நாட்டு நடப்பு
Published:Updated:

நீங்கள் கேட்டவை: முறிந்த மா மரம், காய்க்குமா..?

நீங்கள் கேட்டவை: முறிந்த மா மரம், காய்க்குமா..?

‘‘டிரைக்கோ டெர்மா விரிடியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமா, குறைந்த விலைக்கு எங்கு

நீங்கள் கேட்டவை: முறிந்த மா மரம், காய்க்குமா..?

கிடைக்கும்?’’

ஏ.நாராயணன், உடுமலைப்பேட்டை.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் செயல்பட்டு வரும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் இளந்தென்றல் சுய உதவிக் குழுத் தலைவி ஏஞ்சல் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை: முறிந்த மா மரம், காய்க்குமா..?

‘‘அந்தக் காலத்தில், தடுப்பூசிகளின் பலன் தெரியாது. இதனால், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடாமல் இருந்தார்கள். அதனால், அதன் பாதிப்புக்களை உணர்ந்தார்கள். ஆனால், இப்போது, அரசு மருத்துவமனையில் தடுப்பூசி கிடைக்காவிட்டால், பணம் கொடுத்து ஊசிப் போடுகிறோம். டிரைக்கோ டெர்மா விரிடியும், விவசாயத்துக்கான தடுப்பூசி போலத்தான். டிரைக்கோ டெர்மா விரிடி, என்பது பயிர்களுக்கு நன்மை செய்யும் உயிர்ப் பூஞ்சணம். இது வேர்களில் வளர்ந்து, கெடுதல் செய்யும் பிற பூஞ்சணங்களை வளராமல் தடுத்துவிடும்.

பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களைக் கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மண்ணில் உள்ள மட்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மட்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிகரிக்கிறது. இதை அடியுரமாகப் போடலாம், விதைநேர்த்தி செய்யலாம், தண்ணீரில் கலந்து ஊற்றலாம்.

நீங்கள் கேட்டவை: முறிந்த மா மரம், காய்க்குமா..?

ஏக்கருக்கு 3 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி போதுமானது. இந்த 3 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடியை 20 கிலோ மட்கிய தொழு எரு அல்லது மண்புழு எருவில் கலந்து நிழலில் ஒரு வாரம் வைத்திருந்து, பயிருக்குப் போடலாம். இதனால், டிரைக்கோ டெர்மா விரிடி பல மடங்கு பெருகியிருக்கும். அவ்வப்போது, இந்தக் கலவையில் தண்ணீர் தெளித்து ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். டிரைக்கோ டெர்மா விரிடி தயாரிப்பதற்காக, எங்கள் குழுவில் உள்ள பெண்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முறையாகப் பயிற்சி எடுத்துக் கொண்டோம். பெரிய நிறுவனங்கள் ஒரு கிலோ டிரைக்கோ டெர்மா விரிடியை 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். நாங்கள் 80 ரூபாய்க்கு கொடுத்து வருகிறோம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 98423-02947.

‘‘எங்கள் வீட்டில் 29 வயது கொண்ட மா மரம் உள்ளது. சூறாவளி காற்றால் அதன் கிளைகள் முறிந்துவிட்டன. சில துளிர்கள், துளிர்த்து வருகின்றன. மீண்டும் எங்கள் மரம் காய்த்துக் குலுங்க வழிசொல்லுங்கள்?’’

ஆர்.கஜலட்சுமி, அம்பத்தூர்.

நீங்கள் கேட்டவை: முறிந்த மா மரம், காய்க்குமா..?

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மா விவசாயி தி. அங்கமுத்து பதில் சொல்கிறார்.

‘‘உங்களது மா மரம் சூறாவளிக் காற்றால் முறிந்து விட்டதற்கு வருத்தப்பட வேண்டாம். மிகுந்த மகிழ்ச்சி கொள்ளுங்கள். காரணம், முன்பு அந்த மரத்தில் ஒரு ரகத்தின் காய்கள் கிடைத்திருக்கும். இப்போது, அந்த மரத்தில், நீங்கள் விரும்பும் 30 மா ரகங்களைக் கூட உருவாக்க முடியும். இதற்கு ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் ஏக்கர் கணக்கில் மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முக்கிய பிரச்சனை உருவாகும். அதாவது, மா மரங்கள் நடவு செய்யும் போது, எந்த ரகம் நல்ல லாபம் தரும் என்று யோசிக்காமல் நடவு செய்து விடுவார்கள். அவை ஐந்து ஆண்டு காலம் வளர்ந்த பிறகுதான், இந்த ரகத்தைக் காட்டிலும், அந்த ரகத்தை வைத்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரியும். உடனே, அவசரப்பட்டு மரங்களை வெட்டி விட்டு, புதிய கன்றுகளை நடவு செய்ய வேண்டியதில்லை. இப்படிச் செய்தால் பணமும் காலமும்தான் விரயம் ஆகும். ஏற்கெனவே, வளர்ந்துள்ள நீலம், பெங்களூரா... மரங்களை வெட்டி அகற்றாமல், அல்போன்சா, பங்கனப்பள்ளி... என்று எந்த ரகத்தை வேண்டுமானாலும், அவற்றில் ஒட்டுக் கட்டிக் கொள்ளலாம்.

நீங்கள் கேட்டவை: முறிந்த மா மரம், காய்க்குமா..?

மா மரங்களில் ஒட்டுக்கட்ட  பருவமழை பெய்யும் மாதங்களான ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் ஏற்ற மாதங்கள். மரத்தை முழுவதும் மொட்டையடிக்காமல் சில கிளைகளை மட்டும் வெட்டி, அதில் ஒட்டுக் கட்டுவது நல்லது. நர்சரி நடத்துபவர்களிடம், நம்முடைய தேவையைச் சொன்னால், மரத்தில் ஒட்டுக்கட்டிக் கொடுப்பார்கள்.’’

தொடர்புக்கு, செல்போன்: 97515-89280.

‘‘எங்கள் பண்ணையில் ஆடு, மாடுகள் உள்ளன. இவற்றுக்குக் காப்பீடு செய்ய விரும்புகிறோம். இதன் விவரங்களைச் சொல்லவும்?’’

கே.சந்திரன், வாடிப்பட்டி.

நீங்கள் கேட்டவை: முறிந்த மா மரம், காய்க்குமா..?

தி ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல வாடிக்கையாளர் பிரிவு அலுவலர் வி. பாஸ்கரன் பதில் சொல்கிறார்.

‘‘வழக்கமாக விவசாயக் கடன், பண்ணைக் கடன் போன்றவற்றை வழங்கும்போது, வங்கிகளே காப்பீடு செய்து தருவது கட்டாயமாகக் கடைபிடிக்கப்படுகிறது. மற்றபடி விருப்பம் உள்ளவர்கள் தங்களது கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய எந்தத் தடையும் இல்லை. இதற்காக வங்கிகளில் கடன் பெற்றிருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை.

ஆடுகளைப் பொறுத்தவரை, நான்கு மாத குட்டி தொடங்கி, ஏழு வயது கொண்ட பெரிய ஆடுகள் வரை காப்பீடு செய்யலாம். இதேதான் மாடுகளுக்கும் பொருந்தும். சம்பந்தபட்ட  கால்நடை நலமுடன் இருக்கின்றது என்று அந்தப் பகுதி கால்நடை மருத்துவரிடம் சான்று வாங்கித் தரவேண்டும் என்பது முக்கியம். ஓர் ஆண்டுக்குக் காப்பீட்டுத் தொகை ஆடு, அல்லது மாட்டின் விலையில் 4% என்ற அளவில்  வசூலிக்கப்படுகிறது. அதாவது, ஆட்டின் விலை ஆயிரம் ரூபாய் என்றால், ரூ.40 காப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் கேட்டவை: முறிந்த மா மரம், காய்க்குமா..?

காப்பீடு செய்யப்பட்ட ஆடு, மாடுகள் காதில் பிளாஸ்டிக் தோடு போடப்படும். இதில், சம்பந்தபட்ட ஆடு, மாடுகளைப் பற்றிய விவரங்கள் இருக்கும். ஒரு கால்நடைக்குக் காப்பீடு செய்யப்பட்டுவிட்டால், அந்த நிமிடத்திலிருந்தே விபத்து தொடர்பான மரணத்துக்கு இழப்பீடு கிடைக்கும். ஆனால், எதிர்பாராதவிதமாக நோய்வாய்ப்பட்டு இறக்கும்பட்சத்தில், காப்பீடு செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கவேண்டும். அன்றைய தேதியில் சந்தை விலை எவ்வளவு என்பதை கணக்கில் கொண்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். விவசாயி விருப்பப்பட்டால், மூன்று ஆண்டுகளுக்குக்கூட ஒரே நேரத்தில் காப்பீடு செய்யலாம். 50, 100 எண்ணிக்கையில் கால்நடைகளை மொத்தமாகக் காப்பீடு செய்தால், பிரீமியத்தில் தள்ளுபடியும் உண்டு. திருடு போன கால்நடைகளுக்கு இழப்பீடு கிடைக்காது.

நீங்கள் கேட்டவை: முறிந்த மா மரம், காய்க்குமா..?

தொடர்புக்கு, வாடிக்கையாளர் சேவை மற்றும் குறைதீர்க்கும் பிரிவு, ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் மண்டல அலுவலகம், 4-எஸ்பிளனேட், சென்னை- 108. செல்போன்: 98840-53859

புறா பாண்டி

படங்கள்: வீ.சிவக்குமார்

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.