நாட்டு நடப்பு
Published:Updated:

பேரணைகள் வேண்டாம்... குளங்களே போதும்!

நர்மதாவில் பாடம் படித்த நீர்க்கொள்கை ராமசாமி

‘‘கோடிக்கணக்கில் செலவு செய்து, கட்டப்படும் அணைகளைவிட, உள்ளூர் மக்களை வைத்து வெட்டப்படும் குளங்கள்தான் சிறந்தவை. இதுதான் உடனடியான தேவையைப் பூர்த்தி செய்யும், இயற்கைச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது’’ என பாரம்பர்ய அறிவைக் கண்டுணர்ந்த ‘இந்திய நீர்க்கொள்கையின் பிதாமகன்’ ராமசாமி அய்யர், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, இயற்கை எய்தினார். இவர், அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் இருந்தவர். ஆரம்ப கட்டத்தில் அரசு இயந்திரத்தின் ஒரு பாகமாகவே இயங்கியவர்! இப்படிப்பட்டவரின் கவனம், பாரம்பர்யத்தின் பக்கம் திரும்பியது... ஆச்சர்யமே!

ராமசாமியின் பணிகள்... ‘சம்பளம் கிடைக்கிறது; வசதி, வாய்ப்புகள் கிடைக்கின்றன; வெளிநாட்டுக்கு இலவசச் சுற்றுலா சென்று வரமுடிகிறது; கிம்பளமும் கிடைக்கிறது பிறகென்ன?’ என்றபடி கார்ப்பரேட் மூளைகள் மற்றும் அரசியல்வாதிகள் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு செயல்படும் அதிகார வர்க்கத்துக்கெல்லாம் கொடுக்கப்பட்ட பிரம்படி!

பேரணைகள் வேண்டாம்... குளங்களே போதும்!

ராமசாமி, 1929-ல் பிறந்தவர். இவரின் சொந்த ஊர், தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள (அப்போதைய திருவிதாங்கூர் பகுதி) தக்கலை. இவருடைய தந்தை, பிரிட்டிஷ் அரசின் ஊழியராக இருந்ததால், இடமாற்றத்தின் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை மும்பையில் முடித்தார். பிறகு, இந்தியத் தணிக்கை மற்றும் கணக்கியல் (IAAS) அதிகாரியாகத் தேர்வானார். மத்திய அரசின் வேளாண்மை, நிதி, எஃகு மற்றும் சுரங்கம், வேதிப்பொருட்கள் மற்றும் உரம், ரயில்வே ஆகிய அமைச்சகங்களில் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவிலிருக்கும் இந்திய மிஷன்களுக்கான தணிக்கை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் மத்திய நீராதாரங்கள் அமைச்சகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்ற இவர், 1987-ல், இந்தியாவின் முதல் ‘தேசிய நீர்க்கொள்கையை, உருவாக்கினார்!

இவர் உருவாக்கிய அந்தக் கொள்கை, பெரிய அணைகளையும், நதிநீர் இணைப்பையும் தீவிரமாக ஆதரிப்பதாக இருந்தது. குஜராத் மாநிலத்தில் பாயும் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்படவிருந்த சர்தார் சரோவர் அணைக்கு, அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் செயலாளராக இருந்த டி.என்.சேஷன் உதவியுடன், ஒப்புதலைப் பெற்றுத் தந்ததும் ராமசாமிதான். ஆனால், பெரிய அணைத் திட்டங்களுக்கு ஆதரவாக இருந்த அவரைக் கொண்டே இயற்கைத் தன்னுடைய பாரம்பர்ய விளையாட்டைத் தொடங்கியது.

‘நர்மதா நதியில் சர்தார் சரோவர் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அந்தப் பகுதியில் வாழும் பழங்குடிகள், கிராம மக்கள் மற்றும் விலங்குகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இது சுற்றுச்சூழல் ரீதியிலும் கடுமையான தீமைகளை ஏற்படுத்தும்’ என்று கூறி மண்ணின் மைந்தர்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தனர். இதையடுத்து, அந்தத் திட்டத்திலிருந்து வெளியேறியது உலக வங்கி. ஆனாலும், இந்திய அரசு அந்தத் திட்டத்தை கைவிடுவதாக இல்லை.

1993-ம் ஆண்டு, ‘நர்மதாவைப் பாதுகாப்போம்’ (நர்மதா பச்சாவோ அந்தோலன்) இயக்கத்தினர் மும்பையில், அந்தத் திட்டத்தைக் கைவிடச் சொல்லி, 14 நாள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், அரசு மனமிரங்கவில்லை. வேறு வழியின்றி, ஆகஸ்ட் 3-ம் தேதியன்று நர்மதா ஆற்றில் இறங்கி உயிரைவிடும் (ஜல சமர்ப்பணம்) போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து விஷயத்தை ஆறப்போடும் வகையில், திட்டத்தை ஆய்வு செய்வதற்காக 5 நபர் குழுவை அமைத்தது அரசு. ராமசாமியும் அந்தக் குழுவில் இடம் பெற்றார்.

பேரணைகள் வேண்டாம்... குளங்களே போதும்!

விவசாயிகள், பழங்குடிகள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்ததுடன், பாதிப்புக்குள்ளாகப் போகும் கிராமங்களில் கள ஆய்வையும், இக்குழு மேற்கொண்டது. இதற்குப் பிறகு, ராமசாமியின் நிலைப்பாடு முற்றாக மாறியது. சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் ஆகிய அனைத்து அடிப்படைகளிலும் சர்தார் சரோவர் அணைத்திட்டம் தேவையற்ற ஒன்று என்ற முடிவுக்கு வந்தார். அந்தக் குழுவிலிருந்த மற்ற உறுப்பினர்களுக்கும் அதைப் புரியவைத்தார். சர்தார் சரோவர் திட்டத்தை எதிர்த்த இந்த ஐவர் குழுவின் அறிக்கை, இன்றளவும் பேசப்படும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

பிறகு, 96-ம் ஆண்டு தெஹ்ரி ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற போதும், 97-ம் ஆண்டு அணைகளுக்கான உலக கமிஷனின், இந்திய ஆய்வை வழிநடத்திய போதும், பெரிய அணைகளுக்கான எதிர்ப்பு அவர் மனதில் வேரூன்றி நிலைபெற்றது.

இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையிலான நீர்ப்பங்கீடு, காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறுப் பிரச்னைகளை நுணுக்கமாக ஆராய்ந்து, தன் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்தார். நீர் மேலாண்மையில், தொழில்நுட்பப் பொறியியல் அறிவை விட, பாரம்பர்ய அறிவே சிறந்தது என்பதை நேரடியாக உணர்ந்த அவர், இதை பிறருக்கும் எடுத்துரைத்தார். இத்தகைய தன்னலமற்ற தன் பணிகளால் களப்போராளிகளை மட்டுமல்லாமல், பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளையும் தன் பக்கம் ஈர்த்தார்.

நீர்க்கொள்கையில் இவருடைய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு, கடந்த ஆண்டு இவருக்கு பத்ம விருது (அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு) வழங்கியது. பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, டெல்லியில் உள்ள கொள்கை ஆய்வு மையத்தில் (CPR) கௌரவப் பேராசிரியராக இயங்கினார். நீர்க்கொள்கை சார்ந்த பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான நூல்களை எழுதியுள்ளார்.

கடைசியாக அவர் எழுதிய ‘வாழும் நதிகள், மரணிக்கும் நதிகள்’ (Living Rivers, Dying Rivers) என்ற நூல், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பாக, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியால், செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்பட இருந்தது. ஆனால், உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, புத்தக வெளியீட்டு விழா தள்ளி வைக்கப்பட்டது.

86 வயதிலும் நீர்க்கொள்கைக்காக மிகுந்த அர்ப்பணிப்போடு செயல்பட்ட ராமசாமி, செப்டம்பர் 9 அன்று தானும் இயற்கையோடு கலந்துவிட்டார்.

நீர்ப்பாசனம் பற்றி ராமசாமி வழங்கிச் சென்ற ஆலோசனைகளில் சிலவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்

க.சரவணன்