மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'ஒரு நாள் விவசாயி!'

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

திருவாரூர் மாவட்டம், செம்பியநல்லூர் கிராமத்தில் உள்ள ‘தாய்மண் இயற்கை விவசாயப் பண்ணை’யில் ‘ஒரு நாள் விவசாயிகள்’ பயிற்சி பெற்றது குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழில்...

'ஒரு நாள் விவசாயி!'

‘‘உங்க எல்லாருக்கும் அடுத்து ஒரு முக்கியமான வேலை. இங்க இருக்கிற மகோகனி, வேங்கை, குமிழ்தேக்கு மரங்களை எல்லாம் கவாத்து பண்ணப்போறோம். கவாத்து செஞ்சாதான் மர வேலைப்பாடுகளுக்கான மரங்கள் நல்லா திரட்சியா, உயரமா வளரும். செழிப்பில்லாத கிளைகள், பூச்சித் தாக்கிய கிளைகள், வளர்ச்சி இல்லாத சிறுசிறு கிளைகள் எல்லாத்தையும் வெட்டி நீக்கிடணும். இல்லனா, சத்துக்கள் விரயமாகி மரத்தோட வளர்ச்சி குறையும். கிளைகளை வெட்டும்போது மரத்துல காயம் படக்கூடாது. அதாவது, பள்ளம் விழக்கூடாது. பள்ளம் விழுந்தா பொந்துகள் உருவாகிடும். அந்த மரத்துக்கு விலை கிடைக்காது. கிளை வெட்டுன இடத்துல சாணி பூசணும்’’என்று சொல்லி, ஒரு கிளையை வெட்டிக் காட்டிய திருநாவுக்கரசிடமிருந்து ஆர்வத்தோடு அரிவாளை வாங்கி கவாத்து செய்யத் தொடங்கினார் ரவி.

கவாத்து முடிந்ததும், ஒருநாள் விவசாயிகளை கொய்யா மரங்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார். கொய்யா வாசம் ‘கமகம’வென அந்தப் பகுதி முழுக்க வியாபித்திருந்தது. பழுத்துக் கிடந்த பழங்களைப் பறிப்பதில் மும்முரமானார்கள், ஒருநாள் விவசாயிகள். கோபிநாத், துரைமுருகன், தங்கபாலு ஆகியோர் கிளைகளை வேகமாக வளைத்து பழங்களைப் பறித்தனர். ‘‘இதுமாதிரி எல்லாம் கிளைகளை வளைச்சா முறிஞ்சிப் போயிடும்’’ எனச் சொல்லிய திருநாவுக்கரசு, லாகவமாகப் பறித்துக் காண்பித்தார். 

கொய்யாப் பழத்தைக் கொறித்துக் கொண்டே, ‘‘பழத்தோட உள்பகுதி வெள்ளையா இருந்தா, அது ரசாயனத்துல விளைஞ்சது... சிகப்பா இருந்தா அது இயற்கை விவசாயத்துல விளைஞசதுனு சென்னையில உள்ள ஆர்கானிக் கடைகள்ல சொல்றாங்க. இது உண்மையா?” எனக் கேட்டார், தங்கபாலு.

‘‘சிவப்பா இருக்கிறதும் வெள்ளையா இருக்கிறதும் ரகத்தைப் பொறுத்த விஷயம். இந்த கலர் இருந்தாத்தான் இயற்கைனெல்லாம் சொல்ல முடியாது. இது இயற்கைக் கொய்யாதான். ஆனா, வெள்ளையாத்தான இருக்கு. இந்த மரங்களுக்கு ஆரம்ப காலத்துல அமுதக்கரைசல் கொடுத்ததோட சரி. இப்போ தானாத்தான் விளைஞ்சுக்கிட்டு இருக்கு” என்றார், திருநாவுக்கரசு. 

ஆண்டுக்கு 150 காய்கள்!

அடுத்து தென்னையை நோக்கி பேச்சு திரும்பியது. ‘‘அய்யா, பொதுவா எத்தனை வருசத்துல தென்னை

'ஒரு நாள் விவசாயி!'

காய்ப்புக்கு வரும்? இங்க எத்தனை மரங்கள் இருக்கு. வருஷத்துக்கு எவ்வளவு காய்க்கும்?” என ஆளுக்கொரு கேள்விகளை அடுக்க... ‘‘நாட்டு ரகங்கள் எட்டு அல்லது ஒன்பது வருஷத்துல காய்ப்புக்கு வரும்.

100 வருஷம் வரைக்கும் கூட காய்ச்சிக்கிட்டே இருக்கும். நவீன ரகங்கள்ல, குட்டை ரகம் மூணு வருஷத்துலயும், நெட்டை ரகம் ஆறு வருஷத்துலயும் காய்ப்புக்கு வரும். ஆனா, நவீன ரகங்கள் 50 அல்லது 60 ஆண்டுகளுக்குத்தான் பலன் கொடுக்கும். என்னோட தோட்டத்துல உள்ளதெல்லாம் நெட்டை ரகம். வரிசைக்கு வரிசை 48 அடி, மரத்துக்கு மரம் 8 அடி இடைவெளியில நட்டிருக்கோம். வேலி ஓரங்கள்லயும் தென்னை இருக்கு. இந்த 18 ஏக்கர் தோட்டத்துல மொத்தம் 2 ஆயிரம் தென்னை மரங்கள் இருக்கு. இதெல்லாம் வெவ்வேறு காலகட்டங்கள்ல நடவு செஞ்சது. ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 150 காய்கள் வரை கிடைக்குது.

சொன்னா ஆச்சர்யப்படுவீங்க... இப்போ ஆறேழு வருஷமா தென்னைக்கு தொழுவுரம் கூட வைக்கிறது இல்லை. சின்னச் சின்ன குழிகளை வெட்டி அதுல இலைதழைகளைப் போட்டு தண்ணீர் பாய்ச்சுறோம் அவ்வளவுதான். தென்னை உள்பட எல்லா மரங்களுமே நல்ல செழிப்பா இருக்கு. முன்னாடி எங்கக்கிட்ட 20 மாடுகள் இருந்துச்சு. அப்போ அமுதக்கரைசல் தயாரிச்சு தினமும் செழிம்பா மரங்களுக்குக் கொடுத்தோம். அதனால, அப்பவே மண் நல்லா வளமாகிடுச்சு. இப்ப எங்கக்கிட்ட 2 மாடுகள்தான் இருக்கு. அதோட கழிவுகள் மீன்குளத்துக்கே சரியா இருக்கு” என்ற திருநாவுக்கரசு, அனைவரையும் மீன் வளர்ப்புக் குளத்துக்கு அழைத்துச் சென்றார்.

அனைவருக்கும் வலை வீசி மீன் பிடிக்கும் கலையைக் கற்றுக் கொடுத்தார், திருநாவுக்கரசின் தம்பி சரவணன்.

‘‘இந்தக் குளத்தோட மொத்த பரப்பளவு ஒண்ணே முக்கால் ஏக்கர். ஏக்கருக்கு மூவாயிரம் குஞ்சுகள்னு விடுவோம். தீவனத்துக்குனு பெருசா எந்தச் செலவும் செய்றதில்லை. தோட்டத்துல கிடைக்கிற இலைதழைகள், வீட்ல மிச்சமான சோறு, தவிடு, மாட்டுச் சாணம்னுதான் போடுறோம். குஞ்சுகளை குளத்துல விட்ட ஒன்பது மாசத்துல நல்லா வளந்துடும். அப்பறம் பிடிச்சு விற்பனை செய்துடுவோம். ஒண்ணே முக்கால் ஏக்கர் குளத்துல 2 ஆயிரம் கிலோவுக்கு மேல மகசூல் கிடைக்கும்’’என்ற சரவணனைத் தொடர்ந்தார் திருநாவுக்கரசு.

'ஒரு நாள் விவசாயி!'

‘‘பண்ணையில எது மிகவும் தாழ்வான பகுதியோ, அங்கதான் மீன் குளத்தை அமைக்கணும். அப்போதான் மழை தண்ணீர் தானே வடிஞ்சு குளத்துக்கு வரும். குளம் நிரம்பினாலும் மீன்கள் வெளியில போகாது. வண்டல் மண் பகுதியா இருந்தா மீன் குளம் அமைக்க வசதியா இருக்கும். வண்டல் மண், தண்ணீரை பூமிக்கடியில போகவிடாம தடுத்து வெச்சிக்கும். நுண்ணுயிரிகளும் அதிகம் இருக்கும். வண்டல் மண் இல்லைனாலும் கவலைப்பட வேண்டியதில்லை.

ஏக்கருக்கு 10 டன் ஈர சாணத்தோடு ரெண்டு லோடு களிமண்ணையும் கலந்து போட்டு, 7 அல்லது 8 சால் உழவு ஓட்டிட்டா போதும்’’என்று திருநாவுக்கரசு சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘மதிய உணவு தயார்’ என்று அவருக்குத் தகவல் வந்தது. களைப்பாக இருந்த அனைவரும் உடனே கிளம்ப,  தடபுடலாக நடந்தது, விருந்து.

மதிய உணவுக்கு பிறகு, செம்பியநல்லூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்மங்கலம் கிராமத்தில் உள்ள பண்ணைக்கு அழைத்துச் சென்றார், திருநாவுக்கரசு. ‘‘இதுவும் எங்களோட பண்ணைதான். இதோட மொத்த பரப்பளவு 32 ஏக்கர். இங்கயும் பல வகையான மரங்கள் இருக்கு. இங்க நெல், எள் சாகுபடி எல்லாம் நடக்குது. இந்தப் பண்ணையை என் தம்பி கல்யாணசுந்தரம் கவனிச்சிக்கிறாரு” என அவரை அறிமுகம் செய்து வைத்தார். நம்முடைய ஒருநாள் விவசாயிகள் நெல், எள் சாகுபடித் தொழில்நுட்பங்கள் குறித்து அடுக்கடுக்கான கேள்வி கணைகளைத் தொடுக்க, அனைத்துக்கும் அமைதியாக சிரித்த முகத்தோடு பதில் அளித்தார், கல்யாணசுந்தரம்.

சூரியன் மறைந்து இருள் கவ்வத் தொடங்கியதும், பிரிய மனம் இல்லாமல் விடை பெற்றுக் கிளம்பினார்கள் ஒரு நாள் விவசாயிகள்.

கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: கே.குணசீலன்