுத்துக் குறைபாடுங்க நீங்குமாம். 

அவரைக்காயில, ‘பீட்டா கரோட்டின் சத்து’ நிறைய இருக்குதாம். அதனாலதான் கண் குறைபாட்டை நீக்குதுனு நவீன மருத்துவத்துல கண்டுப்புடிச்சு சொல்லியிருக்காங்க. ஆக, தேரையர் சித்தர் சொல்லியிருக்கிற விஷயம், நூத்துக்கு நூறு உண்மைனு தெளிவாயிடுச்சு. கூடவே, நம்ம தாத்தா, பாட்டிங்க கண்ணாடி போடாம இருந்ததுக்கு அவரைக்காய்ப் பிஞ்சுக்கும் பங்கு அதிகம்னு தெளிவா தெரியுது.

கூடவே, அவரைக்காயில இன்னும் பலவிதமான சத்துக்கள் இருக்கிறதா கண்டுபுடிச்சிருக்காங்க. புஸ், புஸ்னு கோபப்படுறவங்களோட ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தற சக்தி, அவரைக்காயில இருக்குதாம். சில பசங்க, என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும், எலும்பும், தோலுமா இருப்பாங்க. இந்தப் பசங்களுக்கு அவரைக்காய் சாப்பிட்டா, உடம்புல சத்து சேர்ந்து, புஷ்டியா ஆயிடுவாங்களாம்.

அந்தக் காலத்துல, காட்டுல தவம் இருக்கிற முனிவருங்களும் சரி, வீட்டுல விரதம் இருக்கிற மக்களும் சரி, விரதத்தை முடிக்கிறப்ப.... அவரைக்காய் கூட்டணியோடதான் சாப்பிடுவாங்களாம். ஏன்னா, விரதம் இருந்த களைப்பைப் போக்கி, உடம்புக்கு உற்சாகத்தைக் கொடுக்குதாம் அவரைக்காய்.

அடுத்து, வீட்டுத்தோட்டத்துல இடம் பிடிச்ச கொடி, பரங்கிக்காய். மார்கழி மாசம், வாசல்ல கோலம் போட்டு, பூ வைக்கிறதோட முடிஞ்சு போற சங்கதி கிடையாது. இன்னைக்கு வீட்டுக்கு, வீடு நீரிழிவுனு சொல்ற, சர்க்கரைச் சத்து குறைபாடு உள்ளவங்க இருக்காங்க. வீட்டுத் தோட்டத்துல பரங்கியை வளர்த்த காலத்துல, நீரிழிவுங்கிற வார்த்தை கூட, அந்த வீட்டுக்குள்ள எட்டிப் பார்த்திருக்காது. பரங்கிக் காயில, துத்தநாகச்சத்து நிறைய இருக்குதாம். இந்த துத்தநாகச்சத்து, இன்சுலின் சுரப்பிகளைத் தூண்டிவிடுற வேலைகளைச் செய்யுதாம். இதனால, பரங்கிக்காய் சாப்பிட்டுக்கிட்டு வர்றவங்களுக்கு  நீரிழிவுப் பிரச்னை வராதுனு தமிழ் மருத்துவம் சொல்லுது. உடம்பை உற்சாகமா வைச்சுக்க, மூளையை சுறுசுறுப்பா வெச்சி பரங்கிக்காயும், பரங்கி விதையும் உதவி செய்யுது. வடஇந்திய இனிப்பு வகையில, பரங்கிக் காய்க்கும், பரங்கி விதைக்கும் முக்கிய இடம் உண்டு.

ஆக, வீட்டுத்தோட்டத்துல வளர்த்த அவரையும், பரங்கியும் வெறும் காய்கறி மட்டுமில்லீங்க. நமக்கு மருந்தாகவும் இருந்திருக்கு. அதனாலதான், காலம்காலமா வீடுதோறும், இந்த ரெண்டு காய்கறிச் செடிகளையும் வளர்த்திருக்காங்க. இந்தச் செடிகளை, அதிகமா நோய், நொடியும் தாக்காது. அப்படியே ஏதாவது, எட்டிப்பார்த்தாலும் அடுப்புச் சாம்பலையும், வேப்பம் பிண்ணாக்கையும் தூவிவிட்டு சிறப்பா வீட்டுத் தோட்டத்தை வளர்த்தாங்க.

ஓவியம்: ஹரன்