நாட்டு நடப்பு
Published:Updated:

மரத்தடி மாநாடு: ஐவர் குழு ரத்து...

கொந்தளிப்பில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர் முழுக்க ஆங்காங்கு போட்டி போட்டுக்கொண்டு விநாயகர் சிலைகளை வைத்து 16 வகை அபிஷேகம், 21 வகை அபிஷேகம் என நடந்துகொண்டிருக்க... ஊரே களைகட்டி இருந்தது. ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி இருவரும் வேடிக்கை பார்த்தபடியே வீதியில் நடைபோட்டுக் கொண்டிருக்க... சீக்கிரமே வியாபாரம் முடிந்துவிட்டதால், தானும் அவர்களோடு சேர்ந்து கொண்டார் ‘காய்கறி’ கண்ணம்மா. அப்படியே தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

அப்போது ஒரு கதையை வாத்தியார் ஆரம்பிக்க... மாநாடும் ஆரம்பமானது.

“ஒரு முதலாளி, நிலம் முழுக்க தென்னங்கன்னுகளை நடலாம்னு முடிவு பண்ணி ரங்கன்கிற ஆள்கிட்ட குழி எடுக்கிற வேலையைக் கொடுக்கிsriறார். இந்த வாய்ப்பு கிடைக்கவும் நல்லா உழைச்சு நிறைய சம்பாதிக்கணும்னு முடிவு பண்ணி, குழிகளைத் தோண்ட ஆரம்பிச்சார், ரங்கன். முதல் நாளே இருபது குழி தோண்டுறார். முதலாளி அவரைப் பாராட்டுறார். ரெண்டாவது நாள் இருபத்தஞ்சு குழி எடுக்கிறார். அதுக்கப்பறம் பார்த்தா கொஞ்சம் கொஞ்சமா குழிகளோட எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சது. இருபதாம் நாள் பார்த்தா அஞ்சு குழி கூட எடுக்க முடியல.

மரத்தடி மாநாடு: ஐவர் குழு ரத்து...

குழம்பிப்போன முதலாளி, ரங்கனோட மண் வெட்டியை வாங்கிப் பார்க்கிறார். அது முனை மழுங்கிக் கிடந்திருக்கு. அதனாலதான் குழி எடுக்க முடியலைனு புரிஞ்சுக்கிட்டவர், ‘ஏன் இதை நீ தீட்டலை?’னு கேக்கிறார். ‘அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை முதலாளி. நாள் முழுக்க உழைச்சு காசு சேர்க்கணுங்கிறதுதான் என்னோட குறிக்கோள்’னு ரங்கன் சொல்றார்.

‘நாள் முழுக்க உழைக்க நீ தயாரா இருந்தாலும், உன்னோட மண்வெட்டி கூர்மையா இருந்தாத்தான் குழி எடுக்க முடியும். இல்லேன்னா உன் உழைப்புதான் வீணாகும்’னு முதலாளி சொல்றார். அப்போதான் ரங்கனுக்கு தன்னோட தவறு புரிஞ்சது’’ என்ற வாத்தியார்,

“இது மண் வெட்டிக்கு மட்டுமில்லை. நமக்கும்தான். உடல் உழைப்பு மட்டும் எப்போதும் போதாது. அப்பப்போ மனசையும் அறிவையும் கூர் தீட்டிக்கணும். இல்லாட்டி நாம உழைக்கிற உழைப்பு வீணாத்தான் போகும்” என்று சொல்லி முடிக்க, தோட்டத்துக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

வேலையாட்களுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு வந்த ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொன்னபடியே அமர, மற்ற இருவரும் தலையாட்டியபடியே அமர்ந்தனர்.

“பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டம் மூலமா கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள்ல இருக்கிற 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலத்துல பாசனம் நடக்குது. இதுக்காக ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே திருமூர்த்தி அணையில இருந்து தண்ணீர் திறந்து விட்டிருக்கணுமாம். செப்டம்பர் 12-ம் தேதிதான் திறந்து விட்டிருக்காங்களாம். இந்த ஒரு மடைப் பாசனம் மூலமா நாலாவது மண்டலத்துல இருக்கிற 94 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு தண்ணீர் கிடைக்குமாம். ஆனா, விவசாயிகளும், சில கம்பெனிக்காரங்களும் வாய்க்காலை ஒட்டி கிணறு தோண்டி தண்ணியை எடுக்கிறாங்களாம். இரவு நேரங்கள்ல வாய்க்கால்ல இருந்தே நேரடியா தண்ணியை உறிஞ்சி, எடுக்கிற வேலையும் நடக்குதாம்.. இதனால, கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் முழுமையா கிடைக்கிறதில்லையாம். விவசாயிகள் இதுபத்தி புகார் சொல்லவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பறக்கும்படை அமைச்சு கண்காணிக்கிறாங்களாம். ஆனால், அந்தப் படை என்ன பண்ணுதுங்கிறதுதான் ரகசியமா இருக்கு. ஏன்னா, திருட்டு குறைஞ்சபாடில்லையே” என்றார்.

“அடப்பாவிகளா, இப்படிக்கூடவா பண்ணுவாங்க” என்று வருத்தப்பட்டார், காய்கறி.

“இது ரொம்ப வருஷமா நடந்துக்கிட்டுதான் இருக்கு... இப்ப நடந்துகிட்டிருக்கிற இன்னொரு கொடுமை... எங்கூட்டுகொடுமை உங்கூட்டு கொடுமையில்ல... உலகக்கொடுமை” என்று பீடிகை போட்ட வாத்தியார்,

“ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரச் சொல்லி பல போராட்டத்துக்குப் பிறகுதான் அரசாங்கத்துக்கு உத்தரவு போட்டுச்சு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம். ஆனாலும் வேலைகள்ல சுணக்கம்தான். அதனால, இந்தப் பணிகளைக் கண்காணிக்கிறதுக்காக செப்டம்பர் 10-ம் தேதி, தமிழகச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் தலைவர் கல்யாணசுந்தரம், கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட ஐவர்குழுவை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் நியமனம் செய்தது. உடனே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வெடி வெடிச்சுக் கொண்டாடினாங்க. ஆனால், என்ன காரணமோ... ‘பணிச்சுமை காரணமாக, குழுவில் என்னால் இடம்பெற முடியாது’னு பசுமைத் தீர்ப்பாயத்துல தெரிவிச்சிருக்கார் கல்யாணசுந்தரம். இதுசம்பந்தமான வழக்கு செப்டம்பர் 14-ம் தேதி பசுமைத் தீர்ப்பாயத்துல விசாரணைக்கு வந்தப்போ, பொதுப்பணித்துறை சார்புல ஆஜரான வழக்கறிஞர் அப்துல் சலீம், ‘ஐவர் குழுவில் இருக்கிறவங்க அரசியல் பின்னணியில இருக்கிறதால தூர்வாரும் பணிகள்ல பாதிப்பு ஏற்படும். அதில்லாம, கல்யாணசுந்தரம் பின்வாங்குவதால், ஐவர் குழுவை ரத்து செய்ய வேண்டும்’னு சொல்லவும், அதை ரத்து செய்துடுச்சு பசுமைத் தீர்ப்பாயம். அதனால, கொந்தளிச்சுப்போய் இருக்கிற விவசாயிகள், இதுல ஏதோ உள்குத்து இருக்குதுனு சொல்லிக்கிட்டிருக்காங்க” என்றார்.

“பசுமைத் தீர்ப்பாயம் ஒரு குழுவை அமைக்குது. அரசாங்கத் தரப்புல எதிர்ப்பு சொன்னதும் கலைக்குது. இதுல என்ன உள்குத்து வேண்டிக் கிடக்கு. வெளிப்படையாத்தானே குத்துறாங்க... வேணும்னா, வெளிக்குத்துனு சொல்றதுதான் சரியா இருக்கும்” என்ற ஏரோட்டி, வேலை ஆட்களிடம் இருந்து அழைப்புவர, சட்டென்று எழுந்து சென்றார். அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

ஓவியம்: ஹரன்