‘‘ஆறே மாதத்தில் நிலத்தை வளமாக்கலாம்..!’’
பசுமைவிகடன், பாண்டியன் கிராம வங்கி மற்றும் வீரபண்டிய கட்டபொம்மன் நபார்டு உழவர் மன்றம் ஆகியவை இணைந்து... கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி, தூத்துக்குடி, பாலுராணி மஹாலில் ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கை நடத்தின.
இந்தக் கருத்தரங்கில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சென்னை, சேலம், தஞ்சாவூர், கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை, கோயம்புத்தூர்... எனப் பல மாவட்டங்களில் இருந்து சுமார் 250 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நீருக்காகவும் சோறுக்காவும் போர்!
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய பாண்டியன் கிராம வங்கியின் சேர்மன் எஸ்.கார்த்திகேயன், “அந்தக் காலத்துல நோய்நொடினா என்னனே தெரியாது. ஆனா, இப்போ பிறந்த குழந்தைக்குக் கூட நோய். எல்லாத்துக்கும் காரணம் நம்மளோட உணவுமுறைதான். இருபது முப்பது வருஷத்துக்கு முன்னயெல்லாம் இயற்கையில விளைஞ்ச காய்கறிகள், நெல் வகைகளைச் சாப்பிட்டு 90 வயசு வரைக்கும் கல்லு மாதிரி திடமா இருந்தாங்க. ஆனா, இப்போ 50 வயசுக்குள்ள நாடி, நரம்பு தளர்ந்துடுது. இனியும், ரசாயன உரம் போட்டு செய்யுற விவசாயம் நீடிச்சா, நீருக்காகவும் சோறுக்காகவும் நிச்சயம் உலகப்போர் மூளும். விவசாயிகள் நஞ்சில்லாத உணவை மக்களுக்குக் கொடுத்தா, அது உங்க ஏழு தலைமுறைக்கும் கோடி புண்ணியத்தைச் சேர்க்கும்” என்றார் உணர்ச்சிகரமாக.
மண்வளத்தால் அதிகரிக்கும் மகசூல்!
“மண்ணை வளமாக்கினால்தான் மகசூல் அதிகரிக்கும். இது வரைக்கும் ரசாயனம், பூச்சிக்கொல்லி தெளித்து விவசாயம் செய்துட்டோமே, காலம் காலமா ரசாயனம் போட்ட நிலத்துல எப்படி இயற்கை விவசாயம் செய்யுறது... நிலத்தை எப்படி வளமா மாத்துறது?னு யாரும் கவலைப்படத் தேவையில்லை. மூணு தடவை பலதானிய விதைப்பு செஞ்சு மூடாக்கு போட்டாலே ஆறே மாதத்தில் நிலம் முழுமையாக வளமேறிடும்” என்று செயற்கையிலிருந்து இயற்கைக்கு மாறும் விவசாயிகளுக்கு ஆலோசனை சொன்னதோடு, இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகளை விவசாயிகளுக்கு விளக்கினார், இயற்கை விவசாய ஆலோசகர் ஏகாம்பரம்.

‘இயற்கை விவசாயத்தின் தேவை’ குறித்து நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் விஜயபாண்டியன் விளக்கிப் பேசினார்.
‘விவசாயத்தில் பூச்சிகளின் தேவை’ என்ற தலைப்பில் கோவில்பட்டி மண் ஆராய்ச்சி நிலைய வேளாண் அலுவலர் நீ.செல்வம், ‘கால்நடைகளுக்கான மூலிகை வைத்தியம்’ குறித்து ‘சேவா’ விவேகானந்தன், ‘வங்கிக் கடனுதவி திட்டங்கள்’ குறித்து பாண்டியன் கிராம வங்கி மண்டல மேலாளர் சுப்பையா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். காலையில் பதநீரும், மதியம் பாரம்பர்ய இயற்கை அரிசி உணவும், மாலையில் சுவையான சிற்றுண்டியும் வழங்கப்பட்டன. இறுதியாக வீரபாண்டிய கட்டபொம்மன் நபார்டு உழவர் மன்ற செயலாளர் சண்முகமல்லுச்சாமி நன்றி கூறினார். விவசாயிகளின் அனுபவப் பகிர்வோடு பயிற்சி நிறைவுபெற்றது.
இ.கார்த்திகேயன், மா.கிருத்திகாதேவி
படங்கள்: ஏ.சிதம்பரம்