பசுமை விகடன் வேளாண் கண்காட்சிப் பேச்சாளர்கள்...

‘பசுமை விகடன்’ சார்பாக ‘அக்ரி எக்ஸ்போ-2015’ என்ற மாபெரும் விவசாயக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு செப்டம்பர் 25 முதல் 28-ம் தேதி வரை ஈரோடு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடக்கிறது. இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு, தங்களுடன் உரையாட இருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகள் பற்றிய சிறு அறிமுகம் கடந்த இதழில் வெளியாகியிருந்தது. அதன் தொடர்ச்சி இங்கே...
26-ம் தேதி, மதியம்
‘புரிந்து கொண்டால், பூச்சிகளும் நண்பர்களே’
நீ.செல்வம், வேளாண் அலுவலர், கோவில்பட்டி மண்வள ஆராய்ச்சி நிலையம்: பூச்சிகளைக் கண்டு மிரண்டு போய் பூச்சிக்கொல்லிகளைக் கொட்டித் தீர்த்த விவசாயிகளிடம், பூச்சிகளைப் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்திய இவர், நம்மாழ்வாரால் அடையாளம் காணப்பட்டு விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விவசாய அலுவலர்களுக்கும் ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறைகள் குறித்து பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரத், முன்னோடி காய்கறி விவசாயி, உத்திரமேரூர்: எந்தெந்தப் பருவத்தில் எந்தெந்தப் பூச்சிகள் தாக்கும், அதை இயற்கையான முறைகளில் எப்படித் தடுப்பது போன்ற தகவல்களை விரல்நுனியில் வைத்திருக்கும் இளம் விவசாயி.
27-ம் தேதி, காலை
‘உழவன் உற்பத்தியாளர் கம்பெனியை அமைப்பதற்கான வழிமுறைகள்’
நல்லசாமி, தலைவர், உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், ஈரோடு: வேளாண் விற்பனைத் துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர். உழவன் உற்பத்தியாளர் குழுமம் அமையக் காரணமானவர்களில் முக்கியமானவர். ஈரோடு மஞ்சள் உற்பத்தியாளர் நிறுவனம், இன்றைக்கு இந்தியாவில் முன்மாதிரி நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. 7 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு ஈட்டுக் கடன் வழங்கியுள்ளது, இந்த நிறுவனம். விலை குறையும் காலங்களில் விவசாயிகளின் மஞ்சளை இருப்பு வைத்து, வங்கிகள் உதவியுடன் கடன் வழங்கி வருகிறது.
வெங்கடேசன், துணைத்தலைவர், உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், ஈரோடு: கொங்கு பொறியியல் கல்லூரியின் முன்னாள் தலைவர். ஈரோடு மஞ்சள் விவசாயிகளுக்கான உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு, இடம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்து அதன் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறார். மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான உணவு குறித்த விழிப்பு உணர்வைக் கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
‘விளைபொருட்களுக்கேற்ற விற்பனை வாய்ப்புகளும், ஏற்றுமதி வாய்ப்புகளும்’
முனைவர்.ரவீந்திரன், ஏற்றுமதிச் சந்தை ஆலோசகர்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான இவர், ஏற்றுமதி மற்றும் சந்தை விற்பனை சார்ந்த வல்லுநர். அறுவடையாகும் விளைபொருளுக்கு என்ன விலை கிடைக்கும் என முன்னறிவிப்பு கொடுக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையத்தைத் தொடங்கியவர். தற்போது, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரா வேளாண்மைக் கல்லூரியின் விலை முன்னறிவிப்பு மையத்துக்கு ஆலோசகராக இருக்கிறார்.

27-ம் தேதி மதியம்
‘விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டும் மந்திரங்கள்’
முனைவர்.அழகுசுந்தரம், துணை இயக்குநர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், புதுடெல்லி: விளைவித்த பொருட்களை அப்படியே விற்பனை செய்வதை விட, அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதில் தமிழக விவசாயிகளின் கவனத்தைத் திருப்பியவர்களில் முன்னோடி. தஞ்சாவூரில் இயங்கி வரும் இந்திய பயிர்பதனத் தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் இயக்குநர். தமிழகம் முழுவதிலும் இருக்கும் விவசாயிகளுக்குப் பயிர்பதனத் தொழில்நுட்பக் கழகத்தின் பெயரைக் கொண்டு சேர்த்தவர். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இவரது பங்களிப்பைப் பாராட்டி, தேசிய சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது.

28-ம் தேதி காலை
‘கால்நடைகளுக்கு ஏற்ற வைத்திய முறைகள்’
முனைவர்.புண்ணியமூர்த்தி, தலைவர் மற்றும் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையம், தஞ்சாவூர்: 10 ஆண்டுகளுக்கு மேல் மரபு சார்ந்த கால்நடை மூலிகை வைத்திய முறைகளை ஆய்வு செய்து வருபவர். இவருடைய மாணவர்கள், தமிழகம் கடந்து பல மாநிலங்களிலும் கால்நடை மருத்துவர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இவரின் மூலிகை வைத்திய முறைகள் தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் பண்ணையாளர்கள் பலரும் கடைபிடிக்கின்றனர். இவரது முயற்சியால் தற்சமயம் கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மூலிகை வைத்திய முறைகள் ஒரு பாடமாக மாறியுள்ளது.
28-ம் தேதி மதியம்
‘எனது வெற்றி அனுபவங்கள்’
ஜெயராமன், முன்னோடி விவசாயி, அபிநவம், சேலம் மாவட்டம்: ‘ஆற்றில் போட்டாலும் அளந்துப் போடு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, கணக்குப் போட்டு காரியத்தில் இறங்கினால், எதிலுமே கணிசமான லாபம்தான் என்பது இவரது வெற்றிச் சூத்திரம். ஒன்பது ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையம் செய்து வருகிறார். ‘அபிநவம் உழவர் மன்றம்’ மூலம் விவசாயிகளை முன்னேற்றம் அடையச் செய்து வருபவர். பாரம்பர்ய காய்கறி விதைகளைச் சேகரித்துப் பரவச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயக் குழுக்கள் இவரது பண்ணையில் பயிற்சி எடுத்துச் செல்கின்றன.

பரிமளா, முன்னோடி விவசாயி, முத்தூர், காங்கேயம்: ஆடு, மாடு, கோழி, பட்டுவளர்ப்பு, நெல், மஞ்சள் என ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொண்டு வரும் இவர், நம்மாழ்வாரின் மாணவி. விவசாயிகளின் வாழ்வியலை நையாண்டிச் சாட்டையில் விளாசித் தள்ளும் எதார்த்தவாதி.
லோகநாதன், முன்னோடி விவசாயி, ஈரோடு: ஜீரோ பட்ஜெட் முறையில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயி. சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், தனது வீட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்கான பயணத்துக்கு குதிரை வண்டியைப் பயன்படுத்தி வருபவர்.

வெற்றி விவசாயிகள் சந்திப்பு...!
கண்காட்சி அரங்கில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, இடுபொருட்கள் தயாரிப்பு ஆகியவைப் பற்றி, முன்னோடி விவசாயிகள் உங்களுடன் உரையாட காத்திருக்கிறார்கள். வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்துவரும், அனுபவங்களையும், தொழில்நுட்பங்களையும் இவர்களிடம், நேருக்கு நேர் பேசி நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
