நாட்டு நடப்பு
Published:Updated:

உழவாளி

ஊழல் பெருச்சாளிகளை சுளுக்கெடுக்க வருகிறான்...

ஆத்மா திட்ட அலங்கோலம்!

த்திய, மாநில அரசுகளின் கூட்டுமுயற்சியால் விவசாயிகள் மேம்பாட்டுக்காகச் செயல்படுத்தப்பட்டு

உழவாளி

வரும் ஆத்மா திட்டத்தில், நடக்கும் முறைகேடுகள் குறித்து தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர்கள் ஆத்மா திட்ட அதிகாரிகளின் அத்துமீறல்களைத் தோலுரித்துக் காட்டியதை கடந்த இதழில் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக நம்மிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட பாசனத்துறைத் தலைவர் வின்ஸ் ஆன்றோ, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில், உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒன்றியத்துக்கு 22 பேர் வீதம் மொத்தம் 198 பேர் ஆத்மா குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், அதில் 20 பேர் கூட உண்மையான விவசாயிகள் கிடையாது. அத்தனை பேரும் நிலம் இல்லாத, விவசாயம் செய்யாத, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்தான். மாவட்டத்தில் சாகுபடிப் பரப்பும், விவசாயத்தின் மீதான ஆர்வமும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், விவசாயத்துறை சார்ந்த முடிவுகளை நிர்ணயம் செய்வதில் அதிகாரம் பெற்ற அமைப்பான ஆத்மா, அரசியல்வாதிகள் கையில் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

‘ஆத்மாவில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் குழுவில் விவசாயமே செய்யாத கட்சிக்காரர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் விதி மீறப்பட்டுள்ளது’ என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ஆர்.சவானிடம் புகார் கூறினோம். நிர்வாகிகளின் விவரங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லி ஆட்சியர், வேளாண் இணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

‘விவசாயம் செய்பவர்கள், ஆடு, மாடு, கோழி போன்ற வேளாண் துறையோடு இணைந்த தொழில் செய்து வருபவர்களை மட்டுமே ஆத்மா நிர்வாகிகளாக நியமித்திருக்கிறோம். இதில் விதிமுறைகள் மீறப்படவில்லை’ என்ற பதிலைச் சொன்னார், அப்போதைய மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பொன்னுகாத்த பெருமாள். இந்தத் திட்டத்தில் புகுந்து விளையாட வேண்டும் என்பதற்காகவே... ஒன்றுமே இல்லாதவர்களையும்கூட ஒரு ஆடு, ஒரு கோழி என வளர்ப்பதாகக் கணக்குக் காட்டி, விவசாயி என்கிற பெயரில் தில்லுமுல்லுகள் நடக்கின்றன. அப்படியென்றால், முழுமையாக விவசாயம் செய்பவர்களுக்கு என்னதான் மதிப்பு?” என்று ஆதங்கப்பட்டார்.

உழவாளி

இப்படி, விவசாயிகள் ஆத்மா திட்டம் குறித்த குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே இருக்க... அவற்றையெல்லாம் தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் ராஜேந்திரனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர், ஆத்மா திட்டத்தைக் கவனித்து வரும் வேளாண்மை துணை இயக்குநர் அண்ணாமலையத் தொடர்புகொள்ளச் சொன்னார்.

நாம் சொன்ன விவரங்களைப் பொறுமையாக கேட்டுக்கொண்ட துணை இயக்குநர் அண்ணாமலை, ‘‘ஆத்மா திட்டம், ஒரு நல்ல திட்டம். ஆத்மா திட்டத்தின் முக்கிய நோக்கமே விரிவாக்கமும், வலுப்படுத்துதலும்தான். மாவட்ட மற்றும் வட்ட அளவில் உள்ள அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்டு மிகச் சிறப்பாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்தான் திட்ட இயக்குநர். படிப்படியாக இணை இயக்குநர், இரண்டு துணைத்திட்ட இயக்குநர்கள், ஆட்சி மன்றக் குழுக்கள், ஆலோசனை விவசாயிகள், வட்டாரத் தொழில்நுட்பக்குழு மற்றும் ஆத்மா குழுக்கள் என பல அடுக்குகளில் பலர் இத்திட்டத்தில் பணியாற்றுகிறார்கள்.

ஆத்மா குழுக்கள்தான், தங்கள் தேவைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் மேல்மட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும். அக்குழுக்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்கேற்ற திட்டங்களையும் வகுத்துக் கொடுப்பதுதான் மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் பணி.

ஆத்மா குழுவிலுள்ள விவசாயிகள், தங்களுக்குத் தேவைப்படும் புதிய தொழில்நுட்பங்களையும், விவசாயம் பற்றிய தகவல்களையும் கேட்டால், அதை மறுக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்குக் கிடையாது. அதிகாரிகள் எங்களிடம்தான் தெரிவிக்க வேண்டும், நாங்கள் அதை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். புதிய விவசாயத் திட்டம் அல்லது புதிய தொழில்நுட்பமாக இருந்தால், மத்திய அரசு எங்களுக்குப் பரிந்துரைக்கும். நாங்கள் அதை உடனே செயல்படுத்துவோம். இப்படித்தான் இதுவரை நடந்து வந்திருக்கிறது. மறைமுகமாக நடக்க ஏதுமில்லை.

ஆத்மா திட்டத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. இத்திட்டத்தில், ‘பசுமைச் சுற்றுலா’ சென்று வந்த விவசாயிகள் குறை கூறுவதை நம்ப முடியவில்லை. பசுமைச் சுற்றுலா சென்று வந்தவுடன் அந்தந்த திட்ட இணை இயக்குநர்கள் மூலம் சென்றுவந்த இடங்கள், பங்கேற்ற விவசாயிகள் பற்றிய தகவல்கள் மத்திய அரசின் இ.ஆர்.எம்.எஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பங்கேற்ற விவசாயிகளுக்கு அந்த வலைதளத்தின் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்படும். அதைப்பற்றியும் தங்கள் மதிப்பீடுகள் மற்றும் குறைகளை மத்திய அரசுக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கலாம்.

இப்படித் திறந்த வகையில் செயல்பாட்டு முறைகள் உள்ளபோது இதை எப்படி விவசாயிகள் குறை சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. விருதுநகர் மாவட்ட இணை இயக்குநர் செண்பகராமன் எனக்கு எல்லா விவரங்களையும் கொடுத்துள்ளார். முதல் நாள் குளத்துப்புழா கால்நடைப் பண்ணை தொடங்கி, ஐந்தாம் நாள் கண்ணரா வாழை ஆராய்ச்சி நிலையம் சென்று வந்தது வரை எல்லா விவரங்களையும் எனக்கு அளித்துவிட்டார். 5 நாட்களுக்கான திட்டமும், செலவுகளும், விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் அப்போதே அனுப்பப்பட்டுவிட்டன. பசுமைச் சுற்றுலா என யாரையும் அழைத்துக்கொண்டு இன்பச்சுற்றுலா சென்றதில்லை. கேரளாவுக்குச் செல்லும்போது அங்கு இரவு நேரத்தில் யாராவது கோவிலுக்குப் போயிருக்கலாம். ஆத்மா திட்டத்தின் மூலம் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் மாதம் ஒருமுறை இயக்குநர் ஆய்வு செய்கிறார்” என்ற அண்ணாமலை

“ஆத்மா குழுவில் ஆளுங்கட்சி ஆட்கள், இணை இயக்குநர்களின் சொந்தக்காரர்கள் இருப்பதாக

உழவாளி

குற்றம்சாட்டுவதை ஏற்க முடியவில்லை. ஆத்மா திட்டத்துக்கு குழுத் தலைவர் என யாரும் கிடையாது. குழுவில் அனைவரும் உறுப்பினர்கள்தான். விவசாயிகள், ஆளுங்கட்சி ஆட்களாக இருக்கக்கூடாது என்பது என்ன நியாயம்?. விவசாயிகள் அல்லாத ஆளுங்கட்சி ஆட்கள், சொந்தக்காரர்கள் என யாரும் ஆத்மா குழுவில் இருக்க முடியாது.

விவசாயிகளுக்குள் உள்ள சில கருத்து வேறுபாடுகளும் இதற்கு காரணம். தங்களுக்குப் பிடிக்காத ஒருவர் அந்த குழுவில் பங்கேற்கும்போது அவர் மீது குற்றம்சாட்டுகிறார்கள். இதையெல்லாம் விட திட்டத்தில் செயல்படும் அதிகாரிகள் அவரவர்களுக்கு வழங்கப்படும் செல்போன்களுக்கும், சிம் கார்டுகளுக்கும் குறிப்பிட்ட அளவுதான் பணம் வழங்கப்படும். அவர்கள் உபயோகப்படுத்தும் கணினிக்கும் அவர்கள்தான் முழுப்பொறுப்பு. வேளாண்மைத்துறை இந்த விஷயத்தில் எந்த வித சலுகையும் அளிக்காது. அதற்கு மேல் அதிகாரிகள் செலவு செய்தால் அவர்களிடம் வசூலிக்கப்படும். இந்தத் திட்டத்தைப் பற்றிய புகார்கள் ஏதேனும் இருப்பின் பதிவுத் தபால் மூலம் இயக்குநருக்கு நேரடியாக அனுப்பலாம். 044 -25673305 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் சொல்லலாம். புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். 

அனைத்தையும் அண்ணாமலை மறுத்தாலும்... ஆத்மா திட்ட முறைகேடுகள் குறித்து ஆதாரப்பூர்வமாக நாம் எடுத்து வைத்த தகவல்கள் இதுவரை உறக்கத்தில் இருந்த அதிகாரிகளை உலுக்கி எழுப்பி இருக்கிறது என்பதே உண்மை.

சில நேர்மையான அதிகாரிகள், ‘திட்டங்களைச் செயல்படுத்தும்போது, கவனமாகவும், நேர்மையாகவும் செயல்படுங்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததைக் கூட தோண்டி பார்க்கிறது, பசுமை விகடன். நீங்கள் ஏதாவது தவறு செய்து எங்களைச் சிக்க வைத்து விடாதீர்கள்’ என தங்களுக்கு அடுத்த நிலை அதிகாரிகளுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

ஆத்மா முறைகேடு ஒரு சோறு பதம்தான். இன்னும் பல திட்டங்களில் நடந்து வரும் முறைகேடுகள், அடுத்தடுத்து அணிவகுக்கும்.

வேட்டை தொடரும்...

ஓவியம்: ஹரன்

உங்கள் பகுதிக்கும் உழவாளி வர வேண்டுமா?

உங்கள் பகுதியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் அலட்சியங்களையும் அட்டூழியங்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். ‘உழவாளி’ உங்கள் ஊருக்கு வந்து உண்மை நிலையை விசாரித்து, அவற்றை உலகறிய செய்வான். உங்கள் பகுதி பிரச்னைகளை 044-66802927 என்ற எண்ணில் அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, செய்யும் தொழில், ஊர் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைக் கூறி, உங்கள் பிரச்னைகளைச் சொல்லுங்கள். உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் விரும்பினால் ரகசியமாக வைக்கப்படும். அதேசமயம், உழவாளியின் வேட்டையும் ஆரம்பமாகிவிடும்.